தேடுதல்

வத்திக்கானில் சர்வதேச கத்தோலிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வலையமைப்பினரிடம் உரையாற்றிய திருத்தந்தை அவர்கள். வத்திக்கானில் சர்வதேச கத்தோலிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வலையமைப்பினரிடம் உரையாற்றிய திருத்தந்தை அவர்கள்.  (@Vatican Media)

செயற்கை நுண்ணறிவு மனித மாண்பையும் பொது நலனையும் காக்கும் கருவியாக இருக்க வேண்டும் – திருத்தந்தை

செயற்கை நுண்ணறிவு மனித மாண்பைப் பாதுகாத்து, பொது நலனுக்குச் சேவை செய்யும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

அதிகாரம், செயல்திறன் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை மனித மாண்பை மறைத்துவிடும் புதிய “பாபேல் கோபுரத்தை” உருவாக்கும் நிலைக்குச் செல்லக்கூடாது என்றும், ஒவ்வொரு மனிதரின் முழுமையான வளர்ச்சிக்கும் தொழில்நுட்பம் சேவை செய்ய வேண்டும் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

“மனித மாண்பும் செயற்கை நுண்ணறிவும்: சவால்கள், வாய்ப்புகள் மற்றும் கட்டுப்பாடு” என்ற தலைப்பில் இடம்பெற்ற அனைத்துலக கத்தோலிக்க சட்டமியற்றுவோர் வலையமைப்பின் உறுப்பினர்களின் ஆண்டு கூட்டத்தில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, செயற்கை நுண்ணறிவு மனித மாண்பைப் பாதுகாத்து, பொது நலனை மேம்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சி மனிதகுலத்தின் முன் ஒரு முக்கியமான அறநெறிக் கேள்வியை எழுப்புவதாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, தொழில்நுட்பத்தால் எதைச் செய்ய முடியும் என்பதைக் காட்டிலும், எதைச் செய்ய வேண்டும் என்பதே முக்கியமான கேள்வி என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் செயற்கை நுண்ணறிவுக்கான பொறுப்பான சட்டங்களை உருவாக்குமாறு சட்டமியற்றுவோரை கேட்டுக்கொண்ட திருத்தந்தை, தனியுரிமை, அடிப்படை உரிமைகள், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதுடன், தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு மற்றும் சுரண்டலைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தன்னாட்சி மேற்பார்வை , வலுவான சட்டக் கட்டமைப்புகள் மற்றும் பொறுப்பான அரசியல் தலைமை அவசியம் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, செயற்கை நுண்ணறிவு ஏழை நாடுகளை செல்வந்த நாடுகளின் மீது மேலும் சார்ந்திருக்கச் செய்து, புதிய வகையான பொருளாதார அல்லது தொழில்நுட்ப காலனியாதிக்கத்தை உருவாக்கும் ஆபத்து உள்ளதாகவும் திருத்தந்தை கவலை தெரிவித்தார்.

குடும்பம் மனிதநேயத்தின் முதல் பள்ளி என்று குறிப்பிட்ட திருத்தந்தை, நம்பிக்கை, தாராள மனப்பான்மை, உரையாடல் மற்றும் அன்பு ஆகியவற்றை குடும்பத்திலேயே மனிதர்கள் முதலில் கற்றுக்கொள்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

“மனிதகுலத்தைத் தாழ்த்தும் செயற்கை நுண்ணறிவு அல்ல; ஞானத்தால் வழிநடத்தப்படும் மனித அறிவும், மனச்சாட்சியால் வழிநடத்தப்படும் அரசியல் அதிகாரமும், அன்பால் வழிநடத்தப்படும் தொழில்நுட்பமும் உலகிற்குத் தேவை” என்று கூறிய திருத்தந்தை, அப்போதுதான் செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கும் பொது நலனுக்கும் பணியாற்றும் கருவியாக மாறும் என்று தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

21 ஆகஸ்ட் 2026, 12:57