தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அசிசி நகருக்கு மேற்கொண்ட மேய்ப்புப் பயணம் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அசிசி நகருக்கு மேற்கொண்ட மேய்ப்புப் பயணம்  (@Vatican Media)

அசிசியில் திருத்தந்தையை வரவேற்ற பிரான்சிஸ்கன் மாநிலத் தலைவர்!

அசிசியில் இளைஞர்களைச் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை, உம்ப்ரியா மற்றும் சார்டீனியா பகுதிகளின் பிரான்சிஸ்கன் சபை மாநிலத் தலைவர் அருள்தந்தை மார்கோ வியானெல்லி அவர்கள் வரவேற்றார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

அசிசியில் இளைஞர்களுடனான திருத்தந்தையின் சந்திப்பு தொடங்கியபோது, உம்ப்ரியா மற்றும் சார்டீனியா பகுதிகளின் சிறார் பிரான்சிஸ்கன் சபை மாநிலத் தலைவரான அருள்தந்தை மார்கோ வியானெல்லி அவர்கள், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை அன்புடன் வரவேற்றார். இந்தச் சந்திப்பு புனித வானதூதர்களின் மரியா பேராலயத்திற்கு முன்புள்ள சதுக்கத்தில் நடைபெற்றது.

திருத்தந்தையை வரவேற்று உரையாற்றிய அருள்தந்தை வியானெல்லி அவர்கள், அசிசியை “ஆசீர்வதிக்கப்பட்ட நிலம்” என்று வர்ணித்தார். எளிமை, சகோதரத்துவம் மற்றும் அமைதி ஆகியவற்றின் வழியாக இங்கு நற்செய்தி தொடர்ந்து வாழ்ந்து காட்டப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

புனித பிரான்சிஸ் அசிசியாரால் மிகவும் நேசிக்கப்பட்ட போர்சியுங்கோலா சிற்றாலயம், நற்செய்தியைத் தழுவி, அமைதியின் கருவிகளாக மாறுவதற்கு மக்களைத் தூண்டும் புனித இடமாகத் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போர்சியுங்கோலாவைச் சுற்றி ஒன்றுகூடி, நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் சகோதரத்துவத்தின் பயணத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

சிறந்த உலகைக் கட்டியெழுப்புவதில் இளைஞர்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல், செயல்பாட்டுடன் பங்கேற்பவர்களாக மாற இந்தச் சந்திப்பு ஊக்கமளித்ததாக அவர் வலியுறுத்தினார்.

மேலும், 1226ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் நாள் புனித பிரான்சிஸ் “சகோதரி மரணத்தை” வரவேற்றதை நினைவுகூர்ந்த அவர், அமைதி மற்றும் சகோதரத்துவம் குறித்த புனித பிரான்சிஸின் செய்தி இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது என்று எடுத்துரைத்தார்.

இறுதியாக, திருத்தந்தை அவர்களின் வருகைக்கு நன்றி தெரிவித்த அருள்தந்தை வியானெல்லி அவர்கள், அவரது உடனிருப்பு பிரான்சிஸ்கன் குடும்பத்தினருக்கும் இளைஞர்களுக்கும் அமைதியின் நற்செய்திக்கு நம்பகமான சாட்சிகளாக வாழ்வதற்கு வலிமையையும் ஊக்கத்தையும் அளிக்கிறது என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

07 ஆகஸ்ட் 2026, 13:13