தேடுதல்

நகரங்களில் நற்செய்தி அறிவிப்பிற்காக செபிக்க அழைக்கும் திருத்தந்தை!

ஆகஸ்ட் மாத இறைவேண்டல் கருத்தில், "நகரங்களில் நற்செய்தி அறிவிப்பிற்காக" உலகெங்கிலும் உள்ள நம்பிக்கையாளர்கள் அனைவரும் இறைவேண்டல் செய்யுமாறு திருத்தந்தை அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். தனிமையும் அலட்சியமும் அதிகரித்து வரும் நகர வாழ்வில், அன்பும் எளிமையும் நிறைந்த செயல்களின் வழியாக நற்செய்தியை அறிவித்து, சகோதரத்துவத்தை வளர்க்கும் திருஅவையாக இறைமக்கள் திகழ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

"நகரங்களில் நற்செய்தி அறிவிப்பிற்காக" உலகெங்கிலும் உள்ள நம்பிக்கையாளர்கள் அனைவரும் இறைவேண்டல் செய்யுமாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூலை 31, வெள்ளியன்று, வெளியிட்டுள்ள ஆகஸ்ட் மாதத்திற்கான தனது இறைவேண்டல் கருத்தில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, எங்கள் தெருக்களிலும் சதுக்கங்களிலும் நடந்து செல்லும் நல்ல ஆயரே, உயரமான கட்டடங்களிலும் எளிய குடியிருப்புப் பகுதிகளிலும் நுழைந்து, சத்தமும் அவசரமும் நிறைந்த வாழ்க்கையின் நடுவே வாழ்வின் அர்த்தத்தைத் தேடும் கோடிக்கணக்கான மக்களுடன் அமைதியாக உடனிருந்து வழிநடத்தும்" என்று இறைவேண்டல் செய்துள்ளார்.

நகரங்கள் மனிதர்களுக்கு சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் இடங்களாக இருக்க வேண்டியவை என்றாலும், அவை பல சமயங்களில் அடையாளமற்ற தனிமையும் உறவின்மையும் நிறைந்த இடங்களாக மாறிவிடுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நகர வாழ்விலேயே நற்செய்தியை அறிவிப்பதற்கான வளமான நிலத்தை கண்டறியும் புதிய பார்வையை வளர்த்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

வார்த்தைகளால் மட்டும் அல்லாமல், எளிமையான மற்றும் அன்பான செயல்களின் வழியாக வெளிப்படும் விசுவாசத்தை இறைமக்கள் வாழ வேண்டும் என்று இறைவேண்டல் செய்த திருத்தந்தை, மேலும், அலட்சியமும் தனிமையும் நிலவும் இடங்களில் உடனிருப்பதன் மூலம் சகோதரத்துவத்தை வளர்த்து, சமூகத்தின் எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களைத் தேடிச் சென்று நற்செய்தியை அறிவிக்கும் திருஅவையாக இறைமக்கள் திகழ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 45 விழுக்காடு பேர் நகரப் பகுதிகளில் வாழ்கின்றனர். வேகமான நகரமயமாக்கல் காரணமாக மக்கள் அதிக அளவில் நகரங்களில் குவிந்து வாழ்வதால், பல சமூக மற்றும் மனித உறவுச் சவால்கள் உருவாகியுள்ளன. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தனிமை உணர்வு, அவர்களின் மனநலனில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் இந்த இறைவேண்டல் கருத்து நினைவூட்டுகிறது.

திருத்தந்தையின் உலகளாவிய செப வலைப்பின்னல்

1844 ஆம் ஆண்டு "அப்போஸ்தலர் செப இயக்கம்" (Apostleship of Prayer) என்ற பெயரில் தொடங்கப்பட்ட திருத்தந்தையின் உலகளாவிய செப வலைப்பின்னல், இயேசு சபையினரிடம் ஒப்படைக்கப்பட்ட திருப்பீடப் பணியாகும்.

2020 ஆம் ஆண்டு டிசம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதனை வத்திக்கான் அறக்கட்டளையாக நிறுவினார். பின்னர், 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அதன் இறுதி சட்டதிட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

தற்போது 92-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த செப வலைப்பின்னல், 2 கோடியே 20 இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ஆன்மிகக் குடும்பமாக விளங்குகிறது. மனிதகுலமும் திருஅவையும் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுக்காக, ஒவ்வொரு மாதமும் திருத்தந்தை வழங்கும் செபக் கருத்துகளை மையமாகக் கொண்டு இறைமக்கள் செபிக்க இந்த இயக்கம் அழைப்பு விடுத்து வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

01 ஆகஸ்ட் 2026, 13:07