தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ   (ANSA)

நவம்பரில் உருகுவே, அர்ஜென்டினா, பெரு நாடுகளுக்கு திருத்தந்தை திருத்தூதுப் பயணம்!

2026ஆம் ஆண்டு நவம்பர் 6 முதல் 17 வரை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பெரு நாடுகளுக்கு 11 நாள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

2026ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 6 முதல் 17ஆம் நாள் வரை நடைபெறவுள்ள இப்பயணத்தில், நவம்பர் 6 முதல் 8 வரை உருகுவேயின் மொன்டிவிடியோ, பய்சாந்தூ மற்றும் புளோரிடா நகரங்களுக்கும், நவம்பர் 8 முதல் 11 வரை அர்ஜென்டினாவின் புவனஸ் ஐரஸ், கோர்தோபா மற்றும் லுஹான் நகரங்களுக்கும், நவம்பர் 11முதல் 17 வரை பெருவின் லீமா, சிக்லாயோ, குஸ்கோ மற்றும் புகால்பா நகரங்களுக்கும் திருத்தந்தை பயணம் மேற்கொள்வார்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகக் குறைந்த கத்தோலிக்க மக்கள்தொகையைக் கொண்ட நாடான உருகுவேயில், மொத்த மக்கள்தொகையில் 36 விழுக்காடு மட்டுமே கத்தோலிக்கர்கள் உள்ளனர்.

அர்ஜென்டினா, மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தாய்நாடாகும். புவனஸ் ஐரஸைச் சேர்ந்த அவருக்கு, தனது 12 ஆண்டு திருத்தந்தைப் பணிக்காலத்தில் தாய்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பெரு நாடு, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் மறைப்பணியுடன் நெருங்கிய தொடர்புடைய நாடாகும். 1980களில் மறைப்பணியாளராக அந்நாட்டிற்கு முதன்முதலில் சென்ற அவர், பின்னர் ஆயராகப் பணியாற்றியதோடு, பெரு நாட்டின் குடியுரிமையையும் பெற்றார்.

இலத்தீன் அமெரிக்காவிற்கான இந்த 11 நாள் திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை பத்து நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது அவரது ஆறாவது அனைத்துலக திருத்தூதுப் பயணமாகும். இப்பயணத்தின் விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் வெளியிடப்படும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

06 ஆகஸ்ட் 2026, 13:32