ஜெனாசானோ நல்ல ஆலோசனையின் அன்னை மரியா திருத்தலத்திற்கு திருத்தந்தை வருகை!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
உரோம் நகரிலிருந்து ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜெனாசானோ நல்ல ஆலோசனையின் அன்னை மரியா திருத்தலத்திற்கு, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் செப்டம்பர் 7ஆம் நாள் மாலை 6 மணிக்கு வருகை தரவுள்ளார். தூய கன்னி மரியாவின் பிறப்பு விழாவுக்கு முந்தைய நாளில் நடைபெறும் திருப்பலிக்கு அவர் தலைமை தாங்கவுள்ளார்.
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர், 2025 மே 10ஆம் நாள் திருத்தந்தை முதன்முறையாக இத்திருத்தலத்திற்கு தனிப்பட்ட முறையில் வருகை தந்தார். அகுஸ்தீனியத் துறவியாக இருந்த காலத்திலிருந்தே இத்திருத்தலத்துடன் அவர் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளார்.
மேலும், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளான 2025 மே 8ஆம் தேதி,புனித பேதுரு பெருங்கோவிலின் நடுமாடத்திலிருந்து தோன்றுவதற்கு முன்பு, அப்போஸ்தலிக்க அரண்மனையின் பவுலின் சிற்றாலயத்தில் அமைந்துள்ள நல்ல ஆலோசனையின் அன்னை மரியாவின் திருவுருவத்தின் முன் அவர் இறைவேண்டலில் ஈடுபட்டார்.
14ஆம் நூற்றாண்டிலிருந்து அகுஸ்தீனியர்களின் பொறுப்பில் உள்ள இத்திருத்தலம், 1467ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாள் அன்னை மரியாவின் திருவுருவம் அதிசயமாகத் தோன்றியதாகக் கூறப்படும் நிகழ்வால் புகழ்பெற்றது.
திருத்தந்தை அவர்களின் வருகையின்போது, அன்னை மரியாவின் திருவுருவத்தின் முன் அவர் இறைவேண்டல் செய்வதைச் சித்தரிக்கும் ஓவியம் ஒன்றும் திறந்து வைக்கப்பட உள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
