தேடுதல்

2025 நவம்பரில் அசிசியில் திருத்தந்தை பதினான்காம் லியோ (கோப்புப் படம்) 2025 நவம்பரில் அசிசியில் திருத்தந்தை பதினான்காம் லியோ (கோப்புப் படம்)  

அசிசியில் பிரான்சிஸ்கன் இளையோர் சந்திப்பை நிறைவு செய்யும் திருத்தந்தை!

இத்தாலியின் அசிசி நகரில் இடம்பெறும் "GO! Franciscan Youth Meeting" என்ற பிரான்சிஸ்கன் இளையோர் சந்திப்பை நிறைவு செய்வதற்காக, திருத்தந்தை அவர்கள் ஆகஸ்ட் 6 அன்று அசிசிக்குச் செல்கிறார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

இத்தாலியின் அசிசி நகரில் ஆகஸ்ட் 3 முதல் 6 வரை இடம்பெறும் நான்கு நாள் "GO! Franciscan Youth Meeting" என்ற பிரான்சிஸ்கன் இளையோர் சந்திப்பை நிறைவு செய்வதற்காக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆகஸ்ட் 6 அன்று அசிசிக்குச் செல்கிறார். புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வும் ஆன்மீகமும் மையமாக இடம்பெறும் இந்நிகழ்வில், ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்து 18 முதல் 33 வயதுக்குட்பட்ட 2,150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.

தமது பயணத்தை, தேவதூதர்களின் அன்னை மரியாள் பேராலயத்தில் அமைந்துள்ள போர்சியுங்குலா சிற்றாலயத்தில் செபத்துடன் தொடங்கும் திருத்தந்தை, பின்னர் ஐரோப்பாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். அதன் பின்னர், ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றி, சாதாரண வாழ்க்கையில் சமரசம் செய்து கொள்ளாமல், பெரிய கனவுகளோடும் உறுதியான நம்பிக்கையோடும் பிறருக்காக வாழ தங்களை அர்ப்பணிக்குமாறு இளைஞர்களை ஊக்குவிப்பார்.

மேலும், இந்த நான்கு நாள் சந்திப்பில், அமைதி, மன்னிப்பு, இறையழைப்பு, கிறிஸ்தவ மறைப்பணி போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள், நற்கருணை ஆராதனை மற்றும் புனித பிரான்சிஸ் அசிசியாரின் உண்மையான வாழ்க்கை மற்றும் போதனைகளை எடுத்துரைக்கும் கண்காட்சிகளும் இடம்பெறுகின்றன.

இளைஞர்களின் சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட "Missionary Charter" நிறைவு நிகழ்வில் வெளியிடப்படும். இது, தங்கள் சொந்த சமூகங்களில் மறைப்பணியைத் தொடர்ந்து முன்னெடுக்க இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஆவணமாக அமையும்.

புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வு, இறைநம்பிக்கையாளர்கள் மட்டுமன்றி அனைவருக்கும் நம்பிக்கை, துணிவு மற்றும் உயர்ந்த எதிர்காலக் கனவுகளை ஊட்டுவதுபோல், இந்தச் சந்திப்பும் இளைஞர்கள் தங்கள் வாழ்வின் நோக்கத்தை மீண்டும் கண்டறிந்து, இறைவனை நாடும் புதிய உற்சாகத்தைப் பெற உதவும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

04 ஆகஸ்ட் 2026, 13:28