இறைவனின் அழைப்பைக் கேட்டு உறுதியுடன் அவரைப் பின்பற்ற ஈக்வடார் இளைஞர்களுக்கு திருத்தந்தை அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
இயேசு கிறிஸ்துவே மனித வாழ்விற்கு உண்மையான அர்த்தத்தை அளிப்பவர் என்று வலியுறுத்திய திருத்தந்தை, “ஆண்டவரின் அழைப்பைக் கேட்டு, உறுதியுடனும் துணிவுடனும் அவரைப் பின்பற்றுங்கள்” என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஈக்வடார் நாட்டில் இபாரா நகரில் "உலகை நான் வென்றுவிட்டேன்; துணிவுடன் இருங்கள்" (யோவான் 16:33) என்ற கருப்பொருளில் இடம்பெற்று வரும் 7வது தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு அனுப்பிய காணொளிச் செய்தியில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, “இயேசு கிறிஸ்துவைச் சந்திக்கும் அனுபவம் நம் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறது என்றும், அது அவரது அன்பிற்கும் இரக்கத்திற்கும் சாட்சிகளாக வாழும் வலிமையை நமக்குத் தருகிறது என்றும் கூறினார்.
மேலும், இளைஞர்கள் திருஅவையின் மதிப்புமிக்க செல்வம் என்று வலியுறுத்திய திருத்தந்தை, “திருஅவைக்கு உங்கள் மகிழ்ச்சி, உங்கள் துணிவு, உங்கள் விசுவாசச் சாட்சி தேவைப்படுகிறது. உங்கள் வாழ்வின் சாட்சியின் வழியாக இன்னும் பலர் கிறிஸ்துவை அறிந்து கொள்ள முடியும். எனவே, அவரது அன்பு உங்களை மாற்றியமைக்க அனுமதியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, மன்னிப்பு, ஒப்புரவு, அமைதியின் தூதர்களாக இளைஞர்கள் வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, ஈக்வடார் இளைஞர்களை அன்னை மரியாளின் பாதுகாப்பில் ஒப்படைத்து, இறைவனின் திட்டத்தை ஏற்று வாழ அவர் முன்மாதிரியாக இருப்பாராக என்று இறைவேண்டல் செய்து காணொளிச் செய்தியை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
