டிஜிட்டல் தகவல்தொடர்பு உண்மை மற்றும் மனித மாண்பின் கருவியாக அமைய வேண்டும்: திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
டிஜிட்டல் தகவல்தொடர்பு, உண்மை, மனித மாண்பு, அமைதி மற்றும் படைப்பைப் பாதுகாக்கும் பணிக்கு சேவை செய்ய வேண்டும் என்று, ருவாண்டாவின் கிகாலியில் இடம் பெற்று வரும் SIGNIS உலக மாநாட்டில் பங்கேற்றுள்ள கத்தோலிக்க தகவல்தொடர்பாளர்களுக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
திருத்தந்தையின் சார்பில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிடப்பட்டு அனுப்பியுள்ள செய்தியில், இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, டிஜிட்டல் கருவிகளும் தகவல்தொடர்பு உத்திகளும் உண்மையைத் தேடுவதையும், ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் மதிப்பதையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மாநாட்டில் இடம்பெறும் கலந்துரையாடல்கள், மனித குடும்பம் முழுவதின் பொதுநலனை மேம்படுத்தும் தகவல்தொடர்பு தளங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
இன்றைய உலகில் டிஜிட்டல் தொழில்நுட்பமும் இணையமும் மனித வாழ்வின் பல அம்சங்களை வடிவமைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, தமது "மகத்தான மானுடம் " திருமடலில் கூறியுள்ளதுபோல், இணையவழி தகவல்தொடர்பு என்பது தகவல்களைப் பரிமாறும் ஒரு கருவி மட்டுமல்ல; அது பண்பாட்டை உருவாக்குவதோடு, உலகைப் பற்றிய மனிதர்களின் பார்வையையும், சமூகத்தின் கூட்டு மனசாட்சியையும் ஆழமாக வடிவமைக்கிறது என்று எடுத்துக்காட்டியுள்ளார்.
"பண்பாட்டு நல்லிணக்கத்திற்கும் சுற்றுச்சூழல் நல்வாழ்விற்குமான டிஜிட்டல் தகவல்தொடர்பு" என்ற மாநாட்டின் கருப்பொருளை நடைமுறையில் செயல்படுத்தும் வழிகளை ஆராயுமாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, உண்மையை அடிப்படையாகவும், ஒவ்வொரு மனிதரின் மாண்பை மதிப்பதை மையமாகவும் கொண்ட தகவல்தொடர்பு உத்திகள் உருவாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய தகவல்தொடர்பு, நற்செய்தியின் ஒன்றிப்பு மற்றும் அமைதி ஆகிய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் பண்பாட்டை உருவாக்குவதோடு, சுற்றுச்சூழலைப் பொறுப்புடன் பாதுகாக்கும் மனப்பான்மையையும் வளர்க்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரையும் திருஅவையின் அன்னையாகிய மரியாவின் பரிந்துரையில் ஒப்படைத்த திருத்தந்தை, அவர்களின் பணிகள் நிலையான பலன்களைத் தர வேண்டுமென இறைவேண்டல் செய்து திருத்தூது ஆசீரை வழங்கி செய்தியை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
