பிளவுகள் நிறைந்த உலகில் நல்லிணக்கத்தின் இறைவாக்கினர்களாக திகழ கொலம்பஸ் மாவீரர்களுக்கு திருத்தந்தை அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
உலகம் பிளவுகளாலும் கருத்து மோதல்களாலும் அதிகம் குறிக்கப்படுகின்ற இக்காலத்தில், உரையாடலின் வழியாக ஒற்றுமையை வளர்த்து, நல்லிணக்கத்தை உருவாக்கும் "நல்லிணக்கத்தின் இறைவாக்கினர்களாக" விளங்குமாறு, கொலம்பஸ் மாவீரர்கள் (Knights of Columbus) அமைப்பினருக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 04, செவ்வாயன்று, அமெரிக்காவின் கொலராடோ மாநிலம், டென்வரில் "ஒருவரில் நாம் அனைவரும் ஒன்றாய் இருக்கிறோம்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, இடம்பெற்ற கொலம்பஸ் மாவீரர்கள் அமைப்பின் 144ஆவது உயர்மட்ட மாநாட்டிற்கு அனுப்பிய காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, ஒற்றுமையும் அன்புப் பணியும் அந்த அமைப்பின் அடிப்படைப் பண்புகள் என்று வலியுறுத்தினார்.
இறுதி இராவுணவின் போது, "அவர்கள் அனைவரும் ஒன்றாயிருக்கட்டும்" என்று இயேசு கூறியதை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஒற்றுமை என்பது ஒவ்வொரு தலைமுறை நம்பிக்கையாளர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ள இறைக்கொடை என்றும், அது தானாக நிலைத்திருப்பதில்லை; மாறாக, நேர்மையான மற்றும் தாழ்மையான உரையாடலின் வழியாக வளர்க்கப்பட வேண்டியது என்றும் குறிப்பிட்டார்.
குடும்பங்கள், பங்குகள் மற்றும் தாங்கள் வாழும் சமூகங்களில் கிறிஸ்து விரும்பிய நல்லிணக்கத்திற்கு சான்று பகருமாறும் கொலம்பஸ் மாவீரர்கள் அமைப்பினரை திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
மேலும் தேவையில் இருப்போருக்குச் செய்யப்படும் அன்புப் பணிகள், மனிதத் துயரங்களுக்கு அளிக்கப்படும் பதிலாக மட்டுமல்லாமல், சகோதரத்துவத்தை வளர்க்கவும், கிறிஸ்தவ வாழ்வின் மையமான ஒன்றிப்பை வலுப்படுத்தவும் உதவுகின்றன என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.
கொலம்பஸ் மாவீரர்கள் அமைப்பின் நிறுவனர் அருளாளர் மைக்கேல் மெகிவ்னி அவர்கள் தொடங்கிய பணியை தொடர்ந்து, பிறக்காத குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள், போர் மற்றும் மனித வர்த்தகத்தினால் பாதிப்புக்குள்ளானோர், ஏழைகள், நலிவுற்றோர் மற்றும் சமூகத்தின் ஓரங்களில் வாழும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் கொலம்பஸ் மாவீரர்களை திருத்தந்தை பாராட்டினார்.
இறுதியாக திருஅவையின் அன்னையாகிய மரியா மற்றும் அருளாளர் மைக்கேல் மெகிவ்னியின் பரிந்துரையில் மாநாட்டின் பணிகளை ஒப்படைத்த திருத்தந்தை, கொலம்பஸ் மாவீரர்கள் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் திருத்தூது ஆசீரை வழங்கி காணொளிச் செய்தியை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
