இறைவனின் அன்பிலிருந்து எவரையும் எந்தச் சிறையும் பிரிக்க முடியாது – திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
நற்செய்தியால் ஒளியூட்டப்பட்ட மனச்சாட்சியை எந்தச் சங்கிலியாலும் சிறைப்படுத்த முடியாது என்றும், ஆண்டவர் தம் பிள்ளைகளுக்காக ஆயத்தப்படுத்தும் விடியலை எந்த இரவும் தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, இறைவனின் அன்பிலிருந்து எவரையும் எந்தச் சிறையும் பிரிக்க முடியாது” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அல்பேனியா நாட்டின் ஸ்பாக் (Spaç) பகுதியில் அமைந்திருந்த முன்னாள் சிறை முகாமில் துன்புற்று உயிரிழந்தவர்களின் நினைவாக, ஜூலை 31, வெள்ளிக்கிழமை திருப்பலியை நிறைவேற்றிய 97 வயதான கர்தினால் எர்னெஸ்ட் சிமோனி அவர்களுக்கு அனுப்பிய செய்தியில் திருத்தந்தை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் (8:35–39) இறைவார்த்தைகளை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அல்பேனிய மக்களின் வரலாற்றில் மிகுந்த வேதனையைப் பதித்த இடங்களில் ஒன்றாக ஸ்பாக் சிறைமுகாம் திகழ்கிறது என்றும், அநீதியின் சிலுவையைச் சுமந்த எண்ணற்றோரின் இரத்தம் அந்த மண்ணை நனைத்து, விசுவாசம், துணிவு, நம்பிக்கை ஆகியவற்றின் அமைதியான சாட்சியாக மாற்றியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கம்யூனிச ஆட்சிக் காலத்தில் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த கர்தினால் சிமோனி அவர்கள், அந்தக் காலத்தின் பெரும்பகுதியை ஸ்பாக் முகாமிலேயே கட்டாய உழைப்பில் கழித்தார் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அங்கு உயிரைப் பணயம் வைத்து இரகசியமாகத் திருப்பலியை நிறைவேற்றியதையும், பாவசங்கீர்த்தனங்களைக் கேட்டு நற்கருணையை வழங்கியதையும் சுட்டிக்காட்டினார்.
அந்தக் காலத்தில் அடையாளம் தெரியாத கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டு, யாராலும் அஞ்சலி செலுத்தப்பட முடியாத பலரையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, அவர்களின் நினைவு என்றும் நிலைத்திருந்து, ஒவ்வொரு மனிதரின் மீற முடியாத மாண்பு, சுதந்திரத்தின் மதிப்பு மற்றும் அமைதிக்கான அர்ப்பணிப்பு குறித்து புதிய தலைமுறையினருக்கு நிலையான நினைவூட்டலாக அமைய இறைவேண்டல் செய்து தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
