வத்திக்கான் நகரத்திற்கான புதிய அடிப்படைச் சட்டத்தை வெளியிட்டார் திருத்தந்தை!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
வத்திக்கான் நகர அரசின் நிர்வாகத் தேவைகளையும், அண்மைய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சட்டச் சீர்திருத்தங்களையும் கருத்தில் கொண்டு, புதிய அடிப்படைச் சட்டத்தை (Fundamental Law) திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வெளியிட்டுள்ளார்.
புனித இஞ்ஞாசியார் லயோலாவின் திருவிழாவான ஜூலை 31, வெள்ளியன்று கையொப்பமிடப்பட்ட இச்சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்ததுடன், 2023 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த அடிப்படைச் சட்டத்தை மாற்றியுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் முக்கிய அம்சமாக, 2025 நவம்பரில் வெளியிடப்பட்ட Motu Proprio ஆவணத்தில் செய்யப்பட்ட திருத்தம் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வத்திக்கான் நகர அரசின் திருப்பீட ஆணையத்தின் (Pontifical Commission) தலைவர் கட்டாயம் கர்தினாலாக இருக்க வேண்டும் என்ற விதி நீக்கப்பட்டுள்ளது.
புதிய அடிப்படைச் சட்டத்தின்படி, வத்திக்கான் நகர அரசின் திருப்பீட ஆணையத்தில் கர்தினால்கள் மட்டுமல்லாது பிற உறுப்பினர்களும், தலைவராகவும் நியமிக்கப்படலாம். அவர்கள் அனைவரும் திருத்தந்தையால் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு நியமிக்கப்படுவர். இதன் மூலம், அருள்சகோதரி ரஃபேல்லா பெத்ரீனி அவர்கள் திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும், வத்திக்கான் ஆளுநரகத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருப்பது புதிய சட்டத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வத்திக்கான் ஆளுநரகத்தின் நிர்வாகப் பொறுப்புகள், திருத்தந்தையின் பணிக்கான அதன் சேவை, தலைவர் மற்றும் தலைமைச் செயலாளரின் பொறுப்புகள் ஆகியவை இச்சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. தலைமைச் செயலாளர் பொறுப்பு ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்படலாம் என்றும் இச்சட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதித்துறையைப் பொறுத்தவரை, வத்திக்கான் நீதிமன்றங்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் சட்ட அடித்தளத்தையும், நீதி வழங்கும் முறையை வலுப்படுத்த அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களையும் புதிய சட்டம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அடிப்படைச் சட்டம், வத்திக்கான் நகர அரசின் அரசியலமைப்புச் சார்ந்த அடையாளம், தன்னாட்சி மற்றும் சட்ட அடித்தளத்தை மேலும் வலுப்படுத்துவதோடு, அதன் அனைத்து நிறுவனங்களும் திருப்பீடத்தின் பணியையும் திருத்தந்தையின் உலகளாவிய மறைப்பணியையும் ஆதரிப்பதற்காகவே செயல்படுகின்றன என்பதை மீண்டும் சட்டரீதியாக உறுதி செய்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
