தேடுதல்

கொலம்பியா நிலநடுக்கத்திற்குப் பிந்தைய காட்சி கொலம்பியா நிலநடுக்கத்திற்குப் பிந்தைய காட்சி  (AFP or licensors)

கொலம்பியாவுக்கு திருத்தந்தையின் அவசர நிதியுதவி!

7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கொலம்பியாவுக்கு திருத்தந்தை 1 இலட்சம் யூரோ அவசர நிதியுதவியை வழங்கியுள்ளார். இந்த நிதி, அதிகம் பாதிக்கப்பட்ட மறைமாவட்டங்கள் மற்றும் மக்களின் உடனடித் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திங்கட்கிழமை கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மறைமாவட்டங்களுக்கு, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் 1 இலட்சம் யூரோ அவசர நிதியுதவியை அனுப்பியுள்ளார். இந்த நிலநடுக்கத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததோடு, பெருமளவில் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி, பிறரன்புப் பணிக்கான திருப்பீடத்துறையின்  வழியாக, நிவாரண உதவிகளைச் சேகரித்து விநியோகிக்கும் திருஅவையின் தேசிய ஒருங்கிணைப்பு மையமான கொலம்பியா காரித்தாஸ் அமைப்பிற்கு அனுப்பப்பட்டது. இந்த நிதி, நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மறைமாவட்டங்களுக்கு உதவுவதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும்.

ஆகஸ்ட் 12ஆம் நாள் இடம்பெற்ற புதன் பொதுமறைக்கல்வி உரையின்போது, திருத்தந்தை அவர்கள் கொலம்பிய மக்களுடன் தனது ஒருமைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினார். உயிரிழந்தவர்கள், அவர்களது குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்காகவும் அவர் இறைவேண்டல் செய்தார்.

திருத்தந்தையின் இந்த உதவி, திருப்பீடத் துறையும், திருத்தூதரக அலுவலகமும், கொலம்பிய ஆயர் பேரவையும் நடத்திய ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது. திருப்பீடத் துறையின் தலைவரான பேராயர் லூயிஸ் மரின் தே சான் மார்ட்டின் அவர்களும், கொலம்பிய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் பிரான்சிஸ்கோ ஹாவியர் மூனேரா கொரேயா அவர்களும், திருஅவையின் நிவாரணப் பணிகளை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் அவசரத் தேவைகளை மேலும் மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலைமையைப் பொறுத்து கூடுதல் உதவிகளும் வழங்கப்படும். துன்புறும் மக்களுக்கு சகோதரத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பயனுள்ள உதவியின் வழியாக திருஅவை தொடர்ந்து துணைநிற்கும் என்று திருப்பீடத் துறை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

13 ஆகஸ்ட் 2026, 13:54