திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வரும் செப்டம்பரில் பிரான்சுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வரும் செப்டம்பரில் பிரான்சுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 

திருத்தந்தையின் பிரான்ஸ் நாட்டு நான்கு நாள் திருத்தூதுப் பயணத் திட்டம் வெளியீடு!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் ஐந்தாவது திருத்தூதுப் பயணத்திற்கான அதிகாரப்பூர்வத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 25 முதல் 28 வரை மேற்கொள்ளும் இப்பயணத்தின்போது, பாரிஸ், செயின்ட்-டெனிஸ், லூர்து மற்றும் மெட்ஸ் ஆகிய நகரங்களுக்கு திருத்தந்தை செல்லவுள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் செப்டம்பர் 25 முதல் 28 வரை பிரான்சிற்கு மேற்கொள்ளவுள்ள திருத்தூதுப் பயணத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. நான்கு நாள்கள் மேற்கொள்ளவிருக்கும்  இப்பயணத்தில் பாரிஸ், செயின்ட்-டெனிஸ், லூர்து மற்றும் மெட்ஸ் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் திருத்தந்தை, பின்னர் உரோம் திரும்புகிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2024 டிசம்பரில் கோர்சிகா தீவின் அஜாச்சியோ நகருக்கும், 2023 செப்டம்பரில் மார்செய் நகருக்கும், 2014ஆம் ஆண்டு ஸ்ட்ராஸ்பூர்க் நகருக்கும் சென்றிருந்தாலும், அவை எதுவும் அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணங்களாக அமையவில்லை. எனவே, திருத்தந்தை அவர்களின்  இப்பயணம், 2008 செப்டம்பரில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் மேற்கொண்ட பயணத்திற்குப் பின்னர், பிரான்சிற்கு மேற்கொள்ளப்படும் முதல் அதிகாரப்பூர்வ அரசுமுறைத் திருத்தூதுப் பயணமாக அமைகிறது.

2024ஆம் ஆண்டு கோர்சிகாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன்
2024ஆம் ஆண்டு கோர்சிகாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன்

செப்டம்பர் 25 – உரோமிலிருந்து பாரிஸ்

செப்டம்பர் 25 வெள்ளிக்கிழமை காலை, உள்ளூர் நேரப்படி காலை மணி 7.50 க்கு உரோம் ஃபியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து திருத்தந்தை புறப்பட்டு, காலை 10 மணிக்கு பாரிஸ் ஓர்லி பன்னாட்டு விமான நிலையத்தைச் சென்றடைவார். வரவேற்பு நிகழ்வுக்குப் பின்னர், பிரான்ஸ் குடியரசுத் தலைவர் இமானுவேல் மக்ரோன் அவர்களை எலிசே மாளிகையில் திருத்தந்தை சந்திக்கிறார். தொடர்ந்து, அரசு அதிகாரிகள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தூதரகப் பிரதிநிதிகள் முன்னிலையில் திருத்தந்தை உரையாற்றுகிறார்.

அன்று பிற்பகலில், ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவின் தலைமையகத்திற்குச் செல்லும் திருத்தந்தை, அங்கு உரையாற்றவுள்ளார். பின்னர், பாரிஸ் கத்தோலிக்க நிறுவனத்தில் நடைபெறும் மாகாண அளவிலான ஆயர் மன்றக் கூட்டத்தில் பங்கேற்போர், மறைக்கல்வி  பயில்வோர்  மற்றும் புதிதாக திருமுழுக்குப் பெற்றோர் ஆகியோரைச் சந்திக்கிறார்.

பாரிஸில் தனது முதல் நாள் நிகழ்வுகளை நிறைவு செய்யும் வகையில், அங்குள்ள பிளாஸ் த லா கொன்கோர்டு எனப்படும் புகழ்பெற்ற சதுக்கத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை, பின்னர் விமானம் மூலம் லூர்து நகருக்குச் செல்கிறார். லூர்துவை அடைந்ததும், அங்குள்ள அன்னை மரியா காட்சியளித்த மாசபியேல் குகையில் செபித்து, லூர்து அன்னை திருத்தலத்தில் இறைவேண்டலில் ஈடுபடுகிறார்.

திருத்தந்தை அவர்கள் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தைப் பார்வையிட உள்ளார்
திருத்தந்தை அவர்கள் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தைப் பார்வையிட உள்ளார்

செப்டம்பர் 27 – லூர்து

லூர்துவில் தனது முதல் முழுநாள் நிகழ்வுகளை செப்டம்பர் 27 அன்று தொடங்கும் திருத்தந்தை, லூர்து அன்னை திருத்தலத்தின் புனித பெர்னதெத் அரங்கில் பிரான்ஸ் ஆயர் பேரவையின் உறுப்பினர்களைச் சந்தித்து உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, திருத்தலத்தின் புல்வெளிப் பகுதியில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

பின்னர், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பயணிகளாக லூர்துக்கு வருபவர்களுக்கு தங்குமிடமும் மருத்துவ மற்றும் பராமரிப்பு வசதிகளும் வழங்கும் ‘Accueil Notre Dame’ மையத்தின் பணியாளர்களையும், அங்கு தங்கியிருக்கும் நோயாளிகளையும் திருத்தந்தை சந்தித்து வாழ்த்துகிறார். அதன்பிறகு, லூர்து கார்மேல் துறவுமடத்தில் தியான வாழ்வில் ஈடுபடும் அருள்சகோதரிகளைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறார். அன்றைய நாளின் இறுதியில், லூர்து திருத்தலத்தில் நடைபெறும் பாரம்பரிய ஒளிபவனியில் பங்கேற்று செபமாலையை திருத்தந்தை வழிநடத்துகிறார்.

செப்டம்பர் 28 – லூர்து, மெட்ஸ், உரோம்

பிரான்சில் திருத்தந்தையின் இறுதி நாளான செப்டம்பர் 28 அன்று, மெட்ஸ் நகருக்குச் செல்லும் அவர், அங்கு சமயங்களுக்கு இடையிலான சந்திப்பிலும், “அமைதி மற்றும் ஒற்றுமைக்காக ஐரோப்பாவின் வேர்களுக்குத் திரும்புதல்” என்ற தலைப்பிலான சந்திப்பிலும் பங்கேற்கிறார். இந்நிகழ்வு ‘ராபர்ட் ஷூமான்’ மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. பின்னர், மெட்ஸ் நகரின் புனித ஸ்தேவான் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி பிரான்சில் தனது திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

“இறைவனின் விளக்கு” என அழைக்கப்படும் இந்தப் புதிய கோத்திக் கட்டடக்கலைப் பேராலயம், 6,500 சதுர மீட்டருக்கும் அதிகமான வண்ணக் கண்ணாடி ஜன்னல்களைக் கொண்டிருப்பதால் புகழ்பெற்றதாகும். மாலை 7 மணிக்கு மெட்ஸ்-நான்சி-லொரேன் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் புறப்படும் திருத்தந்தை, பின்னர் உரோம் திரும்புகிறார்.

லூர்து அன்னை மரியா திருத்தலத்தில் தினமும் நடைபெறும் தீப்பந்த ஊர்வலம்
லூர்து அன்னை மரியா திருத்தலத்தில் தினமும் நடைபெறும் தீப்பந்த ஊர்வலம்

பயணத்தின் இலச்சினையும் குறிக்கோளும்

திருத்தந்தையின் பிரான்ஸ் பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இலச்சினையில், பிரான்சின் கோத்திக் பேராலயங்களின் ரோஜா வடிவ வண்ணக் கண்ணாடி ஜன்னல்களை நினைவூட்டும் வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. இது, திருஅவையில் நிலவும் ஒன்றிப்பு மற்றும் ஒற்றுமையின் அழகைக் குறிக்கிறது.

இலச்சினையின் மையத்தில் இடம்பெற்றுள்ள கூர்மையான கோத்திக் வளைவும் சிலுவையும், “இப்பயணத்தின் திருத்தூது மற்றும் வழிபாட்டு பரிமாணத்தை” வெளிப்படுத்துகின்றன.

தூய ஆவியாரைக் குறிக்கும் புறா, மனிதகுலத்திற்கான அமைதியின் அடையாளமான ஒலிவக் கிளையைத் தனது அலகில் ஏந்தியுள்ளது. நீலம், வெள்ளை, சிவப்பு ஆகிய பிரான்சின் தேசிய நிறங்களுடன், வத்திக்கானின் நிறங்களையும் பிரதிபலிக்கும் மஞ்சள்-ஆரஞ்சு, பச்சை ஆகிய நிறங்கள் இலச்சினையில் இணைக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை மற்றும் குறிக்கோள்
பிரான்ஸ் திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை மற்றும் குறிக்கோள்

பயணத்தின் குறிக்கோள்:

“உலகம் வாழ்வைப் பெறுவதற்காக” என்ற இந்தக் குறிக்கோள், நம்பிக்கை மற்றும் ஒன்றிப்பிற்கான அழைப்பாகவும், பிரிவினைகளைத் தாண்டி அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான அழைப்பாகவும் விளக்கப்பட்டுள்ளது.

இறைவனிடமிருந்து வரும் வாழ்விற்கு சாட்சியம் அளிக்க வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பத்துடன், மகிழ்ச்சியுடனும் திறந்த மனதுடனும் திருத்தந்தையின் வருகையை வரவேற்கும் பிரான்ஸ் திருஅவையின் உணர்வை இந்தக் குறிக்கோள் வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கும் திருத்தந்தை

திருத்தந்தையின் பிரான்ஸ் பயணத்திற்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்ட அதே நேரத்தில், திருத்தந்தையின் பயணத்தின்போது, திருத்தந்தையின் பிரான்ஸ் நாட்டுத் திருத்தூதுப் பயணத்திற்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்ட அதேவேளையில், இப்பயணத்தின்போது திருச்சபையில் இடம்பெற்ற பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட சிலரைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனிப்பட்ட முறையில் சந்திக்கவுள்ளதாக திருப்பீடச்  செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

எனினும், சந்திப்பு நடைபெறும் தேதி, இடம் மற்றும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஸ்பெயினுக்கான தனது திருத்தூதுப் பயணத்தின்போதும் இதேபோன்று வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களைத் திருத்தந்தை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தையின் வருகைக்கான தன்னார்வலர்கள் மற்றும் இணையதளம்

“பல மாதங்களுக்கு முன்பே, திருத்தந்தையுடன் இணைந்து இப்பயணத்திற்கான ஆரம்ப நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கத் தொடங்கினோம். அதன்பின்னர், வத்திக்கானில் உள்ள எங்கள் ஒத்துழைப்பாளர்கள், பிரான்ஸ் ஆயர் பேரவை, பாரிஸ் மற்றும் மெட்ஸ் மறைமாவட்டங்கள், லூர்து திருத்தலம் ஆகியவற்றுடன் இணைந்து, இந்தப் பயணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒருங்கிணைக்க தீவிரமாகப் பணியாற்றினோம். இப்போது இந்தப் பயணத் திட்டத்தை பிரான்ஸ் மக்களுடன் பகிர்ந்துகொள்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்று மார்செய் பேராயரும் பிரான்ஸ் ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் ஜீன்-மார்க் அவெலின் தெரிவித்துள்ளார்.

மேலும், பொந்துவாஸ் மறைமாவட்ட ஆயர் பெனுவா பெர்ட்ரான்ட் கூறுகையில், “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்க விரும்பும் அனைவரும் பங்கேற்கும் வகையில் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. நிகழ்வுக்கான நடைமுறை ஏற்பாடுகள் நிறைவுபெறும் நிலையில், தேவையான தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும் என்றார்.

திருத்தந்தையின் வருகையின்போது பங்கேற்பாளர்களை வரவேற்பதற்கும், நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்கும் பாரிஸ் மறைமாவட்டம் 10,000 தன்னார்வலர்களை இணைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் திருஅவை திருத்தந்தையின் வருகைக்கென தனிப்பட்ட இணையதளத்தையும் தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்தின் வழியாக, மக்கள் இலவசமாகத் தன்னார்வலர்களாகப் பதிவு செய்துகொள்ளவும், திருத்தந்தையின் பயணத்திற்கான ஏற்பாடுகளுக்கு ஆதரவாக நன்கொடை வழங்கவும் முடியும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

08 ஆகஸ்ட் 2026, 13:00