குஸ்ராவில் பாலஸ்தீனக் குடும்பங்களுக்கு நிவாரண உதவி. குஸ்ராவில் பாலஸ்தீனக் குடும்பங்களுக்கு நிவாரண உதவி.  (AFP or licensors)

மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்த திருத்தந்தை அழைப்பு!

மேற்குக் கரையில் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவுகாண வேண்டும் என்றும், நீதியான மற்றும் நீடித்த அமைதிக்காக இரு நாடுகள் தீர்வை நோக்கி முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றும் திருத்தந்தை அவர்கள் அனைத்துலக சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மேற்குக் கரையில் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகளுக்கு முடிவுகாண வேண்டும் என்றும், நீதி மற்றும் நீடித்த அமைதிக்கான இரு நாடுகள் தீர்வை நோக்கி முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அனைத்துலக சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ஆகஸ்ட் 16, ஞாயிறன்று, காஸ்தல் கந்தோல்போவில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் மத்தியதரைக் கடல் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளதையும் எடுத்துக்காட்டினார்.

இந்த விளையாட்டுப் போட்டிகள், இப்பகுதி மக்களிடையேயும் உலக மக்கள் அனைவரிடையேயும் “அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் இறைவாக்கு அடையாளமாக” விளங்க வேண்டும் என்று திருத்தந்தை நம்பிக்கை தெரிவித்தார்.

பாதுகாப்பான மற்றும் அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட இரு நாடுகள் தீர்வே புனித பூமியில் நீதியான மற்றும் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான சமமான வழி என்ற தனது நிலைப்பாட்டை திருப்பீடம் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.

இவ்வாண்டு இப்போட்டிகள் தெற்கு இத்தாலியில் உள்ள தாரந்தோ நகரில் நடைபெறுகின்றன. திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வ விளையாட்டு அமைப்பான Athletica Vaticana சார்பில் நான்கு வீரர்களும் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளை வரவேற்ற திருத்தந்தை, போலந்தின் பீக்காரி சிலான்ஸ்கியே திருத்தலத்தை நோக்கி இடம்பெற்ற பாரம்பரிய மகளிர் திருப்பயணத்தில் கலந்துகொண்ட ஏராளமானோருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து  மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

17 ஆகஸ்ட் 2026, 11:58