ஹங்கேரி பேருந்து விபத்தில் உயிரிழந்த போலந்து திருப்பயணிகளுக்காக திருத்தந்தை இறைவேண்டல்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
மெசோகெரெஸ்தெஸ் திருப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியபோது ஹங்கேரியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த போலந்து திருப்பயணிகளின் குடும்பங்களுக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலையும் செபங்களையும் தெரிவித்துள்ளார்.
திருப்பயணிகள் வந்த மறைமாவட்டங்களின் பேராயர் மற்றும் ஆயருக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள தந்திச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் தனது ஆன்மீக நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹங்கேரியில் போலந்து திருப்பயணிகள் பயணம் செய்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்ததுடன், 10 பேர் படுகாயமடைந்தனர்.
இறைவனின் இரக்கத்தில் ஒப்படைப்பு
மெசோகெரெஸ்தெஸ்வில் தங்களது நம்பிக்கைப் பயணத்தை நிறைவு செய்து திரும்பிய நிலையில், தங்களது இவ்வுலகப் பயணத்தை முடித்துக்கொண்ட உயிரிழந்தவர்களுக்காக திருத்தந்தை சிறப்பாக செபிப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர்களை இறைவனின் இரக்கத்தில் ஒப்படைத்ததுடன், அவர்களது குடும்பங்களுக்கு இறைவன் ஆறுதலை வழங்க வேண்டுமென இறைவேண்டல் செய்துள்ளார்.
செஸ்டோகோவா அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டி, இந்தத் துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைவரையும் இறைவனிடம் ஒப்படைத்த திருத்தந்தை, தனது திருத்தந்தை ஆசீர்வாதத்தையும் வழங்கியுள்ளார்.
விபத்து குறித்து விசாரணை
ஆகஸ்ட் 15–16 இரவு, புடாபெஸ்டிலிருந்து ஏறத்தாழ 140 கிலோமீட்டர் கிழக்கே உள்ள மெசோகெரெஸ்தெஸ் பகுதியில், M3 நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. 59 பேர் பயணம் செய்த பேருந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓட்டுநர் தூங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
போலந்து மற்றும் ஹங்கேரி ஆயர் பேரவைகளும் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்காக செபங்களை அர்ப்பணித்துள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
