வன்முறையை நிறுத்தி, அமைதிக்கும் பேச்சுவார்த்தைக்கும் வழிவிட திருத்தந்தை அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
சூடான், உக்ரைன் மற்றும் இரஷ்யாவில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த திருத்தந்தை, வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதிக்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.
ஆகஸ்ட் 09, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை,குறிப்பாக எல்-ஒபைத் நகரில் துன்புறும் மக்களுடன் தனது ஆன்மீக நெருக்கத்தை வெளிப்படுத்தினார்.
பொதுமக்களுக்காக மனிதாபிமான உதவிப் பாதைகளை உறுதி செய்யுமாறு அந்நாட்டு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்ட அவர், உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு அனைத்துலக சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, உக்ரைன் மற்றும் இரஷ்யாவில் அதிகரித்து வரும் பொதுமக்களின் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை, அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களை இலக்காகக் கொண்ட தாக்குதல்களை அனைத்து தரப்பினரும் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“போர் மேலும் போரை மட்டுமே உருவாக்குகிறது; அது அளவற்ற துன்பங்களை ஏற்படுத்துகிறது” என்று கூறிய திருத்தந்தை, வன்முறைச் சுழற்சியை நிறுத்தி, தூதரகம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு வழிவிட வேண்டிய நேரம் இது என்று வலியுறுத்தினார்.
புனிதர்களைப் பின்பற்ற இளைஞர்களுக்கு அழைப்பு
இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த குழுக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த திருத்தந்தை, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திரண்டிருந்த ஏராளமான இளைஞர்களைச் சிறப்பாகக் குறிப்பிட்டு காட்டினார்.
தங்களது விடுமுறை நாட்களில் சிலவற்றை தனிநபர் வளர்ச்சிக்கும், நட்புறவை வளர்ப்பதற்கும், நம்பிக்கையின் அடையாளமாகத் திகழும் செயல்பாடுகளுக்கும் அர்ப்பணித்துள்ள இளைஞர்களை பாராட்டிய திருத்தந்தை, குறிப்பாக, ஆகஸ்ட் 6ஆம் நாள் அசிசியில் இடம்பெற்ற பிரான்சிஸ்கன் இளைஞர் சந்திப்பின்போது அவர்களைச் சந்தித்ததை எடுத்துக்காட்டினார்.
இந்நாட்களின் திருவழிபாட்டு நாள்காட்டியில் நினைவுகூரப்படும் புனித தோமினிக், புனித சிலுவையின் தெரேசா பெனடிக்தா, புனித லாரன்ஸ் மற்றும் புனித கிளாரா ஆகியோரின் வாழ்வை முன்மாதிரியாகக் கொள்ளுமாறு இளைஞர்களைத் திருத்தந்தை ஊக்கப்படுத்தினார்.
இறுதியாக, நற்செய்திக்குச் சிறந்த சாட்சிகளாகத் திகழ்ந்த இவர்களின் வாழ்வால் உந்துதலும் உற்சாகமும் பெறுங்கள்” என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து திருத்தந்தை தனது மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
