தேடுதல்

கரிபா ஏரி கப்பல் விபத்து நினைவேந்தல் நிகழ்வில் உயிர் தப்பியவர். கரிபா ஏரி கப்பல் விபத்து நினைவேந்தல் நிகழ்வில் உயிர் தப்பியவர்.  (AFP or licensors)

ஜிம்பாப்வே படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக திருத்தந்தை பதினான்காம் லியோ இரங்கல்

ஜிம்பாப்வேயின் கரிபா ஏரியில் நிகழ்ந்த படகு விபத்தில் 18 குழந்தைகள் உட்பட 80 பேர் உயிரிழந்ததற்கு திருத்தந்தை பதினான்காம் லியோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் ஆன்மாக்களுக்காகவும், துயருறும் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காகவும் அவர் இறைவேண்டல் செய்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜிம்பாப்வேயின் கரிபா ஏரியில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 18,  செவ்வாயன்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள இரங்கல் தந்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை, அன்புக்குரியவர்களை இழந்து துயருறும் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் இறைவனின் அமைதியில் இளைப்பாறவும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காகவும் இறைவேண்டல் செய்துள்ளார்.

ஆகஸ்ட் 11, செவ்வாயன்று, கரிபா நகரிலிருந்து சலாலா மீன்பிடி முகாமை நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்தது. பலத்த காற்றும், படகில் அளவுக்கு அதிகமான பயணிகள் இருந்திருக்கலாம் என்ற கவலையும் விபத்துக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஜிம்பாப்வே அதிகாரிகள் 18 குழந்தைகள் உட்பட 80 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில், விபத்திற்கான சரியான காரணங்கள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீட்பு மற்றும் உடல்களைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அவசரகாலப் பணியாளர்களுக்காகவும் மற்றும் துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இறைவனின் ஆறுதல், குணமடைதல் மற்றும் வலிமை கிடைக்க வேண்டும் என்றும் அவர் இறைவேண்டல் செய்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் மனங்காக்வா தேசிய அவசரநிலையை அறிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவ மற்றும் உளவியல் ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

கரிபா ஏரி, குறிப்பாக சாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில், கிராமப்புற மக்களுக்கும் மீனவர்களுக்கும் முக்கியமான போக்குவரத்து வழியாக விளங்குகிறது. இந்த விபத்து, இப்பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

19 ஆகஸ்ட் 2026, 13:46