அமைதி மற்றும் படைப்பை பாதுகாக்க திருத்தந்தை அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
அமைதி, மனித வாழ்வு மற்றும் படைப்பைப் பாதுகாத்தல் ஆகியவை ஒன்றோடொன்று ஆழமாக இணைந்துள்ளன என்று வலியுறுத்திய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், வன்முறையை அமைதியாகவும், அழிவை வாழ்வை வளர்க்கும் செயல்களாகவும் மாற்றுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
படைப்பைப் பராமரிப்பதற்கான 10 ஆவது உலக செப நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில், “அவர்கள் தங்கள் வாள்களை கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் மாற்றுவார்கள்” (எசா 2:4) என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, போருக்கான கருவிகளை வாழ்வையும் அமைதியையும் உருவாக்கும் கருவிகளாக மாற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.
போர்கள் உயிர்களைப் பறிப்பதோடு, குடும்பங்களைப் பிரித்து, இலட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்கின்றன என்றும், மேலும், அவை சுற்றுச்சூழலுக்கும் நீடித்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, காற்று மற்றும் நீர் மாசுபடுதல், இயற்கைச் சூழல் அழிக்கப்படுதல், உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படுதல் ஆகியவற்றால் வறுமையும் சமத்துவமின்மையும் மேலும் அதிகரிக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நெருக்கடிகள் அரசியல் அல்லது கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகள் மட்டுமல்ல; அவை தார்மீக மற்றும் ஆன்மீகப் பிரச்சினைகளுமாகும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, அதிகாரத்தின் மீதான பேராசை, உடனடி இலாபத்தைத் தேடுதல் மற்றும் மனித மாண்பை மதிக்காமை ஆகியவை போர்களுக்கும் படைப்பின் அழிவுக்கும் காரணமாகின்றன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
உண்மையான அமைதியை நிலைநாட்ட இதயமாற்றம் அவசியம் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, இறைவனின் அருளுடன் இணைந்து செயல்பட்டு, பிளவுகளைச் சரிசெய்யவும், மனித மாண்பைப் போற்றவும், படைப்பைப் பாதுகாக்கவும் கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
போருக்குப் பயன்படுத்தப்படும் வளங்களை மனித முன்னேற்றம், வறுமை ஒழிப்பு மற்றும் படைப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்குத் திருப்பி விட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, உண்மை, உரையாடல், பொறுமை, நீதி, இரக்கம், புரிந்துணர்வு, அக்கறை மற்றும் அன்பே அமைதியைக் கட்டியெழுப்பும் உண்மையான கருவிகள் என்று எடுத்துக்காட்டியுள்ளார்.
இறுதியாக, “பாலைவனத்திலிருந்து பூந்தோட்டத்திற்கும், பிளவிலிருந்து ஒன்றிப்பிற்கும், வன்முறையிலிருந்து அமைதிக்கும்” பயணித்து, இறைவனின் புதுப்பிக்கும் பணியில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்து திருத்தந்தை தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
