தேடுதல்

அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ள மவுண்ட் ஏஞ்சல் பெனடிக்டின் துறவுமடம். அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ள மவுண்ட் ஏஞ்சல் பெனடிக்டின் துறவுமடம். 

திருப்பலியை திருஅவை அங்கீகரித்துள்ள வழிபாட்டு நெறிமுறைகளின்படி மரியாதையுடனும் பக்தியுடனும் கொண்டாட வேண்டும் : திருத்தந்தை

அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் திருவழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்போருக்கு அனுப்பிய செய்தியில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருப்பலியை திருஅவை அங்கீகரித்துள்ள வழிபாட்டு நெறிமுறைகளின்படி மரியாதையுடனும் பக்தியுடனும் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருப்பலியைத் திருஅவை அங்கீகரித்துள்ள வழிபாட்டு நெறிமுறைகளின்படி மரியாதையுடனும் பக்தியுடனும் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் திருப்பலி வழிபாடு குறித்த கூட்டத்தில் பங்கேற்போருக்கு அனுப்பிய செய்தியில், இவ்வாறு மொழிந்துள்ள திருத்தந்தை, புனித மறைபொருள்களை மாண்புடன் கொண்டாடுவதற்கு, திருஅவையால் அங்கீகரிக்கப்பட்ட திருப்பலி நூல்கள் மற்றும் வழிபாட்டு நெறிமுறைகளை உண்மையுடன் பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தெய்வீக வழிபாடு மற்றும் அருளடையாளங்களின் ஒழுங்குமுறைத் துறையின் ஏற்பாட்டில், ஆகஸ்ட் 14 முதல் 19ஆம் நாள்வரை மவுண்ட் ஏஞ்சல் பெனடிக்டின் துறவற மடத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினரின் வழிபாட்டு உருவாக்கம் குறித்த முக்கியமான தலைப்பை ஆராய்வதற்கான இம்முயற்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, குறிப்பாக, புனித ஆறாம் பவுல் மற்றும் புனித இரண்டாம் ஜான் பால் ஆகிய திருத்தந்தையர்களால் அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டு முறைகளுக்கு அருள்பணியாளர்கள் மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Desiderio desideravi” அதாவது, மிக மிக ஆவலாய் இருந்தேன்' என்ற திருத்தூது மடலைத் தொடர்ந்து இடம்பெறும் இக்கூட்டம், திருவழிபாட்டின் அழகு மற்றும் அதன் இறையியல், ஆன்மீக ஆழம் குறித்து சிந்திக்கிறது.

வழிபாட்டு உருவாக்கம் என்பது சில நிபுணர்களுக்கு மட்டுப்பட்டதாக இல்லாமல், இறைமக்கள் அனைவரின் உள்ளார்ந்த மனநிலையாக மாற வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.

ஞாயிறு திருப்பலி, வழிபாட்டு உருவாக்கத்திற்கான மிகவும் அடிக்கடி கிடைக்கும் வாய்ப்பாகும் என்றும், அது திருவழிபாட்டின் ஆண்டை மையமாகக் கொண்ட பாஸ்கா மறைபொருளை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இதன்மூலம் விசுவாசிகள் திருவழிபாட்டிற்காகவும், திருவழிபாட்டின் வழியாகவும் உருவாக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய மரியாதை, இறைவனின் மகத்துவத்திற்கு முன்பான பணிவையும், திருஅவையின் ஒன்றிப்பிற்கான உண்மையான விசுவாசத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக ஓரிகனில் நடைபெறும் இக்கூட்டத்தை ஞானத்தின் அரியணையான அன்னை மரியாவின் பரிந்துரைக்கு ஒப்படைத்த திருத்தந்தை, திருஅவையின் புனித வழிபாடு குறித்து உரிய ஆன்மிகத் தெளிவைப் பெறுவதற்காக இறைவேண்டல் செய்து தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

15 ஆகஸ்ட் 2026, 12:54