செக் நாட்டு இளைஞர்கள் கிறிஸ்துவின் அன்புக்குச் சாட்சிகளாக வாழ திருத்தந்தை லியோ அழைப்பு
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஆகஸ்ட் 11 முதல் 16ஆம் நாள் வரை செக் குடியரசின் ஓஸ்ட்ராவாவில் நடைபெறும் தேசிய இளைஞர் சந்திப்பில் பங்கேற்கும் இளைஞர்கள், “உலகை வென்ற ஆண்டவர் இயேசுவை நம்பிக்கையுடன் நோக்குமாறு” திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிடப்பட்டு செக் ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் யோசஃப் நூசிக் அவர்களுக்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“கிறிஸ்துவின் வாழும் பிரசன்னத்தையும், அவரது வார்த்தையின் ஒளியையும் ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, இதன்மூலம் உங்கள் குடும்பங்களிலும், சமூகத்திலும், வாழ்க்கை, பணி மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு சூழல்களிலும் அவரது அன்புக்குச் சாட்சிகளாக இருங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்ஆகஸ்ட் 11ஆம் நாள் தொடங்கிய இந்த தேசிய இளைஞர் சந்திப்பு, ஆகஸ்ட் 16ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இதில் 14 முதல் 26 வயதுக்குட்பட்ட 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.
மீட்பரான கிறிஸ்து, தமது சீடர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வழிகாட்டி, அவர்களின் இதயங்களில் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் அமைதியை அளித்து வருகிறார்” என்று திருத்தந்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இறுதியாக, இச்சந்திப்பு புதியதும் உண்மையானதுமான நட்புகளுக்கு வழிவகுக்க வேண்டும் என்று வாழ்த்தி, இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்த திருத்தந்தை, தனது திருத்தூது ஆசீரை வழங்கி தனது செய்தியை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
