துறவறத்தார் கிறிஸ்துவின் அன்புக்குச் சாட்சிகளாகத் திகழ வேண்டும்: திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
பல்வேறு துறவற சமூகங்கள், அவற்றின் அருள்கொடைகள் மற்றும் வரலாறுகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் அழகை எடுத்துரைத்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இவை அனைத்தும் இணைந்து, “திருஅவையின் பணியையும் மறைபொருளையும் நமது உலகில் வெளிப்படுத்துகின்றன” என்று கூறினார்.
அமெரிக்காவில் உள்ள பெண் துறவியரின் தலைமைத்துவ மாநாட்டின் (LCWR) 70ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு 2026ஆம் ஆண்டுக்கான அதன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கிய காணொளிச் செய்தியில் இவ்வாறு திருத்தந்தை கூறினார்.
இன்றைய உலகில் கிறிஸ்துவின் அன்புக்குச் சாட்சிகளாகத் திகழவும், தங்களின் ஒன்றிப்பை வலுப்படுத்தவும், பல்வேறு அருள்கொடைகளை ஏற்றுக்கொள்ளவும் இருபால் துறவியருக்கு திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் “பல அருள்கொடைகள், ஒரே ஆவி, ஒரே அழைப்பு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு பேசிய திருத்தந்தை, தங்களது சமூக வாழ்விலும் மறைப்பணியில் ஒத்துழைப்பிலும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொள்பவர்கள் “ஒன்றிணைந்த திரு அவையின் வல்லுநர்களாக” திகழ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நற்செய்தி அறிவித்தல், கல்வி மற்றும் ஏழைகளுக்கான சேவை ஆகிய துறைகளில் துறவற சமூகங்கள் ஆற்றிவரும் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, கிறிஸ்துவின் அன்பும் இரக்கமும் வழியாக “அலட்சியம் மற்றும் இயலாமையின் உலகமயமாக்கலை” எதிர்கொள்ள தங்களது அருள்கொடைகளைப் பயன்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.
அழைத்தல்களுக்கும் இளைஞர்களுக்கும் முக்கியத்துவம் அளித்த திருத்தந்தை, இன்றைய இளைஞர்கள் பலரும் இறைவனைத் தேடும் ஆவல் கொண்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியதுடன் இளைஞர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட துறவற வாழ்வை அறிமுகப்படுத்தி, இறைவனின் அழைப்பை அவர்கள் உணர்ந்து அதற்குப் பதிலளிக்க உதவுமாறு இருபால் துறவறத்தாரை அவர் ஊக்குவித்தார்.
இறுதியாக, பங்கேற்பாளர்களுக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாக உறுதியளித்த திருத்தந்தை, அவர்களின் சமூகங்களையும் பணிகளையும் அன்னை மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைத்து செய்தியை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
