புலம்பெயர் மற்றும் அகதிக் குழந்தைகளைப் பாதுகாக்க திருத்தந்தை அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
புலம்பெயர்வு மற்றும் கட்டாய இடப்பெயர்வால் பாதிக்கப்படும் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களின் மாண்பையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
“இச்சிறுகுழந்தைகளில் ஒருவரேனும்” என்ற மையக்கருத்தில் வெளியிடப்பட்டுள்ள 112-ஆவது புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் உலக நாள் செய்தியில், இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, “இத்தகைய சிறு குழந்தைகளில் ஒருவரை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்” (மத் 18:5) என்ற இயேசுவின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி, ஒவ்வொரு குழந்தையின் துயரத்தையும் வெறும் புள்ளிவிவரமாகக் கருதாமல், அவர்களின் தனிப்பட்ட கதைகள், அச்சங்கள் மற்றும் கனவுகளைக் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருஅவை, புலம்பெயர் குழந்தைகளைத் தமது குடும்பத்தின் உறுப்பினர்களாக ஏற்றுக்கொண்டு, கல்வி, ஆன்மீக வளர்ச்சி மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், அரசுகள் மற்றும் பொது, தனியார் நிறுவனங்கள் குழந்தையின் நலனை முதன்மைப்படுத்தி, பயனுள்ள சட்டப் பாதுகாப்பு, குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைத்தல் மற்றும் பிரிவினையால் ஏற்படும் உளவியல் பாதிப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
புலம்பெயர்வை வெறுமனே நிர்வகிப்பதற்குப் பதிலாக, புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகள், பாதுகாப்பு, வரவேற்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மையப்படுத்திய ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகிறது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு சமயங்களைச் சார்ந்த சமூகங்கள் இணைந்து குழந்தைகளின் பாதுகாப்பிற்கான வலையமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு குழந்தையின் கலாச்சார அடையாளமும் மதிக்கப்படும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது, அவர்களைத் தீவிரவாதக் குழுக்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவும் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, எகிப்தில் புலம்பெயர்ந்த குழந்தையாக இயேசுவும், புனித யோசேப்பும் அன்னை மரியாவும் எதிர்கொண்ட துன்பங்களை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, புலம்பெயர் மற்றும் அகதிக் குழந்தைகளை அன்னை மரியாவின் தாய்மைப் பாதுகாப்பில் ஒப்படைத்து அவர்களின் பயணத்தில் அன்னை மரியா உடனிருந்து வழிநடத்தவும், நமது சமூகங்கள் நற்செய்தியின் நம்பகமான அடையாளங்களாகத் திகழவும் இறைவேண்டல் செய்து தனது செய்தியை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
