பாடகியும் கவிஞருமான பட்டி ஸ்மித்தைச் சந்தித்தார் திருத்தந்தை!

அமெரிக்காவின் பிரபல பாடகி, கவிஞர் மற்றும் கலைஞரான பட்டி ஸ்மித் அவர்களை, ஜூலை 31 அன்று திருப்பீடத்தில் திருத்தந்தை அவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூலை 31, வெள்ளியன்று,  அமெரிக்காவின் பிரபல பாடகி, பாடலாசிரியர், கவிஞர் மற்றும் கலைஞரான பட்டி ஸ்மித் (Patti Smith) அவர்களைத் திருப்பீடத்தில் தனிப்பட்ட முறையில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சந்தித்தார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, மே 8 அன்று இடம்பெற்ற வெனிஸ் பியன்னாலேவின் 61-வது அனைத்துலக கலைக் கண்காட்சியில், திருப்பீடத்தின் அரங்கத்தை (Holy See Pavilion) பட்டி ஸ்மித் அவர்கள் திறந்து வைத்தார். அந்நிகழ்வில், திருப்பீடத்தின் பண்பாடு மற்றும் கல்விக்கான திருப்பீடத் துறை முன்னெடுத்த கலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, Soundwalk Collective அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஒலிவழி இறைவேண்டலை அவர் வழங்கினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்குப் பிறகு வத்திக்கான் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், அவரைப் பற்றிய தனது நினைவுகளை பட்டி ஸ்மித் பகிர்ந்துகொண்டார்.

2013 ஏப்ரல் 10 அன்று இடம்பெற்ற புதன் பொது மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை முதன்முறையாகச் சந்தித்ததாகவும், அதனைத் தொடர்ந்து ஓராண்டுக்குப் பிறகு அவருக்காக இசை நிகழ்ச்சி வழங்கியதாகவும் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நேசித்த  அன்பு, தாழ்ச்சி, இரக்கம் ஆகிய விழுமியங்களை நம் இதயத்தில் ஏற்று வாழ வேண்டும் என்றும், நம் ஆன்மீக முன்னோர்கள் கற்பித்ததுபோல், கிறிஸ்துவைப் பின்பற்ற நாம் முயற்சிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட பட்டி ஸ்மித்  அவர்கள், பிரான்சிஸின் வாழ்வைப் பின்பற்றுவது, நம்மை இறைவனுக்கு இன்னும் நெருக்கமாக அழைத்துச் செல்லும் என்று தெரிவித்தார்.

திருத்தந்தையைப்  போலவே, பட்டி ஸ்மித்தும் அமெரிக்காவின் சிகாகோ நகரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

01 ஆகஸ்ட் 2026, 13:41