லெபனோன் அரசுத் தலைவருடன் திருத்தந்தை சந்திப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஆகஸ்ட் 20, வியாழனன்று, லெபனோன் அரசுத் தலைவர் ஜோசப் அவுன் அவர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
திருத்தந்தையுடனான இந்த சந்திப்பைப் தொடர்ந்து, ஜோசப் அவுன் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடச் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, லெபனோன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்தான முத்தரப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் குறித்து, திருப்பீடத்தின் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தைகள் “நட்புறவுடன்” நடைபெற்றதுடன், லெபனோனின் தெற்கு எல்லைகளை நிலைப்படுத்தி, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் லெபனோன் இடையே கையெழுத்தான முத்தரப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தை மையமாகக் கொண்டிருந்தன.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு திருப்பீடம் மகிழ்ச்சி தெரிவித்தபோதிலும், அதை நடைமுறைப்படுத்துவதில் நிலவும் சிக்கல்கள் குறித்து தீவிர கவலையை வெளியிட்டதுடன், அதற்கான முயற்சிகளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது.
லெபனோன் அதிபர் நன்றி
லெபனோன் அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், லெபனோனுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து முயற்சிகளுக்காகவும் திருத்தந்தை அவர்களுக்கும் திருப்பீடத்திற்கும் அதிபர் அவுன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவின் முன்னிலையில் ஜூன் 26 அன்று கையெழுத்தான கட்டமைப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இஸ்ரேல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட லெபனோனின் கோரிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
தெற்கு லெபனோனில் பொதுமக்கள், கட்டமைப்புகள் மற்றும் கிராமங்களைத் தாக்கும் அன்றாடத் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்திய அதிபர் அவுன் அவர்கள், இதன் மூலம் அழிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்பவும், இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பவும் வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.
லெபனோன் அரசின் அதிகாரம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தெற்கு லெபனோனில் தொடரும் பதற்றம்
ஏப்ரல் 17 அன்று இஸ்ரேலுடன் தற்காலிக போர் நிறுத்தம் எட்டப்பட்டபோதிலும், குறிப்பாக தெற்கு லெபனோனில் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த வத்திக்கான் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகள் மற்றும் உறுப்பினர்களையே தாங்கள் குறிவைப்பதாக இஸ்ரேல் தெரிவித்து வரும் நிலையில், தொடரும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்கு லெபனோன் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
இதற்கிடையில், தெற்கு லெபனோனின் எதிர்காலம் தொடர்பான அரசியல் முட்டுக்கட்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. லெபனான்–இஸ்ரேல் இடையிலான கட்டமைப்பு ஒப்பந்தத்தை முன்னெடுத்து, அமைதிக்கான பாதையை உருவாக்கும் நோக்கில் அமெரிக்கா தலைமையில் நடைபெறவுள்ள எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான தேதி இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
