தேடுதல்

“நம் சமூகங்களின் இறுதி இலக்கு ஒன்றிப்பு”

சான் மரினோ பேராலயத்தில் திருஅவைச் சமூகத்தினரைச் சந்தித்த திருத்தந்தை அவர்கள், இளைஞர்கள் இறைவன் வழங்கிய அழைப்பைத் துணிவுடன் ஏற்று, அன்பு, நீதி மற்றும் அமைதியின் சாட்சிகளாக வாழ வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஆகஸ்ட் 22, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சான் மரினோ குடியரசுக்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் ஒரு பகுதியாக  சான் மரினோ பேராலயத்தில் திருஅவைச் சமூகத்தினரைச் சந்தித்து உரையாற்றினார். அச்சந்திப்பின்போது இடம்பெற்ற உரை

அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே,

சான் மரினோவின் பாதுகாவலரான புனித திருத்தொண்டர் மரினஸுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் பேராலயத்தில் உங்களைச் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் மறைமாவட்டத்தின் நம்பிக்கை மற்றும் துணிச்சல் நிறைந்த வரலாற்றை நாம் கொண்டாடுகிறோம். ஏறத்தாழ பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு புனித மரினஸும் புனித லியோவும் நற்செய்தியை அறிவித்து, மனிதர் இறைவனின் சாயல் என்ற அடிப்படையில், சுதந்திரம், ஒருவருக்கொருவர்  மரியாதை மற்றும் ஒன்றிப்பு ஆகிய கிறிஸ்தவ மதிப்புகளால் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்கினர்.

முதலில், இளைஞர்களுக்கு நான் ஓர் அழைப்பு விடுக்கிறேன். வாழ்க்கையில் எளிதான மற்றும் உடனடியான பதில்களைத் தேடி நின்றுவிடாதீர்கள். உங்கள் இதயத்தில் அழகிற்கும், நன்மைக்கும், நிறைவான வாழ்விற்குமான பெரிய ஏக்கங்களை உயிருடன் வைத்திருங்கள். “உங்கள் இதயம் முடிவில்லாததை நோக்கித் திறந்திருக்கும் ஒரு சாளரம்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த ஏக்கங்களைப் பின்பற்றும்போது, அவை உங்களை இறைவனைச் சந்திக்கும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.

உங்கள் வாழ்வில் இறைவன் வழங்கிய அழைப்பைத் துணிவுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். திருமணம், அர்ப்பணிக்கப்பட்ட துறவற வாழ்வு, அருள்பணியாளர் பணி, தொழில்முறை வாழ்க்கை, சமூக மற்றும் அரசியல் பொறுப்புகள் என, எந்த அழைப்பு உங்களுக்குரியதோ அதைத் தேர்ந்தெடுத்து, அதற்காக உங்கள் திறமைகளையும் கொடைகளையும் முழுமையாக அர்ப்பணியுங்கள். அன்பு மற்றும் நீதியின் பணிகளில் ஈடுபட்டு, உலகிற்கு அமைதியின் சாட்சிகளாக இருங்கள்.

அருள்பணியாளர்கள், மறைக்கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகளின் மனித மற்றும் கிறிஸ்தவ வளர்ச்சிக்காக உழைக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது வெளியில் அதிகம் தெரியாத பணியாக இருந்தாலும், மிகவும் முக்கியமானதும் மதிப்புமிக்கதுமாகும். குறிப்பாக, குடும்பமே நம்பிக்கையின் முதல் பள்ளி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, குடும்பங்களுக்கும் திருஅவைச் சமூகங்களுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை. பெற்றோர் தங்கள் நம்பிக்கையைப் புதுப்பித்து, கிறிஸ்தவ மதிப்புகளை மகிழ்ச்சியுடன் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்.

கிறிஸ்தவ உருவாக்கம், திருமுழுக்கு மற்றும் திருவருட்சாதன வாழ்வின் அழகையும் மகிழ்ச்சியையும் முதலில் எடுத்துரைக்க வேண்டும். திருப்பலியை ஒரே உயிருள்ள உடலின் கூட்டு வழிபாடாக அனைவரும் பங்கேற்று வாழ வேண்டும். ஆண்டவரின் மேசையிலிருந்து வலிமை பெற்று, உலகின் பாதைகளில் அவரது ஒளியை எடுத்துச் செல்ல வேண்டும்.

நற்செய்தி ஒவ்வொரு காலத்திற்குமான மனிதர்களுக்கும் சுதந்திரத்தின் பாதையாகும். இயேசு கிறிஸ்துவிலும் அவரது வார்த்தையிலும் மனித வாழ்வின் ஆழமான கேள்விகள், காயங்கள் மற்றும் ஏக்கங்களுக்கு உண்மையான பொருளும் பதிலும் கிடைக்கின்றன. எனவே, நாம் வழங்கக்கூடிய மிகப் பெரிய கொடை, நம் சகோதரர் சகோதரிகளை கிறிஸ்துவைச் சந்திக்க உதவுவதே ஆகும். அவர்களின் முழுமையான நலனை மனதில் கொண்டு, அன்பின் பணிகளைத் தொடர்ந்து செய்வோம்.

போர்களாலும் வன்முறைகளாலும் அச்சத்தாலும் காயமடைந்த உலகில் நாம் வாழ்கிறோம். பிறரைப் பற்றிய பயம் மற்றும் பிரிவினை அதிகரித்து வரும் நிலையில், நற்செய்தியின் பாதையில் இன்னும் உறுதியுடன் நடப்பதே நமது பதிலாக இருக்க வேண்டும். அது பலவீனர்களைப் பாதுகாக்கவும், மன்னிப்பு, ஒன்றிப்பு மற்றும் ஒருமைப்பாட்டை வளர்க்கவும் நமக்குக் கற்றுத்தருகிறது.

மக்கள் தொகை குறைதல் மற்றும் சேவை வசதிகளின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சான் மரினோவின் சிறிய சமூகங்கள், ஒருவருக்கொருவர் உதவி மற்றும் குடும்ப உணர்வை உயிருடன் வைத்திருப்பது பாராட்டத்தக்கது. இத்தகைய சிறிய சமூகங்கள், சகோதரத்துவம் மற்றும் அமைதியின் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒளிச்சுடர்களாக விளங்குகின்றன.

இறுதியாக, எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு வார்த்தையை உங்களிடம் கூறுகிறேன்: ஒன்றிப்பு. உங்கள் பங்குத்தளங்களுக்கிடையிலும், அருள்பணியாளர்களுக்கும் இறைமக்களுக்கும் இடையிலும், பல்வேறு அழைப்புகள் மற்றும் பணிகளுக்கிடையிலும் ஒன்றிப்பின் சாட்சிகளாக இருங்கள். புனித மரினஸும் புனித லியோவும் தொடங்கிய பணியை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் வளர்த்தெடுப்போம்.

உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி. என் செபங்களில் உங்களை நினைத்துக்கொள்கிறேன். நீங்களும் திருத்தந்தைக்காக தொடர்ந்து செபிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

22 ஆகஸ்ட் 2026, 15:51