மரியாவின் தூய உள்ளம் நம்மை விண்ணக மகிமையை நோக்கி வழிநடத்துகிறது: திருத்தந்தை

மரியாவின் விண்ணேற்பு மனிதகுலத்தின் விண்ணக அழைப்பை எடுத்துக்காட்டுகிறது என்றும், உண்மையான அழகு அன்பிலும் தூய்மையிலும் வெளிப்படுகிறது என்றும் கூறினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

உண்மையான அழகு அன்பிலும் தூய்மையிலும் வெளிப்படுகிறது என்றும், மரியாவின் விண்ணேற்பு மனிதகுலத்தின் விண்ணக அழைப்பை எடுத்துக்காட்டுகிறது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஆகஸ்ட் 15, சனிக்கிழமையன்று, மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவையொட்டி காஸ்தல் கந்தோல்போவில் அமைந்துள்ள புனித தோமா வில்லனோவா திருத்தலப் பங்கில் திருப்பலி நிறைவேற்றியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, மரியா தனது மண்ணக வாழ்வை நிறைவு செய்தபின் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மகிமைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்ற திருஅவையின் நம்பிக்கையை எடுத்துக்காட்டினார்.

மரியாவின் உள்ளத்தின் தூய்மை, இறையருளால் அவரது முழு ஆளுமையையும் ஒளிரச் செய்து மாற்றியது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, உலகம் முன்வைக்கும் இளமை, வெளித்தோற்றம் மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட அழகின் அளவுகோல்களில் இருந்து கிறிஸ்தவர்கள் விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

உண்மையான அழகு குழந்தையின் முகத்திலும், முதியோரின் சுருக்கங்களிலும், குடும்ப உறவுகளிலும், பிறருக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் மனிதர்களின் வாழ்விலும் வெளிப்படுகிறது என்று கூறிய திருத்தந்தை, “அன்பே மனிதகுலத்தின் மிக அழகிய அணிகலன்” என்றும், அந்த அன்பு மனிதரை மாற்றி, மேன்மைப்படுத்தி, இறைவனுக்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் மரியாவின் புகழ்ப்பாடலை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அவரது பணிவு, நம்பிக்கை மற்றும் இறைவனிடம் கொண்ட முழுமையான அர்ப்பணிப்பு ஆகியவற்றை நம்பிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஒளியைப் பின்பற்றி, தேவையான நேரங்களில் தங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட  திருத்தந்தை, விண்ணகத்தை நோக்கிய நமது பயணத்தில் மரியாவை தாய், வழிகாட்டி, உடன்வருபவர் மற்றும் பாதுகாவலர் என நம்பிக்கையுடன் நோக்குமாறு நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து மறையுரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

17 ஆகஸ்ட் 2026, 12:06