திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை!

இசை என்பது திருவழிபாட்டை அலங்கரிக்கும் ஒன்றல்ல; மாறாக, திருவழிபாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இறைவேண்டலின் வெளிப்பாடாகவும் உள்ளது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஆகஸ்ட் 19 , புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தொடங்கினார். ‘மக்களினங்களின் ஒளி' என்ற திருஅவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் முதல் ஆவணமான, திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் (Sacrosanctum Concilium) என்ற தலைப்பில், ஆறாவது அதிகாரமான திருஇசை குறித்து தனது சிந்தனைகளை திருப்பயணிகளுடன் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.

முதலில் திருத்தூதர்  பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.

கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள். எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். (கொலோசையர் 3:16-17)

இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்.

அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!

“திருஅவையின் இசை மரபு, அளவிட முடியாத மதிப்புமிக்க ஒரு கருவூலமாகும். கலைகளின் பிற வெளிப்பாடுகளுக்கு மத்தியில் அது சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, சொல்லோடு இயைந்த இசை ஆடம்பர திருவழிபாட்டிற்குத் தேவையான மற்றும் அத்திருவழிபாட்டின் முழுமைக்கு உரிய ஒரு பகுதியாக விளங்குகின்றது (SC, 112). மேலும், “திருவழிபாட்டு நிகழ்வுடன் எவ்வளவு நெருக்கமாக இணைக்கப்படுகிறதோ, அவ்வளவு புனிதமானதாகப் திருஇசை அமையும். அது இறைவேண்டலுக்கு இனிமையான வெளிப்பாட்டை வழங்குவதன் மூலமும், அனைவரின் ஒருமித்த பங்கேற்பை ஊக்குவிப்பதன் மூலமும், புனிதச் சடங்குகளுக்கு அதிக சிறப்பையும் மேன்மையையும் அளிப்பதன் மூலமும் இதனைச் செய்கிறது” என்றும் குறிப்பிடுகிறது.

திருவழிபாட்டில் இசையின் பணியாற்றும் தன்மை குறித்த பொதுச்சங்கத்தின் போதனையின் மையக்கருத்தை இங்கு காண்கிறோம். இது, 1903 நவம்பர் 22 அன்று புனித பத்தாம் பயஸ் அவர்கள் வெளியிட்ட Inter sollicitudines என்ற திருத்தந்தையின் விருப்புரிமைக் கடிதத்தில் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டிருந்தது.

உண்மையில், இசை என்பது திருவழிபாட்டு நிகழ்வின் ஓர் அங்கமே தவிர, திருவிழாவை அலங்கரிக்கும் ஒன்றல்ல. திருவழிபாட்டில் பாடுவதும் இசைப்பதும் இறைவேண்டல் செய்வதற்குச் சமமானதாகும். சகோதரர் சகோதரிகளின் இதயங்களோடும் இறைவனின் இதயத்தோடும் நமது இதயங்களை இசைவித்து, கொண்டாடப்படும் மறையுண்மையில் நாம் செயற்பூர்வமாகப் பங்கேற்கிறோம். குறிப்பாக, இறைவேண்டலின் உணர்வுப்பூர்வமான பரிமாணத்தை இசை வெளிப்படுத்துகிறது. புனித அகுஸ்தின் கூறுவதுபோல், “Cantare amantis est” – “பாடுவது அன்புகூருகிறவருக்கே உரியது.” (Sermo 336, 1). இது மிகவும் முக்கியமானது; ஏனெனில், இறையருளின் வழியாக இறைவன் நம்மில் செயல்படுவதற்கு நமது இதயத்தைத் திறக்கவும், அந்த அருளால் நாம் வடிவமைக்கப்பட அனுமதிக்கவும் இசை உதவுகிறது.

பாடல் உருவாக்கும் ஒன்றிப்பு

பாடல் ஒன்றிப்பையும் உருவாக்குகிறது. பல குரல்கள் ஒன்றிணைந்து இசைக்கும் இனிய ஒத்திசைவு, மனிதர்களுக்கிடையிலான வேறுபாடுகளைத் தாண்டி, உள்ளங்களை ஒன்றிணைத்து, அனைவரையும் இறைவனைப் புகழ்வதில் இணைக்கிறது. இவ்வாறு, பாடல் திருஅவையின் வெளிப்படையான அடையாளமாகவும், அதன் இயல்பிலேயே அடங்கியுள்ள ஒன்றிப்பின் உணரக்கூடிய வெளிப்பாடாகவும் அமைகிறது. திருவழிபாட்டின் ஒருங்கிணைந்த அங்கமாகிய புனிதப் பாடலின் ஆழமான இறையியல் முக்கியத்துவத்திலிருந்து சில தேவைகள் உருவாகின்றன. முதலாவதாக, காலத்தின் போக்கில் உருவாகும் இசை நாகரிகங்களையோ, படைப்பாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களையோ மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், கொண்டாடப்படும் திருவழிபாட்டு நிகழ்வுக்கு ஏற்றதாக இசை அமைய வேண்டும். அதன் வடிவம், குறிப்பாக அதன் மெட்டுத் தன்மை, ஒரே நேரத்தில் மேன்மையானதாகவும் எளிமையானதாகவும், உயர்ந்த இசைத்தரத்தைக் கொண்டதாகவும், எளிதில் பாடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, திருக்கூட்டத்தினர் அனைவரும் இணைந்து பாடுவதற்காக அமைக்கப்படும் பாடல்களுக்கு இது மிகவும் அவசியமானது (SC, 121).

அதே காரணத்திற்காக, பாடல்களின் வரிகளும் பொருத்தமானதாகவும் ஆழமானதாகவும், அதேவேளை எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று பொதுச்சங்கம் பரிந்துரைக்கிறது. அவை முதன்மையாக திருவிவிலியம், திருவழிபாட்டு நூல்கள் மற்றும் திருஅவையின் ஆன்மீக மரபிலிருந்து ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும்.இவ்விடயத்தில் நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும். ஏனெனில், “lex orandi, lex credendi” அதாவது “நாம் எவ்வாறு செபிக்கிறோமோ, அவ்வாறே நாம் விசுவசிக்கிறோம்” என்ற பழமையான கொள்கையில் வெளிப்படும் இயக்கம் தொடர்ந்து உயிர்ப்புடனும் வளர்ச்சியுடனும் இருக்க வேண்டும். அதாவது, “இறைவேண்டலின் சட்டமே நம்பிக்கையின் சட்டமாகவும் அமைகிறது.”

இறைமக்களின் செயற்பூர்வமான பங்கேற்பு

திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் இறைமக்களின் செயற்பூர்வமான பங்கேற்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது (SC, 114). இது, “கொண்டாடப்படும் மறையுண்மையையும், அது அன்றாட வாழ்க்கையுடன் கொண்டுள்ள தொடர்பையும் ஆழமாக உணர்ந்துகொள்வதிலிருந்து” புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் கூறுகிறார் (Sacramentum Caritatis, 52). மேலும், இறைமக்களின் வாழ்வைத் தனித்துவப்படுத்த வேண்டிய “தொடர்ச்சியான மனமாற்றத்தின் உணர்வோடு” இது அமைய வேண்டும் (ibid., 55). திருஇசையின் தனித்துவமான பங்களிப்பின் வழியாக இந்தப் பங்கேற்பு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படலாம் என்பதற்கும் பொதுச்சங்கம் தெளிவான பதிலை வழங்குகிறது. “இறைமக்களின் புகழுரைகள், மறுமொழிகள், திருப்பாடல்கள், பதில்பாடல்கள் மற்றும் பாடல்கள்” ஆகியவற்றைக் கவனமாகத் தயாரிக்க வேண்டும் என்றும், அதேவேளை “புனித அமைதிக்கும்” இடமளிக்க வேண்டும் என்றும் அது கூறுகிறது (SC, 30). மேலும், திருப்பணியாளர் அல்லது இறைமக்கள் என ஒவ்வொருவரும் “திருவழிபாட்டு முறையின் இயல்புக்கும், திருவழிபாட்டு விதிமுறைகளுக்கும் ஏற்ப, தமக்குரிய அனைத்தையும் மட்டுமே செய்ய வேண்டும்” என்று பொதுச்சங்கம் அறிவுறுத்துகிறது (SC, 28). இவ்வாறு பல்வேறு பணிகள், பங்கேற்புகள் மற்றும் அமைதியான தருணங்களுக்கு இடையே நல்லிணக்கமான சமநிலை நிலைநிறுத்தப்பட வேண்டும்.

கிரகோரியப் பாடலும் இசைக்கருவிகளும்

பொதுச்சங்கம் கிரகோரியப் பாடலுக்கு மிகுந்த மதிப்பளிக்கிறது. அதேவேளை, பிற வகையான புனித இசைகளையும் திருவழிபாட்டிலிருந்து அது விலக்கவில்லை. குழல் இசைக்கருவியான ஆர்கனுக்கும் சிறப்பான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது (SC, 120). அதே நேரத்தில், பிற இசைக்கருவிகளும் “புனிதப் பயன்பாட்டிற்கு ஏற்றவையாகவோ, அதற்கேற்றவாறு மாற்றியமைக்கக்கூடியவையாகவோ, ஆலயத்தின் மாண்புக்குப் பொருத்தமானவையாகவோ, இறைமக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு உண்மையிலேயே உதவுபவையாகவோ” இருந்தால் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன (SC, 120).

பண்பாடுகளுக்கேற்ப இசையைப் பயன்படுத்துதல்

பொதுச்சங்கச் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று பண்பாட்டிற்கேற்ப திருவழிபாட்டை வெளிப்படுத்துதல் ஆகும். திருஇசையிலும் இது முக்கியமானது. பல்வேறு பண்பாடுகளின் இசை மரபுகள், மக்களின் சமய மற்றும் சமூக வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பதால், அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். எனவே, அனைவரிடமும் பொருத்தமான “சமய உணர்வை வளர்க்கும் கல்வியை” (SC, 119) வழங்க வேண்டும் என்றும், “முடிந்தவரை, அந்தந்த மக்களின் பாரம்பரிய இசையைப் பள்ளிகளிலும் புனித வழிபாடுகளிலும் ஊக்குவிக்க வேண்டும்” என்றும் பொதுச்சங்கம் பரிந்துரைக்கிறது (ibid.).

பாடகர் குழுவின் பங்கு

திருவழிபாட்டுச் சூழலில் பாடகர் குழுவுக்கும் சிறப்பான பணி வழங்கப்படுகிறது. இது ஒரு மேய்ப்புப்பணிக் கருவியாகும். பல்வேறு வகையான பாடல்களுக்கு ஏற்ப, தங்களுக்குரிய பகுதிகளைத் துல்லியமாகப் பாடுவதையும், இறைமக்கள் அனைவரும் பாடலில் செயற்பூர்வமாகப் பங்கேற்பதையும் ஊக்குவிப்பது அதன் பணியாகும் (Musicam Sacram, 19). இதற்காக, திருஇசையை இயற்றும் இசையமைப்பாளர் திருஅவையின் இசை மரபை அறிந்துகொண்டு பாதுகாக்க வேண்டும். அதிலிருந்து ஊக்கம் பெற்று, திருவழிபாட்டிற்குச் சேவை செய்யும் புதிய இசைப் படைப்புகளை உருவாக்க வேண்டும். அதேவேளை, இன்றைய காலத்தின் உணர்வுகளையும் பல்வேறு பண்பாட்டு மரபுகளையும் மதிக்க வேண்டும். இதன் மூலம், “பாணியில் காணப்படும் குறைபாடுகள், அலட்சியமான வெளிப்பாட்டு வடிவங்கள், திருவழிபாட்டின் மாண்புக்குப் பொருந்தாத தரமற்ற இசை மற்றும் பாடல் வரிகள்” ஆகியவற்றிலிருந்து வழிபாட்டைத் தூய்மைப்படுத்தி, திருவழிபாட்டு இசைக்கு உரிய மாண்பையும் தரத்தையும் வழங்க வேண்டும் என்று புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் வலியுறுத்தினார் (புனித இசை குறித்த விருப்புரிமைக் கடிதம், 22 நவம்பர் 2003, 3).

புனித இசையில் உருவாக்கம்

இந்தக் காரணங்களுக்காக, புனித இசையின் பயிற்சியையும் நடைமுறையையும் ஊக்குவிக்க வேண்டும் என்று பொதுச்சங்கத் தந்தையர்கள் பரிந்துரைக்கின்றனர். திருப்பணிப் பயிற்சியகங்களிலும், ஆண், பெண் இருபாலாரின் துறவற, துறவுப் புகுமுக இல்லங்களிலும், இவர்களின் கல்விக் கூடங்களிலும் மற்றக் கத்தோலிக்க நிறுவனங்கள், பள்ளிகள் ஆகியவற்றிலும் இசைக் கல்விக்கும் பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இத்தகைய கல்வி அளிப்பதற்குத் திருஇசை பயிற்றுவிக்க அமர்த்தப்படும் ஆசிரியர்களைக் கவனமுடன் உருவாக்க வேண்டும். (SC, 115). மேலும், இசைக்கலைஞர்களுக்கும் பாடகர்களுக்கும் வலுவான திருவழிபாட்டு உருவாக்கப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் (ibid.).

அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே,

திருஅவையின் தந்தையர்கள், திருவழிபாட்டுப் பாடலை திருஅவையின் ஒன்றிப்பின் அடையாளமாக மிகுந்த மதிப்புடன் கருதினர். எனவே, புனித அந்தியோக்கியா இஞ்ஞாசியாரின் இந்த அழகிய வார்த்தைகளுடன் நாம் நிறைவுசெய்யலாம்:

“நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒரு பாடகர் குழுவாக மாறுங்கள். ஒற்றுமையுடன் இசைந்து, இறைவனின் இசைவோடு ஒருமித்த குரலில், இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தந்தையைப் பாடுங்கள். அப்பொழுது அவர் உங்கள் பாடலைக் கேட்பார்; நீங்கள் செய்கின்ற நற்செயல்களின் வழியாக, நீங்கள் அவருடைய மகனின் உறுப்பினர்கள் என்பதை அறிந்துகொள்வார்.”

— புனித அந்தியோக்கியா இஞ்ஞாசியார், எபேசியருக்கு எழுதிய திருமுகம், 4, 2

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

19 ஆகஸ்ட் 2026, 13:41