திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தேவதூதர்களின் அன்னை புனித மரியா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றியபோது. திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தேவதூதர்களின் அன்னை புனித மரியா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றியபோது.  (@VATICAN MEDIA)

"நற்செய்தியின் ஒளியை உலகெங்கும் எடுத்துச் செல்ல அசிசி இளைஞர்களுக்கு திருத்தந்தை அழைப்பு!

அசிசியில் இடம்பெற்ற "GO! Franciscan Youth Meeting 2026" நிகழ்வின் நிறைவாக இளைஞர்களுடன் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஆண்டவரின் உருமாற்றத் திருவிழா மனித வாழ்வை ஒளியாலும் நம்பிக்கையாலும் மாற்றும் இறையழைப்பை நினைவூட்டுவதாகக் கூறினார். புனித பிரான்சிஸ் மற்றும் புனித கிளாராவைப் போல நற்செய்தியை எளிமையுடன் வாழ்ந்து, மனச்சோர்வு மற்றும் அச்சத்தை வென்று, கிறிஸ்துவின் உண்மையான சீடர்களாக புதிய வரலாற்றைப் படைக்க இளைஞர்களை அவர் அழைத்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஆகஸ்ட் 06, வியாழனன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அசிசி நகருக்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் ஒரு பகுதியாக, தேவதூதர்களின் புனித மரியா பேராலயத்திற்குச் சென்றார். அப்பேராலயத்தில் இடம்பெற்ற "GO! Franciscan Youth Meeting 2026" என்ற பிரான்சிஸ்கன் இளையோர் சந்திப்பின் நிறைவு திருப்பலியை இளைஞர்களுடன் இணைந்து நிறைவேற்றினார். அந்தத் திருப்பலியில் திருத்தந்தை அவர்கள் ஆற்றிய மறையுரை

அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே, இளைஞர்களே!

இன்று நாம் கொண்டாடுகின்ற ஆண்டவரின் உருமாற்றத் திருவிழா, ஒளியின் மறைபொருளாக விளங்குகிறது. மகிழ்ச்சியால் நிறைந்த நமது இந்தச் சந்திப்பை அது மேலும் செழுமைப்படுத்துவதோடு, நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றிய ஆழமான கேள்விகளையும் நம் முன் எழுப்புகிறது.

இன்றைய நற்செய்தியில், ஒளிக்கும் இருளுக்கும், அமைதிக்கும் வார்த்தைகளுக்கும், வியப்புக்கும் புரிந்துகொள்ளாமைக்கும் இடையிலான முரண்பாட்டை நாம் காண்கிறோம். இன்று நாம் அசிசியில் இருக்கிறோம். பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற திருப்பயணிகள் வந்து சென்ற இந்த நகரம், மனித வாழ்க்கை புதிய வடிவம் பெற முடியும், ஒளியைப் பரப்ப முடியும், உலகைக் குணப்படுத்த முடியும் என்று அதன் ஒவ்வொரு மூலையிலும் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இங்குதான் புனித பிரான்சிஸ், புனித கிளாரா மற்றும் பின்னர் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை மாற்றம் தொடங்கியது. அவர்கள் நற்செய்தியை எந்த விளக்கங்களும் சேர்க்காமல், அதன் எளிமையிலேயே ஏற்றுக்கொண்டார்கள். அப்போது இயேசுவின் வாழ்க்கை அவர்களுக்குள் புதிதாக மலரத் தொடங்கியது.

வரலாறு எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்பதையும், நாமே எந்த வழியில் பயணிக்கிறோம் என்பதையும் புரிந்துகொள்வதற்காகவே நாம் இங்கு வந்திருக்கிறோம். நற்செய்தி நமக்குக் காட்டுவது என்னவென்றால், வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைக் கண்டறிய முடியும்; பயணிக்க வேண்டிய பாதையைப் பார்க்க முடியும் என்பதே. பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைப் போல நாமும் தனியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளோம். இயேசு நம்மோடு இருக்கிறார். முக்கியமானது அவரது பிரசன்னமே. அந்த மலையில், திருத்தூதர்கள் இயேசுவை நோக்கிக் கொண்டிருந்தனர். அவர் தமது எதிர்காலத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பேச்சு அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆறு நாட்களுக்கு முன்பு, சிலுவையைப் பற்றி வெளிப்படையாகப் பேசியதற்காக பேதுரு ஆண்டவரிடம் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் (காண்க: மத் 16:21–26). ஏனெனில், மெசியாவுக்குரிய மகிமையையும், ஒருவேளை தனக்கும் கிடைக்கக்கூடிய மகிமையையும் அவர் எதிர்பார்த்திருந்தார். எதிர்ப்புகள், துன்பங்கள், ஆபத்துகள் குறித்து அவர் சிந்திக்கவில்லை. அதைவிட, உண்மையான மகிமை என்றால் என்ன என்ற கேள்வியையும் அவர் எழுப்பவில்லை. இப்போது, இயேசுவின் உருமாற்றத்தில், இறைவனே தமது மகிமையை வெளிப்படுத்துகிறார். அந்த மகிமை பாதுகாக்கும், அரவணைக்கும் மேகத்தின் வடிவில் வெளிப்படுகிறது. அவர் தமது மகனை நமக்குக் காட்டி, "இவருக்குச் செவிசாயுங்கள்" என்று அழைக்கிறார். வாழ்க்கையின் உண்மையான பாதை, அவரைப் பின்பற்றி ஒன்றாக நடப்பதில்தான் கண்டறியப்படுகிறது. அந்தப் பாதையின் அழகு புதிய பரிமாணத்தையும், இதுவரை அனுபவிக்காத ஆழத்தையும் பெறுகிறது. அதனால், பேதுரு அந்த அனுபவத்தை நீட்டிக்க விரும்புகிறார்.

அவர் பெருந்தன்மையுடன், இயேசுவுக்கும், மோசேயுக்கும், எலியாவுக்கும் மூன்று கூடாரங்களைக் கட்ட முன்வருகிறார். அந்த உரையாடல் தொடர வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. ஆனால், அந்த உரையாடலை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களாக அல்ல, அதற்குள் நாமும் நுழைய வேண்டும். ஆண்டவரோடு இணைந்து திருவிவிலியத்தை வாசிக்கவும், நமது காலத்தின் நிகழ்வுகளை அவரது ஒளியில் புரிந்துகொள்ளவும், அவர் காட்டும் வழியில் முடிவுகளை எடுக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம். மனச்சோர்வையும் அச்சத்தையும் வெல்வதற்காகவே நாம் இங்கு வந்துள்ளோம். திருத்தூதர்களைத் தடுத்துவைத்த சந்தேகங்களைப் போலவே, நம்மைத் தடுத்து நிறுத்தும் சந்தேகங்களையும் அகற்றுவதற்காகவே நாம் இங்கு வந்துள்ளோம்.

இயேசு நம்மைத் தமது வரலாற்றில் பங்கேற்க அழைக்கிறார்; அதன் மூலம் மனிதகுல வரலாற்றில் புதிய பக்கங்களை எழுதுமாறு அழைக்கிறார். "அவருடைய முகம் சூரியனைப் போல ஒளிர்ந்தது; அவருடைய ஆடைகள் ஒளியைப்போல் வெண்மையாயின" (மத் 17:2) என்று நற்செய்தி கூறுவதைக் கேட்கும்போது, உயிர்த்தெழுந்த காலையின் அந்த முதல் விடியலை நாம் நினைவுகூர்கிறோம். அப்போது ஆண்டவரின் தூதர் கல்லறையை மூடியிருந்த கல்லை உருட்டி அகற்றி, உயிர்த்தெழுதலின் நற்செய்தியை அறிவித்தார். "அவருடைய தோற்றம் மின்னலைப் போலவும், ஆடை பனியைப் போல வெண்மையாகவும் இருந்தது" (மத் 28:3). அது ஒரு புதிய நாளின் ஒளியாகும். அந்த ஒளியை நோக்கி நாம் ஈர்க்கப்படுகிறோம். இருப்பினும், இருள் இன்னும் நம்மைச் சூழ்ந்திருக்கிறது; சில நேரங்களில் அது நமது உள்ளங்களிலும் குடிகொள்கிறது. புனித பிரான்சிஸ், புனித கிளாரா போன்ற புனிதர்களின் வாழ்விலும், தீமைக்கு நன்மையால் பதிலளித்த எண்ணற்ற சகோதரர் சகோதரிகளின் வாழ்விலும், அந்த விடியலின் ஒளியை நாம் காண்கிறோம். நாம் ஒருபோதும் தனிமையில் இல்லை! கடந்த சில நாட்களில் இதை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள். நீங்கள் ஒருவரையொருவர் சந்தித்தீர்கள்; ஒருவரையொருவர் கவனமாகக் கேட்டீர்கள். ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருக்கும் குரல்களின் ஆரவாரத்தைத் தாண்டி, உண்மையான உரையாடலின் கலையை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள். இன்று, தந்தையோடும், தமக்கு முன்னோடிகளாக இருந்த மோசே மற்றும் எலியாவோடும், தமது காலத்து சீடர்களோடும் உரையாடிக் கொண்டிருக்கும்போதே உருமாற்றம் பெற்ற இயேசுவை நாம் தியானிக்கிறோம். இந்தக் கேட்டு உணர்தலும், இறைத் திருவுளத்தை அறிந்து முடிவெடுப்பதுமான பயணத்திற்குள் நம்மை அழைத்துச் செல்லவே திருஅவை உள்ளது. நாம் யாருக்காக வாழ வேண்டும், எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளும் சமூகமே திருஅவையாகும்.

இறைவனின் குரலைப் பகுத்தறிய நாம் கற்றுக்கொள்ளும் இடம் திருஅவையாகும். அந்தக் குரல் ஒருபோதும் நமது தனிப்பட்ட கருத்துகளுடன் முழுமையாக ஒத்துப்போகாது. இயேசுவைப் பின்பற்றத் துணியும் அனைவரையும் தைரியமுள்ளவர்களாகவும், புதிய வழிகளை உருவாக்குபவர்களாகவும் மாற்றும் தூய ஆவியாருக்குக் கீழ்ப்படியத் திருஅவை நம்மை அழைக்கிறது. நாம் இயேசுவிடமிருந்தும், ஒருவரிடமிருந்தும் ஒருவர் பிரிந்து செல்லும்போது, நமது வாழ்வு தனது உண்மையான அழகை இழக்கிறது. ஆனால், வாழ்வளிக்கும் உறவுகளின் வழியாகவும், இறையழைப்பின் வழியாகவும் நாம் மீண்டும் உருமாற்றம் பெறுகிறோம். நீங்கள் வளர்க்கப்பட்டுள்ள பிரான்சிஸ்கன் ஆன்மீகம், இறைவனோடும் அவரது படைப்புகள் அனைத்தோடும் உள்ள அடிப்படை உறவுகளை மீண்டும் நிலைநிறுத்துவதில் மிகவும் விழிப்புணர்வுடைய ஆன்மீக மரபுகளில் ஒன்றாகும். இன்று, முன்பைவிட அதிகமாக, இந்த ஒன்றிணைந்த பயணமும் நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டியவை. இதனை முன்னிட்டு, எனது முதல் திருமடலின் தொடக்கத்தில் நான் எழுதியிருந்ததை நினைவுகூர விரும்புகிறேன்:

"ஒவ்வொரு தலைமுறையும் தங்களுக்குரிய காலத்தை வடிவமைக்கும் பொறுப்பைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு மனிதரின் மாண்பும் பாதுகாக்கப்படும், நீதி வளர்க்கப்படும், சகோதரத்துவம் சாத்தியமாகும் ஒரு இடமாக வரலாற்றை மாற்ற வேண்டும். ஆனால், ஒவ்வொரு காலமும் மனிதமற்றதான, மேலும் அநீதியான உலகத்தை உருவாக்கும் ஆபத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மனிதகுலம் தனது உண்மையான அடையாளத்தை இழக்கும் ஆபத்தில் இருக்கும் போதெல்லாம், நாம் கிறிஸ்தவர்கள் மனிதரான இறைவனை நோக்கி நமது பார்வையை உயர்த்துகிறோம். ஏனெனில், வாக்கு மனித உருவெடுத்த மறைபொருளில்தான், மனித வாழ்வின் உண்மையான அர்த்தமும் இரகசியமும் முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிவோம். இயேசு கிறிஸ்துவில் மனிதகுலத்தின் மகத்துவம் முழுமையாக வெளிப்படுகிறது. அவரே வழி, உண்மை, வாழ்வு; ஒவ்வொருவரும் தமது நிறைவை நோக்கி வளர்வதற்கான பாதையை அவர் திறந்து வைக்கிறார்."(Magnifica Humanitas, எண் 1)

புனித பிரான்சிஸின் மறைவுக்கு எட்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும், அவர் இன்னும் நம்மைத் தம்மிடம் ஈர்த்துக்கொண்டிருப்பதற்கான காரணம், இயேசுவின் வழியோடு இன்னும் ஆழமாக ஒத்துப்போகும் புதிய பாதையைக் கண்டடைவதற்காக, பழக்கமான வாழ்க்கை முறையைத் துறக்கத் துணிந்த அவரது மனித மாண்பின் மகத்துவமே ஆகும். பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ மரபைக் கொண்டிருந்த அசிசி போன்ற ஒரு நகரில்கூட, அவர் மேற்கொண்ட இந்தத் தேர்வு ஒரு புரட்சிகரமான செயலாகவே தோன்றியது. "புனித கிளாராவின் தேர்வு இன்னும் வியப்புக்குரியது. பிரான்சிஸைப் போல வாழவும், அந்தச் சகோதரர்களைப் போல ஒரு பெண்ணாக முழு சுதந்திரத்துடன் வாழவும் அவர் விரும்பினார்." (யூபிலி சிறப்பு சந்திப்பு, 04 அக்டோபர் 2025). இதுவே கிறிஸ்தவத்தின் ஆற்றல்; அதன் தொடக்கத்தின் ஆற்றலும், வரலாற்றில் மீண்டும் மீண்டும் தோன்றும் புதிய தொடக்கங்களின் ஆற்றலும் இதுவே.

அன்பிற்குரிய இளைஞர்களே,

இன்று ஐரோப்பாவும், உலகம் முழுவதும் உங்களை புதிய புனிதர்களாக உருவாக அழைக்கிறது. நற்செய்தியின் வார்த்தையை முழு மனதுடன் நம்புவதற்கு அஞ்சாதீர்கள். இயேசு கிறிஸ்து அளிக்கும் சுதந்திரத்தில், முழுமையான மனிதர்களாக வளருங்கள். "சகோதரி வறுமையை" மகிழ்ச்சியுடன் தழுவிக்கொள்ளுங்கள். உங்கள் இந்தச் சந்திப்பின் தலைப்பான "Go!" (செல்லுங்கள்!) என்பது வெறும் ஒரு கோஷமல்ல; அது ஒரு மறைப்பணிக்கான அனுப்புதல் ஆகும். நாம் எந்த வரைபடமும் இல்லாத பாதைகளில் பயணிக்க அனுப்பப்படுகிறோம். ஏனெனில், அந்தப் பாதைகள் மனித இதயத்திற்குச் செவிசாய்ப்பதாலும், தூய ஆவியாருக்குக் கீழ்ப்படிவதாலும், உயிர்த்தெழுந்த ஆண்டவர் நமக்கு முன்பாகச் சென்ற இடங்களிலெல்லாம் அவரைப் பின்பற்றுவதாலும் உருவாகின்றன.

செல்லுங்கள்! செல்லுங்கள்! இன்னும் சிறப்பாகச் சொல்வதானால், வாருங்கள், நாம் ஒன்றாகச் செல்வோம்!

சிலரின் அநீதியும் அகந்தையும், எண்ணற்ற இறைமக்களின் மாண்பையும் கனவுகளையும் பறித்துக்கொண்டிருக்கும் விளிம்பு நிலைகளுக்குச் செல்வோம். புனித பிரான்சிஸின் தூண்டுதலால், திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு விடுத்த எச்சரிக்கையை நினைவுகூருவோம்: "ஆண்டவரின் காயங்களைத் தொலைவில் வைத்துக்கொண்டு வாழும் கிறிஸ்தவர்களாக நாம் மாறிவிடும் சோதனையைத் தவிர்க்க வேண்டும். மனித துயரத்தைத் தொட்டு உணரவும், துன்புறும் மனிதர்களின் வேதனையால் காயம்பட்ட உடலைத் தொடவும் இயேசு விரும்புகிறார்."பிறரின் வேதனையால் காயப்பட்ட உடலைத் தொட அவர் நம்மை அழைக்கிறார். மனித துன்பங்களின் சுழலில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் தனிப்பட்ட அல்லது குழு பாதுகாப்பு வளையங்களைத் தேடுவதை நிறுத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்." (Evangelii Gaudium, 270) புனித பிரான்சிஸுக்கு நிகழ்ந்ததைப் போல, நம்மை நெருக்கமாக அறிந்தவர்கள்கூட நம்மைப் புரிந்துகொள்ளாமல் போகலாம். ஆனால், அதிகார மனப்பான்மையை மையமாகக் கொண்ட கலாச்சாரத்திலிருந்து விடுபடுவதும், மனிதர்களுக்கிடையே பிரிவினையை உருவாக்கும் சுவர்களை இடித்தழிப்பதும், நமது குடும்பங்களையோ, நமது ஊர்களையோ, நமது மரபுகளையோ காட்டிக்கொடுப்பதல்ல. மாறாக, பயமும் அறியாமையும் உருவாக்கிய போலி எதிரிகளிடமிருந்தும், மனிதர்கள் தங்களது குறுகிய எண்ணங்களை உலகின் மீது திணிக்க முயலும் வன்முறையிலிருந்தும் அவற்றை விடுவிப்பதாகும்.

இறைவனை நம்புவது என்பது, புனித பிரான்சிஸும் புனித கிளாராவும் கண்டறிந்ததைப் போல, சகோதரர் சகோதரிகளால் நிரம்பிய உலகை மீண்டும் கண்டறிவதாகும். அந்த உலகம் சுரண்டப்பட வேண்டியதோ, ஆதிக்கம் செலுத்தப்பட வேண்டியதோ அல்ல. அது அன்புடன் பாதுகாக்கப்படவும், பணிவோடு பணியாற்றப்படவும் வேண்டிய உலகாகும். அது பயந்து காக்கப்பட வேண்டிய உலகல்ல; அன்போடு அரவணைக்கப்பட வேண்டிய உலகாகும்.

அன்பிற்குரிய இளைஞர்களே,

அன்பின் நாகரிகத்தை உருவாக்க உங்களை அர்ப்பணித்துக்கொள்ளுங்கள். அதன் முதல் அடையாளங்களை, தன்னலமற்ற அர்ப்பணிப்பின் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளில் நீங்கள் ஏற்கனவே கண்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, இன்றும் மரணம் சூழ்ந்த மிகக் கொடூரமான சூழல்களில்கூட வாழ்வுக்காக அர்ப்பணித்து உழைக்கும் அமைதியின் பணியாளர்களைப் போல, நீங்களும் உலகை மாற்றுபவர்களாக இருங்கள். உங்களிடம் உள்ள மனித மாண்பின் சிறந்த ஆற்றல்கள் அனைத்தையும் ஒன்றிணையுங்கள்: உங்கள் கல்வி, உங்கள் திறமைகள், உங்கள் உழைப்பு, உங்கள் நட்புகள், உங்கள் அன்பு, உங்கள் செபம் – இவை அனைத்தையும் இணைத்து, புனித பிரான்சிஸின் கனவை பல்வேறு வழிகளில் உயிர்ப்பியுங்கள்.

அசிசியில் நீங்கள் கழித்த இந்த நாட்கள், உங்கள் நினைவில் என்றும் நிலைத்திருக்கட்டும். இங்கிருந்து நீங்கள் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்குத் திரும்பிச் செல்லும்போது, அது உருமாற்ற மலையிலிருந்து பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் கீழிறங்கிய அனுபவத்தைப் போல அமையட்டும். உங்கள் இல்லங்களுக்குத் திரும்பும் இந்தப் பயணம், ஆழ்ந்த சிந்தனையுடனும், எதிர்காலத்தை நோக்கிய நம்பிக்கையுடனும், இயேசு கிறிஸ்துவுக்கான உறுதியான அர்ப்பணிப்புடனும் அமையட்டும். ஆண்டவர் உங்களை நம்புகிறார்.அவர் உங்களைச் சார்ந்திருக்கிறார். அவர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

06 ஆகஸ்ட் 2026, 13:22