தேடுதல்

திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை!

திருவழிபாட்டு ஆண்டு என்பது கடந்த கால நிகழ்வுகளை வெறுமனே நினைவுகூர்வது அல்ல; மாறாக, திருஅவையில் என்றும் வாழும் கிறிஸ்துவின் மீட்புப் பணியை நிகழ்காலத்தில் அனுபவிப்பதாகும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஆகஸ்ட் 12 , புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தொடங்கினார். ‘மக்களினங்களின் ஒளி' என்ற திருஅவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் முதல் ஆவணமான, திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் (Sacrosanctum Concilium) என்ற தலைப்பில்,  திருவழிபாட்டு ஆண்டைக் குறித்து தனது சிந்தனைகளை திருப்பயணிகளுடன் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.

முதலில் திருவெளிப்பாடு நூலிலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவருமான கடவுளிடமிருந்தும், அவரது அரியணைமுன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.  இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்; அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்! அகரமும் னகரமும் நானே என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே. (திருவெளிப்பாடு 1:5-8)

முதலில், கிறிஸ்தவ விழாக்களின் சுழற்சியை “திருவழிபாட்டு ஆண்டு” (Annus Liturgicus) என்று அழைக்கும் முறை, இறை ஊழியரான அபே ப்ரோஸ்பர் கெராங்கேர் (1805–1875) அவர்களின் பணியின் வழியாக திருஅவையின் மொழிப் பயன்பாட்டில் பரவலாக அறிமுகமானது என்பதை நினைவுகூர வேண்டும்.

திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் அவர்கள் வெளியிட்ட Mediator Dei என்ற சுற்றுமடலில், திருவழிபாட்டு ஆண்டு என்பது கடந்த கால நிகழ்வுகளின் நிலையான பிரதிபலிப்போ, உயிரற்ற பிரதிநிதித்துவமோ அல்லது பழங்கால நிகழ்வுகளை வெறுமனே நினைவுகூர்வதோ அல்ல. மாறாக, திருவழிபாட்டு ஆண்டு என்பது திருஅவையில் என்றும் வாழும் கிறிஸ்துவே. இந்த மண்ணுலக வாழ்வில் அவர் தொடங்கிய அளவற்ற இரக்கத்தின் பாதையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறார். மனித ஆன்மாக்களைத் தமது மறையுண்மைகளுடன் தொடர்புகொள்ளச் செய்து, அவற்றின் வழியாக வாழச் செய்வதே அவருடைய நோக்கம். இந்த மறையுண்மைகள் எப்போதும் நிகழ்காலத்தில் நிலைத்திருந்து செயலாற்றுகின்றன” என்று கூறுகிறார் (III Divinum Officium et Annus Liturgicus, II Cyclus Mysteriorum).

எனவே, திருவழிபாட்டு ஆண்டு என்பது கிறிஸ்து வரலாற்றில் நிறைவேற்றுகின்ற மீட்புப் பணியைத் தொடர்ந்து நிகழ்காலத்தில் புதுப்பித்து அனுபவிப்பதாகும். இந்தக் காலச்சுழற்சியின் வழியாகப் பயணிக்கும் திருஅவை, ஆண்டவரின் மீட்புச் செயலோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. இதன் மூலம் அனைத்து விசுவாசிகளும் அவரது அருளால் நிரப்பப்படுகின்றனர் (காண்க: SC, 102c). நமக்காக இறந்து உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவைச் சந்திப்பதே திருஅவையின் நிலையான இலக்காகும். ஆகையால், திருஅவையின் வழிபாட்டு ஆண்டின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் கிறிஸ்துவின் பாஸ்கா மறையுண்மையைக் கொண்டாடுவதே அதன் மையமாகவும் உச்சமாகவும் திகழ்கிறது.

இதன் காரணமாகவே, திருஅவையின் “வழிபாட்டு ஆண்டின் அடித்தளமும் மையமும்” ஞாயிற்றுக்கிழமையே என்றும், அது “முதன்மையான திருவிழா நாள்” என்றும் திருச்சங்கத் தந்தையர்கள் கருதுகின்றனர் (காண்க: SC, 106).

பல நவீன மொழிகளில், ஞாயிற்றுக்கிழமைக்கான பெயரே அது dies Domini, அதாவது “ஆண்டவரின் நாள்” என்பதை வெளிப்படுத்துகிறது. “சூரியனின் நாள்” என்ற பொருள் கொண்ட Sunday, Sonntag போன்ற பெயர்கள் பயன்படுத்தப்படும் மொழிகளில்கூட, கிறிஸ்துவுடனான தொடர்பை நாம் காண முடிகிறது. ஏனெனில், ஒவ்வொரு மனிதரையும் ஒளிரச் செய்யும் உண்மையான “நீதியின் சூரியன்” கிறிஸ்துவே!

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் 1998 மே 31 அன்று வெளியிட்ட Dies Domini என்ற திருத்தூது மடலில், ஞாயிற்றுக்கிழமை ஆண்டவரின் நாள், திருஅவையின் நாள், மனிதனின் நாள், இறுதியாக “நாட்களின் நாள்” என்று கற்பிக்கிறார். அவர் கூறுகிறார்: “ஞாயிற்றுக்கிழமை வாரந்தோறும் நிகழும் பாஸ்கா விழாவாகும். கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த நாளை நினைவுகூர்ந்து, அதை நிகழ்காலத்தில் கொண்டாடும் நாளாகவும் அது விளங்குகிறது. எனவே, காலத்தின் பொருளை வெளிப்படுத்தும் நாளாகவும் ஞாயிறு அமைகிறது. உயிர்த்தெழுதலிலிருந்து தோன்றும் ஞாயிறு, மனிதனின் காலங்களான மாதங்கள், ஆண்டுகள், நூற்றாண்டுகள் அனைத்தையும் ஒரு திசைநோக்கிய அம்புபோல் ஊடுருவிச் சென்று, அவற்றை கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நோக்கி வழிநடத்துகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பது இறுதி நாளையும், நாம் அனைவரும் மீண்டும் உயிர்த்தெழப்போகும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நாளையும் முன்கூட்டியே உணர்த்துகிறது (எண். 75).

ஞாயிற்றுக்கிழமையைப் புனிதமாக்குவதற்கு திருப்பலியில் பங்கேற்பது இன்றியமையாதது. இறைவார்த்தையைக் கேட்பதும், கிறிஸ்துவின் திருவுடலைப் பெறுவதும், திருச்சங்கத் தந்தையர்கள் கூறுவதுபோல், convenire in unum – அதாவது “ஒன்றுகூடுதல்” என்பதைக் குறிக்கிறது (காண்க: SC, 106). இது விசுவாசிகளின் மகிழ்ச்சியான ஒன்றுகூடலாகும்.

இந்தத் திருப்பலி ஒன்றுகூடலில் கிறிஸ்தவ சமூகம் ஆண்டவரோடு கொண்டுள்ள தனது ஒன்றிப்பை வெளிப்படையாகக் காட்டுகிறது. கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் என்றும், திருஅவைக்கு உண்மையுள்ளவர்கள் என்றும் தங்களது அடையாளத்தைச் சாட்சியமாக வெளிப்படுத்துகின்றனர். இந்த ஒன்றுகூடலை வெறும் மெய்நிகர் அல்லது இணையவழி பங்கேற்பால் மாற்றிவிட முடியாது. அதேபோல், இது வெறுமனே பார்வையாளர்களாகக் கூடி நிற்கும் செயலுமல்ல. திருவழிபாட்டு ஒன்றுகூடல் என்பது சகோதரர் சகோதரிகள் அனைவரும் ஒன்றாக அழைக்கப்பட்டு, செயலில் பங்கேற்று இறைவனுக்கு நன்றி செலுத்துவதிலேயே நிறைவு பெறுகிறது. “கிறிஸ்துவை இறந்தோரிலிருந்து உயிர்த்தெழச் செய்ததன் மூலம் நம்மை உயிருள்ள நம்பிக்கைக்காகப் பிறப்பித்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக” அவர்கள் ஒன்றுகூடுகின்றனர் (1 பேது 1:3; SC, 106).

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்வதைத் தவிர்க்க முடியாதவர்கள்கூட தூய திருப்பலியில் பங்கேற்கும் வகையில் சிறந்த வாய்ப்புகளையும் சூழ்நிலைகளையும் ஏற்படுத்துவதற்கு அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அன்பிற்குரியவர்களே, ஞாயிற்றுக்கிழமைகளை மையமாகக் கொண்டு அமைந்துள்ள திருவழிபாட்டு ஆண்டிற்கு ஒரு வியப்பூட்டும் வரலாறு உள்ளது. அதில் திருஅவையின் நம்பிக்கையும் பக்தியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே, வாராந்திர பாஸ்கா விழாவான ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டத்துடன் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பாஸ்கா விழாவும் இணைந்தது. இது “மிக உயர்ந்த பெருவிழா” (SC, 102) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாஸ்கா விழா ஐம்பது நாட்கள் கொண்ட மகிழ்ச்சியான காலமாக விரிவடைந்து, தூய ஆவியானவரின் வருகையான  ஆவியானவர் பெருவிழாவில் நிறைவடைகிறது. இதற்கு முன்பாக தவக்காலம் அதன் தவம் மற்றும் மனமாற்றத்தின் தன்மையுடன் அமைக்கப்பட்டது (காண்க: SC, 109).

பின்னர், பாஸ்கா சுழற்சியின் மாதிரியைப் பின்பற்றி கிறிஸ்து பிறப்பு சார்ந்த திருவழிபாட்டு காலச்சுழற்சி வளர்ச்சியடைந்தது. இதன் மூலம் இறைவார்த்தையான கிறிஸ்துவின் மனுஉருவாதல், அவரது பிறப்பு மற்றும் உலகிற்கு அவர் வெளிப்படுத்தப்பட்ட மறையுண்மைகள் ஆகியவற்றை விசுவாசிகள் மீண்டும் அனுபவிக்க முடிந்தது.

அதன்பின்னர், திருஅவை பல்வேறு திருவழிபாட்டு காலங்களில் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் வணக்கத்திற்கும் இடமளித்தது. ஏனெனில், அவர் “தமது மகனின் மீட்புப் பணியோடு பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டவர்” (SC, 103). அதேபோல், “விண்ணகத்தில் இறைவனுக்குப் பரிபூரணப் புகழைப் பாடி, நமக்காகப் பரிந்துபேசுகின்ற மறைச்சாட்சிகளையும் பிற புனிதர்களையும்” நினைவுகூரும் வழக்கமும் திருவழிபாட்டு ஆண்டில் இடம்பெற்றது (SC, 104).

இவ்வாறு, திருவழிபாட்டு ஆண்டு மீட்பின் வரலாற்றை அருளடையாள வடிவில் மீண்டும் நம்முன் கொண்டு வருகிறது. மெசியாவின் வருகைக்கான எதிர்பார்ப்பிலிருந்து, பாஸ்கா மறையுண்மையின் முழுமை வரை, மேலும் எதிர்கால மகிமையின் முன்சுவை வரை விசுவாசிகளை அது வழிநடத்துகிறது.

திருவழிபாட்டு ஆண்டின் வழியாக, கிறிஸ்துவின் மறையுண்மையில் அடங்கிய மீட்பின் நிகழ்காலச் செயல்பாட்டைத் திருஅவை கொண்டாடுகிறது. இதனால் விசுவாசிகள் அந்த மறையுண்மையில் மேலும் ஆழமாகப் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

எனவே, திருவழிபாட்டு ஆண்டு என்பது திருஅவையின் ஒவ்வொரு மேய்ப்புப்பணி நடவடிக்கைக்கும் ஊக்கமளிக்கும் அடிப்படைக் கொள்கையாகவும், அப்பணிகளுக்கான இன்றியமையாத வழிகாட்டும் கட்டமைப்பாகவும் திகழ்கிறது.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

12 ஆகஸ்ட் 2026, 14:55