‘ம்லாடிஃபெஸ்ட்’ அனைத்துலக இளையோர் விழாவில் பங்கேற்ற இளைஞர்களின் ஒரு பகுதி ‘ம்லாடிஃபெஸ்ட்’ அனைத்துலக இளையோர் விழாவில் பங்கேற்ற இளைஞர்களின் ஒரு பகுதி  (Mladifest international youth festivals)

நிலையான மகிழ்ச்சியை கிறிஸ்துவில் தேட மெட்ஜுகோரியே இளைஞர்களுக்கு திருத்தந்தை அழைப்பு!

மெட்ஜுகோரியேவில் நடைபெற்ற ‘ம்லாடிஃபெஸ்ட்’ பன்னாட்டு இளைஞர் விழாவையொட்டி அனுப்பிய செய்தியில், உலகம் வழங்கும் தற்காலிக மகிழ்ச்சிகளை நாடாமல், கிறிஸ்துவைச் சந்திப்பதன் வழியாக நிலையான மகிழ்ச்சியைத் தேடுமாறு திருத்தந்தை இளைஞர்களை ஊக்குவித்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

தற்காலிக மகிழ்ச்சியின் மாயைகளைத் துரத்துவதற்குப் பதிலாக, கிறிஸ்துவைச் சந்திப்பதன் மூலம் நிலையான மகிழ்ச்சியைத் தேட வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இளைஞர்களை ஊக்குவித்துள்ளார்.

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் உள்ள மெட்ஜுகோரியேவில் இடம்பெறும் ‘ம்லாடிஃபெஸ்ட்’ பன்னாட்டு இளைஞர் விழாவின் தொடக்க நிகழ்வை முன்னிட்டு  அனுப்பிய செய்தியில் இவ்வாறு திருத்தந்தை கூறியுள்ளார்

திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிட்ட இந்தச் செய்தி, தொடக்கத் திருப்பலிக்கு முன்னதாக பேராயர் ஆல்டோ காவலி அவர்களால் வாசிக்கப்பட்டது.

புதிய வாழ்வு மற்றும் உண்மையான மகிழ்ச்சியின் ஊற்றாகிய கிறிஸ்துவிடம் திரும்புமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, செபம், இறைவார்த்தைக்குச் செவிமடுத்தல் மற்றும் அருள்சாதனங்கள் ஆகியவை ஆண்டவருடனான தனிப்பட்ட சந்திப்பிற்கு வழிவகுக்கின்றன என்றும், அவர் ஒவ்வொரு மனித இதயத்தையும் மனநிறைவு அடையச் செய்து, புதிய வாழ்வைத் தொடங்குவதற்கான வலிமையைத் தருகிறார் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உலகம் தரும் மகிழ்ச்சி நிலையற்றது என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, இயேசுவைப் பின்பற்றி உண்மையைத் தேடும் இளைஞர்களுக்கு, வாழ்க்கையின் சவால்களும் கவலைகளும் கிறிஸ்தவ நம்பிக்கையில் வளர்வதற்கான வாய்ப்புகளாக மாறும் என்று கூறியுள்ளார்.

இறுதியாக, நற்செய்தியின் ஒளிரும் சான்றுகளாகவும், சகோதரத்துவத்தை ஊக்குவிப்பவர்களாகவும், தங்கள் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் சமுதாயத்தில் அமைதியை உருவாக்குபவர்களாகவும் இளைஞர்கள் மாற வேண்டும் என்று கூறி திருத்தந்தை தனது செய்தியை நிறைவு செய்துள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

03 ஆகஸ்ட் 2026, 13:55