திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தேவதூதர்களின் அன்னை புனித மரியா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றியபோது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தேவதூதர்களின் அன்னை புனித மரியா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றியபோது  (@Vatican Media)

அசிசியில் திருத்தந்தையின் வருகை: இளைஞர்களுக்கு புதிய ஊக்கம்

அசிசியில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு இளைஞர் பிரதிநிதி ஃபிரான்செஸ்கோ வரோனே நன்றி தெரிவித்தார். திருத்தந்தையின் வருகை இளைஞர்களுக்கு நம்பிக்கையையும், நன்மையைத் தேர்ந்தெடுத்து கிறிஸ்துவைப் பின்பற்றும் துணிவையும் அளிப்பதாக அவர் கூறினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

அசிசியில் உள்ள தேவதூதர்களின் புனித மரியா பேராலயத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருப்பலி நிறைவேற்றியதைத் தொடர்ந்து, இளைஞர் பிரதிநிதியான ஃபிரான்செஸ்கோ வரோனே அவர்கள் திருத்தந்தைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். திருத்தந்தையின் வருகை “ஒரு அரவணைப்பு” என்றும், பேதுருவின் வாரிசு இறைமக்களுடன் அவர்களின் நம்பிக்கைகளிலும் போராட்டங்களிலும் இணைந்து நடக்கிறார் என்பதற்கான அடையாளம் என்றும் அவர் கூறினார்.

அசிசியில் கூடியிருந்த இளைஞர்கள் சார்பில் பேசிய வரோனே அவர்கள்,  திருத்தந்தையின் இருப்பு, நன்மையைத் தேர்ந்தெடுக்கவும், நற்செய்தியில் நம்பிக்கை கொள்ளவும், கிறிஸ்துவால் மனித இதயங்களை மாற்ற முடியும் என்று நம்பவும் இளைஞர்களை ஊக்குவிக்கிறது என்று குறிப்பிட்டார்.

இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் தனிமை மற்றும் பிளவு உணர்வுகளைச் சுட்டிக்காட்டிய அவர், அசிசியில் பெற்ற அனுபவம், இயேசு அனைவரையும் ஒன்றிணைக்கிறார்; எவரும் தனியாக இல்லை என்பதை உணர்த்தியதாகக் கூறினார்.

திருத்தந்தையின் ஆயர் விருதுவாக்கான “In Illo uno” – “அவரில் நாம் ஒன்றாய் இருக்கிறோம்” என்பதைச் சுட்டிக்காட்டிய ஃபிரான்செஸ்கோ வரோனே அவர்கள், கிறிஸ்துவில் “எவரும் அந்நியர் அல்லர்; எவரும் விலக்கப்பட்டவர்களும் அல்லர்” என்றும், அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகளாக சகோதரர், சகோதரிகளாக இருக்கிறோம் என்றும் கூறினார்.

கிறிஸ்துவைத் தேர்ந்தெடுக்கும் துணிவையும், உலகின் இரைச்சலுக்கு மத்தியில் அவரது குரலை அடையாளம் காணும் திறனையும், பிறருக்கான சேவையில் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கும் மனப்பாங்கையும் இளைஞர்கள் பெறுவதற்காகத் திருத்தந்தை செபிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, “இன்று நாங்கள் திருஅவையாக இருப்பதை நீங்கள் உணரச் செய்கிறீர்கள்” என்று கூறி திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

07 ஆகஸ்ட் 2026, 12:58