நற்செய்தியின் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, திருஅவையை அன்போடு புதுப்பிக்க அசிசி இளைஞர்களுக்கு திருத்தந்தை அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
அசிசியில் இடம்பெற்ற "GO! Franciscan Youth Meeting" நிறைவு நிகழ்வில், இளைஞர்கள் எழுப்பிய மூன்று முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இன்றைய உலகில் கிறிஸ்துவின் நம்பகமான சாட்சிகளாக வாழ வேண்டிய வழிமுறைகளை விளக்கினார்.
புனித பிரான்சிஸின் எளிமை, சகோதரத்துவம் மற்றும் அனைவரிடமும் நெருக்கமாக இருப்பது போன்ற பண்புகளை இளைஞர்கள் தங்கள் வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும் என்றும், மதம் பிரிவினைக்கு அல்ல, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான கருவியாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் உண்மையான நற்செய்தி வாழ்வு அடிப்படைவாதத்திற்கு எதிரானது; அது பணிவு, இரக்கம் மற்றும் அனைவரையும் வரவேற்கும் மனப்பான்மையை வளர்க்கும் என்று கூறினார்.
வாழ்நாள் முழுவதற்குமான அர்ப்பணிப்பைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், "என்றென்றைக்கும்" என்ற உறுதிப்பாடு மனிதனை கட்டுப்படுத்துவதில்லை; மாறாக, உண்மையான அன்பு மற்றும் இறையழைப்பை முழுமையாக வாழும் சுதந்திரத்தை வழங்குகிறது என்றார்.
இறைவன் ஒவ்வொருவரையும் அவரவர் அழைப்பில் ஒருபோதும் தனியே விடுவதில்லை; அவருடன் தொடர்ந்து நடந்து வழிநடத்துகிறார் என்பதையும் தனது வாழ்வனுபவத்தின் அடிப்படையில் பகிர்ந்துகொண்டார்.
திருஅவையின் சவால்களைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த திருத்தந்தை, புனித பிரான்சிஸைப் போல குறை கூறாமல், அன்புடன் திருஅவையைப் புதுப்பிக்கும் பணியில் ஒவ்வொருவரும் பங்கெடுக்க வேண்டும் என்றார்.
திருஅவை காயங்களைக் கொண்டிருந்தாலும், அது அனைவரையும் அரவணைக்கும் தாயாகவே இருக்கிறது என்றும், இறைவார்த்தை, அருளடையாளங்கள் மற்றும் சகோதர அன்பின் வழியாக கிறிஸ்து தொடர்ந்து திருஅவையைப் புதுப்பித்து வருகிறார் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
இறுதியாக, உயிர்த்தெழுந்த ஆண்டவரை நம் வாழ்வில் செயல்பட அனுமதிப்பதே உண்மையான நற்செய்தி அறிவிப்பாகும் என்று இளைஞர்களை ஊக்குவித்து செய்தியை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
