திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஆகஸ்ட் 05 , புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தொடங்கினார். ‘மக்களினங்களின் ஒளி' என்ற திருஅவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் முதல் ஆவணமான, திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் (Sacrosanctum Concilium) என்ற தலைப்பில், திருவழிபாட்டு மன்றாட்டின் திருஅவை சார்ந்த பரிமாணத்தைக் குறித்து தனது சிந்தனைகளை திருப்பயணிகளுடன் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.
முதலில் திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.
எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்; எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாயிருங்கள்; இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள். நான் பேசும்போது நற்செய்தியின் மறைபொருளைத் துணிவுடன் தெரியப்படுத்துவதற்கான வார்த்தைகளைக் கடவுள் எனக்குத் தந்தருளுமாறு எனக்காகவும் மன்றாடுங்கள். (எபேசியர் 6: 18 - 19)
இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்.
அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!
திருத்தூதர் பவுல் எடுத்துரைப்பதுபோல, தூய ஆவியாரே நமக்கு ஜெபிக்கக் கற்றுத் தருகிறார். பெந்தேகோஸ்தே நாளிலிருந்து, தூய ஆவியார் திருஅவையில் உறைந்து, அதன் ஒவ்வொரு செயல்பாட்டையும், குறிப்பாக ஜெபத்தையும் தூண்டி இயக்குகிறார். இயேசுவின் உயிர்த்தெலுக்குப் பிறகு எருசலேமில் உருவான தொடக்ககால சமூகத்தின் வாழ்வு, உயிர்த்த ஆண்டவரால் அளிக்கப்பட்ட தூய ஆவியாரிலான வாழ்வாகும். "அப்போதிருந்து - சங்கம் கூறுகிறது - பாஸ்கா மறைபொருளைக் கொண்டாடுவதற்காகத் திருஅவை ஒருபோதும் கூடிவரத் தவறவில்லை: 'மறைநூல் அனைத்திலும் தம்மைப் பற்றிக் கூறியுள்ளவற்றை' (லூக் 24:27) வாசித்தும், இயேசுவின் மரணத்தின் வெற்றியும் மாட்சியும் பிரசன்னமாக்கப்படும் நற்கருணையைக் கொண்டாடியும், கிறிஸ்து இயேசுவில் 'கடவுள் அளித்த விவரிக்க முடியாத கொடைக்காக அவருக்கு நன்றி செலுத்தியும்' (2 கொரி 9:15), தூய ஆவியாரின் வல்லமையால் 'அவரது மாட்சிமைக்குப் புகழாகவும்' (எபே 1:12) வாழ்ந்து வருகிறது" (SC, 6).
செயல்திறன் மற்றும் நுகர்வு மனப்பான்மை ஆதிக்கம் செலுத்தும் இன்றைய சூழலில், ஜெபம் என்பது பயனற்றதாகவும் முக்கியத்துவமற்றதாகவும் தோன்றலாம். அறிவியலும் தொழில்நுட்பமும் அனைத்துப் பதில்களையும் தருவதாகக் கூறிக்கொள்ளும் உலகில், ஜெபிப்பது உண்மையிலிருந்து தப்பிக்கும் ஒரு வழியாய்த் தோன்றக்கூடும். மேலும், பல கிறிஸ்தவக் குடும்பங்களில் ஜெப மரபு அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதில்லை. அதேவேளையில், பலர் ஜெபத்தை உளவியல் சார்ந்த, தனிப்பட்ட நலவாழ்வை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பல பயிற்சி முறைகளில் ஒன்றாகத் தவறாகப் புரிந்துகொள்ளும் ஆபத்தும் உள்ளது. ஆனால், செபம் நமது மனித வாழ்வின் அடிப்படைப் பரிமாணமாக இருப்பதால், அதன் உண்மையான பொருளையும் மதிப்பையும் மீண்டும் கண்டறிய வேண்டியது இன்றியமையாததாகும்.
திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் என்னும் இந்த ஏடு இத்தேவையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்தால் ஒப்புதலளிக்கப்பட்ட இந்த முதல் ஆவணத்தை வெளியிட்ட திருத்தந்தை புனித ஆறாம் பவுல், இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறினார்: "கடவுளுக்கே முதல் இடம்; ஜெபமே நமது முதல் கடமை; நமக்கு அளிக்கப்படும் இறைவாழ்வின் முதல் ஊற்று வழிபாடே; நமது ஆன்மீக வாழ்வின் முதல் பள்ளியும் அதுவே" (உரை, புனித பேதுரு பேராலயம், டிசம்பர் 4, 1963).
உண்மையிலேயே, இந்த ஏட்டில் (Costituzione) "ஜெபம்" என்ற சொல் ஒட்டுமொத்த வழிபாட்டு முறையையும் (Liturgy) குறிக்கிறது. இந்தப் பார்வை மிகவும் தீர்க்கமானது; ஏனெனில் இதுவே வழிபாட்டு முறை சீர்திருத்தத்தை வழிநடத்தி, இறைமக்களின் தீவிரப் பங்கேற்பை அதன் முதன்மைத் தூணாக மாற்றியது. வழிபாட்டு முறை என்பது முதன்மையாகவும் முக்கியமாகவும் ஒரு சந்திப்பின் இடமாக வெளிப்படுத்தப்படுகிறது: "தூய ஆவியால் அருள்பொழிவு செய்யப்பட்டு, மனித உருவெடுத்த வார்த்தையான" (SC, 5) தம் மகனில் மனிதகுலத்தை நெருங்கி வரும் கடவுளின் தொடக்கமுயற்சியாகவும், அதற்கு நாம் "கிறிஸ்து வழியாக, கிறிஸ்துவோடு, கிறிஸ்துவில், தூய ஆவியாரின் ஒன்றிப்பில்", அதாவது "கிறிஸ்து தாமே தம் உடலோடு இணைந்து தந்தையிடம் எழுப்பும் ஜெபத்தின்" (SC, 84) மூலமாகப் பதிலளிப்பதாகவும் அது அமைகிறது.
இக்காரணத்தினாலேயே, நற்கருணையிலிருந்து பிரிக்க முடியாததும், திருஅவையின் அன்றாடப் பொதுச் செபமுமான திருப்புகழ்மாலை, கிறிஸ்தவர்களின் அனைத்துச் செப வாழ்விலும் ஆழமாக ஊடுருவி, அதற்கு உயிரூட்டி, வழிநடத்தி, அதன் வெளிப்பாடாக இருந்து, இறைமக்களின் ஆன்மீக வாழ்வை வளப்படுத்த வேண்டும் என்று புனித திருத்தந்தை ஆறாம் பவுல் மிகுந்த ஆவலுடன் விரும்பினார் (cf. Apostolic Constitution Laudis canticum).
இவ்விருப்பம் நிறைவேற, 'திருப்புகழ்மாலை’ திருமுழுக்கு பெற்றவர்களின் மற்றும் சமூகங்களின் அன்றாட வாழ்வில் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழப்பட வேண்டும். ஜெபிக்கக் கற்றுக்கொள்ள விரும்பும் பலருக்கு, முக்கியமாகத் திருமுழுக்குப் பெற ஆயத்தமாவோருக்கு (Catechumens), இது கிறிஸ்தவ ஜெபத்தின் வழியையும் பள்ளியையும் வழங்க முடியும்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாளும், நற்கருணையும் திருப்புகழ்மாலையும் திருஅவையின் வாழ்வின் மூச்சுக் காற்றாக இருந்து, தூய ஆவியாரை அதன் உடல் முழுவதும் இயங்கச் செய்கின்றன. இந்த ஜெபத்தில், கிறிஸ்து "மனித சமுதாயம் முழுவதையும் தம்மோடு இணைத்துக்கொண்டு, இறைப்புகழின் இந்தப் பாடலைத் தாமே பாடுவதில் அவர்களையும் பங்கெடுக்கச் செய்கிறார்" (SC, 83). இவ்வாறாக, நாளுக்கு நாள் நாம் பாஸ்கா மறைபொருளோடு அதிகமாய் ஒன்றிணைக்கப்பட்டு, கிறிஸ்துவின் உருவத்திற்கு ஒப்பாய் மாற்றப்படுகிறோம்.
புனித அகுஸ்தினார் கூறுகிறார்: «இரக்கத்தை வேண்டி நாம் செபத்தில் இறைவனை நோக்கிப் பேசும்போது, அவரிடமிருந்து மகனைப் பிரித்துப் பார்க்கக்கூடாது. அதுபோல, மகனின் உடலாகிய திருஅவை செபிக்கும்போது, அது தன் தலைவராகிய கிறிஸ்துவிடமிருந்து தன்னைப் பிரித்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், இறைமகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே தம் உடலின் ஒரே மீட்பர். அவர் நமக்காகச் செபிக்கிறார்; நம்மில் செபிக்கிறார்; நம்மால் செபிக்கப்படுகிறார். நம் தலைமைக்குருவாக அவர் நமக்காகச் செபிக்கிறார்; நம் தலைவராக நம்மில் செபிக்கிறார்; நம் இறைவனாக நம்மால் செபிக்கப்படுகிறார். ஆகையால், நமது சொற்களை அவரிலும், அவருடைய சொற்களை நம்மிலும் அடையாளம் கண்டுகொள்வோமாக.(Enarrationes in Psalmum 86: PL 37, 1081).
நற்கருணையோடு பிரிக்க முடியாத உறவில் இருந்து, அதன் ஒளியை நாள் முழுவதும் நீட்டிக்கும் திருப்புகழ்மாலை , நமது அன்றாட வாழ்வின் காலத்தைப் புனிதப்படுத்துகிறது. காலையில், நம்பிக்கையுடனும் நன்றியுணர்வுடனும் நாளைத் தொடங்குகிறோம்; நண்பகலில், நமது உழைப்பின் நடுவே இறைநம்பிக்கையில் நிலைத்திருக்க வல்லமையை வேண்டுகிறோம்; மாலையில், நமது பணிகளை முடித்தபின், மாலைப்புகழ் (Vespers) சூரியன் மறையும் வேளையை இறைநினைவாக்குகிறது; இரவில், இறைவனின் அமைதியில் நம்மை ஒப்படைத்து உறங்கச் செல்கிறோம். ஒவ்வொரு திருப்புகழ்மாலையும் நம்பிக்கையின் ஒரு செயலாகும். இம்மண்ணுலகப் பயணத்தில், ஆண்டவரின் மகிமைமிக்க மீள்வருகையைத் திருஅவையோடு இணைந்து விழிப்புடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.
இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
