தேடுதல்

புனித அகத்தா புனித அகத்தா  

புனித அகத்தா விழாவில் திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் பரோலின்!

புனித அகத்தா மறைசாட்சியாரின் அருளிக்கங்கள் கட்டானியா பெருநகருக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டு 900 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஆகஸ்ட் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு விழாக்களில் தமது பிரதிநிதியாக திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களை திருத்தந்தை நியமித்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

புனித அகத்தா மறைசாட்சியாரின் அருளிக்கங்கள் சிசிலி தீவின் கட்டானியா பெருநகருக்கு திரும்பக் கொண்டுவரப்பட்டு 900 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு விழாக்களில், தமது பிரதிநிதியாகத் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களை  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் நியமித்துள்ளார்.

திருத்தந்தை அவர்கள், 2026 ஜூலை 13ஆம் தேதியிட்ட தமது கடிதத்தில் புனித அகத்தாவின் வாழ்க்கையைப் பாராட்டியுள்ளதுடன், கிறிஸ்துவின் மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த விசுவாசம், கற்பு, துணிவு மற்றும் தன்னலமற்ற அன்பு ஆகியவை, இன்றும் அனைவருக்கும் சிறந்த முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது மறைச்சாட்சியம், வன்முறையின் மீது அருளும், அச்சத்தின் மீது விசுவாசமும், மரணத்தின் மீது அன்பும் பெறும் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்டானியா நகரின் ஆன்மீகப் பாதுகாவலியும் தாயுமான புனித அகத்தா, இறைநம்பிக்கை மற்றும் அன்புடன் நற்செய்திக்கேற்ப வாழ மக்களை அழைக்கிறார் என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய நாள்களில் இடம்பெறும் சிறப்பு விழாக்களில் கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பங்கேற்பார். மேலும், கட்டானியா பேராயர், இறைமக்கள் மற்றும் குடிமைச் சமூக அதிகாரிகளுக்கு திருத்தந்தையின் வாழ்த்துகளையும் ஆசீரையும் வழங்குவார்.

புனித அகத்தாவின் பரிந்துரையால் இவ்விழாக்கள் மிகுந்த ஆன்மீகப் பலன்களைத் தர வேண்டும் என்றும் திருத்தந்தை லியோ இறைவேண்டல் செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

11 ஆகஸ்ட் 2026, 13:38