காங்கோவில் எபோலா பாதிப்புக்குள்ளானோருக்கு அனைத்துலக உதவி தேவை – திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்துலக சமூகம் உதவ முன்வர வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 23, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக தனது ஆறுதலையும் செபங்களையும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் உள்ளூர் சமூகங்களையும் இணைத்து, பல மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அனைத்துலக சமூகத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
தற்போது, எபோலா வைரஸின் புண்டிபுக்யோ வகை தொற்றால் 5,300 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை எபோலாவுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை.
ஆகஸ்ட் 18 அன்று சம்போயே பகுதியில் உள்ள திறந்தவெளி தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்த சுரங்கம் ஏற்கனவே மூடப்பட்டிருந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
