இறைவனின் அருள்விருந்தில் அனைவருக்கும் இடமுண்டு : திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
கானானியப் பெண்ணின் ஆழமான நம்பிக்கையை எடுத்துரைத்த திருத்தந்தை பதினான்காம் லியோ, இறையருள் ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கடந்து செயல்படுவதை திருஅவை உணர வேண்டும் என்றும், மனித மாண்பை மீறும் பாகுபாடுகள் மற்றும் தடைகளை அகற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
ஆகஸ்ட் 16, ஞாயிறன்று, காஸ்தல் கந்தோல்போவில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, துன்புற்றிருந்த தனது மகளுக்காக இயேசுவின் உதவியை நாடிய கானானியப் பெண்ணின் நம்பிக்கையை சுட்டிக்காட்டினார்.
அந்நிய நாட்டுப் பெண்ணாக இருந்தபோதிலும், இயேசுவிடம் தன் மகளின் நல்வாழ்விற்காகத் தொடர்ந்து மன்றாடிய அப்பெண்ணின் தளராத நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இயேசுவின் உடனடிப் பதில் கிடைக்காத நிலையிலும், அவரது நம்பிக்கை குன்றாமல் நிலைத்து நின்றதை எடுத்துக்காட்டினார்.
இந்த நிகழ்வு இன்றைய திருஅவைக்கும் முக்கியமான பாடத்தை வழங்குகிறது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இறைவன் செயல்படும் விதத்தைக் கண்டு வியப்படையவும், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட எல்லைகளுக்கு அப்பால் கிறிஸ்துவின் அமைதியைப் பறைசாற்றவும் திருஅவை தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கானானியப் பெண்ணிடமிருந்து கிறிஸ்தவர்கள் பணிவையும் விடாமுயற்சியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அவரது நம்பிக்கை, “இறைவனின் அருள்விருந்தில் அனைவருக்கும் இடமுண்டு” என்பதையும், இறைவனின் பிள்ளைகள் எவரும் புறக்கணிக்கப்படவோ, வெறும் சிறு துணுக்குகளுடன் விடப்படவோ கூடாது என்பதையும் கற்றுத்தருகிறது என்றும் கூறினார்.
இறுதியாக, சமத்துவமின்மை, பாகுபாடு மற்றும் மனித மாண்பை மிதிக்கும் தடைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறிய திருத்தந்தை, அமைதியைத் தேடும் இன்றைய உலகில் நம்பிக்கையை இழக்காமல் அன்புடன் செயல்படுமாறு நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
