தேடுதல்

நம் இருண்ட தருணங்களிலும் இயேசு நம்மைக் கைவிடுவதில்லை: திருத்தந்தை

இயேசுவை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ளும்போது, அவரிடமிருந்து அமைதியையும், ஒளியையும், நமது வாழ்வுப் பயணத்திற்குத் தேவையான வலிமையையும் பெற முடியும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

“ஆண்டவரின் பிரசன்னம் அனைத்தையும் மாற்றுகிறது” என்றும், எத்தகைய சூழலிலும் அஞ்சாமல், நம் பார்வையை இயேசுவிடமிருந்து விலக்காமல் இருப்பது அவசியம் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் 09, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, அன்றைய திருவழிபாட்டு நற்செய்தியில் இடம்பெற்றுள்ள இறைவார்த்தைகளை மேற்கோள்காட்டி, இயேசு தமது சீடர்களுடன் புயலுக்கு மத்தியில் தண்ணீர்மீது நடந்து வந்த நிகழ்வை மையமாகக் கொண்டு தமது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

தண்ணீர்மீது இயேசு நடந்து வருவதைக் கண்ட சீடர்கள் அச்சமடைந்தபோது, இயேசு அவர்களிடம், “துணிவோடிருங்கள்; நான்தான் அஞ்சாதீர்கள்” என்று கூறியதை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, பேதுரு இயேசுவை நோக்கி தண்ணீரில் நடக்கத் தொடங்கியதையும், பின்னர் அச்சமடைந்து மூழ்கியபோது இயேசு அவரைக் காப்பாற்றியதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வு சீடர்களின் இதயத்திலிருந்து, “நீர் உண்மையாகவே இறைமகன்” என்ற நம்பிக்கை அறிக்கையை வெளிக்கொணர்ந்ததாக குறிப்பிட்ட திருத்தந்தை, புயலுக்கு மத்தியில் சீடர்கள் இயேசுவின் அமைதியை அனுபவித்ததைப் போல, நம்பிக்கை கொண்டவர்கள் வாழ்க்கையின் சவால்களுக்கு நடுவிலும் கிறிஸ்துவின் அமைதியைப் பெற முடியும் என்று எடுத்துக்காட்டினார்.

மேலும், இந்த நிகழ்விலிருந்து இரண்டு சிந்தனைகளை பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, முதலாவது, வெற்றியை எதிர்கொள்ளும்போது பெருமை கொள்ளக்கூடாது என்றும், இரண்டாவது, பிரச்சினைகளுக்கு முன் உதவியற்றவர்களாக உணரும்போதும், நமது முயற்சிகள் பின்னடைவை ஏற்படுத்துவதாகத் தோன்றும்போதும் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

“எந்தச் சூழ்நிலையிலும் இயேசு நம்மைக் கைவிடுவதில்லை” என்று கூறிய திருத்தந்தை, இறைவேண்டல், திருவருட்சாதனங்கள் மற்றும் இறைவார்த்தையைக் கேட்பதன் வழியாக இயேசுவை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ளும்போது,

அவரிடமிருந்து அமைதியையும், ஒளியையும், நமது வாழ்வுப் பயணத்திற்குத் தேவையான வலிமையையும் பெற முடியும் என்று எடுத்துரைத்தார்.

இறுதியாக, நம்பிக்கையின் முன்மாதிரியான அன்னை கன்னி மரியா, இறைவனில் முழுமையான நம்பிக்கையுடன் வாழ நமக்கு துணைபுரிய வேண்டும் என்று இறைவேண்டல் செய்த திருத்தந்தை, திருத்தூது ஆசீரை வழங்கி தனது மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

10 ஆகஸ்ட் 2026, 13:48