திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ   (@VATICAN MEDIA )

மரியாவின் விண்ணேற்பு நமது நிலைவாழ்வின் இலக்கை வெளிப்படுத்துகிறது : திருத்தந்தை

இன்று மரியாவில் நாம் மகிழ்ச்சியுடன் காணும் வாழ்வின் நிறைவு, காலத்தின் முடிவில் நமக்கும் காத்திருக்கிறது”

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

இறைவனில் நிறைவான நிலைவாழ்வே மனிதர்களின் இறுதி இலக்கு என்றும், அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா கத்தோலிக்க இறையியலிலும் மக்களின் பக்தி வாழ்விலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 15, சனிக்கிழமையன்று, காஸ்தல் கந்தோல்போவில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை,  மரியாவின் விண்ணேற்பு கத்தோலிக்க இறையியலிலும் மக்களின் பக்தி வாழ்விலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விழா  என்று எடுத்துக்காட்டினார்.

மரியாவின் விண்ணேற்பு தொடர்பான இரு முக்கிய கலைமரபுகளை எடுத்துரைத்த திருத்தந்தை,  பழமையான மரபில், மரியா துயில்கொள்ளும் நிலையில், அவரைச் சுற்றி திருத்தூதர்கள் செபிப்பதையும், உயிர்த்தெழுந்த இயேசு அவரது ஆன்மாவைத் தம் கரங்களில் ஏந்துவதையும் காணலாம் என்றும், இது, இறந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே மனிதகுலத்தை நிலைவாழ்வை நோக்கி வழிநடத்துகிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலைத் திருஅவையில் உருவான மற்றொரு மரபில், ஒளி, வானதூதர்கள் மற்றும் புனிதர்களால் சூழப்பட்ட விண்ணக மகிமையில் மரியா சித்தரிக்கப்படுகிறார் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இது, மரியா உடலோடும் ஆன்மாவோடும் முழுமையான மனிதராக விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பதை வெளிப்படுத்துகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

“இன்று மரியாவில் நாம் மகிழ்ச்சியுடன் காணும் வாழ்வின் நிறைவு, காலத்தின் முடிவில் நமக்கும் காத்திருக்கிறது” என்று கூறிய திருத்தந்தை, உயிர்த்தெழுந்த கிறிஸ்து நமது அழிவுறும் உடல்களைத் தமது மகிமையான உடலைப் போன்று மாற்றுவார் என்றும், நம்பிக்கையாளர்கள் “முடிவில்லா மகிழ்வில்” என்றென்றும் வாழ்வார்கள் என்றும் வலியுறுத்தினார்.

இறுதியாக புனித பூமி, உக்ரைன் மற்றும் இரஷ்யா மக்களுக்காகவும், துன்புறுத்தலுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்களுக்காகவும், அண்மைய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கொலம்பியா மக்களுக்காகவும்  இறைவேண்டல் செய்த திருத்தந்தை, திருத்தூது ஆசீரை வழங்கி மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

17 ஆகஸ்ட் 2026, 12:02