“நமது நம்பிக்கைகளுக்குள் முடங்கிவிடாமல், கிறிஸ்துவுக்கு திறந்த மனதுடன் இருப்போம்” – திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
திருஅவையின் வாழ்விலும், நமது தனிப்பட்ட வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்த, இயேசு கிறிஸ்துவுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் அதைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.
ஆகஸ்ட் 23, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, “நமது சொந்த நம்பிக்கைகள் மற்றும் சமய உறுதிப்பாடுகளுக்குள் முடங்கிவிடாமல், கிறிஸ்துவுடன் உண்மையான உறவை வளர்த்துக்கொள்ளத் திறந்த மனதுடன் இருப்போம்” என்று அழைப்பு விடுத்தார்.
அன்றைய திருவழிபாட்டு நற்செய்தியில் இடம்பெற்றுள்ள “நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று இயேசு தம் சீடர்களிடம் கேட்ட இறைவார்த்தைகளை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இக்கேள்வி ஒவ்வொரு காலத்திலும் உள்ள சீடர்களுக்கும், நம் ஒவ்வொருவருக்கும் அடிப்படையான கேள்வியாகும் என்று எடுத்த்துக்காட்டினார்.
மேலும், கிறிஸ்தவ நம்பிக்கை என்பது நாம் ஏற்கனவே அறிந்தவற்றிலேயே நின்றுவிடுவது அல்ல; மாறாக, கிறிஸ்துவை மேலும் நெருக்கமாக அறிந்து, அவருடனான நட்பின் மூலம் நமது வாழ்வைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்வதாகும் என்றும் குறிப்பிட்டார்.
கிறிஸ்துவுடனான நட்பை ஒவ்வொரு நாளும் புதுப்பிப்பது, நாம் எதிர்பார்க்காத புதிய பாதைகளில் பயணிக்கவும், தனிப்பட்ட வாழ்விலும் திருஅவையின் மேய்ப்புப்பணியிலும் புதிய முடிவுகளை எடுக்கவும் அழைப்பு விடுக்கக்கூடும் என்று திருத்தந்தை கூறினார்.
“எப்போதும் செய்து வருவதையே தொடர்ந்து செய்வது போதுமானது” என்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, “எனக்கு ஆண்டவர் யார்? நான் அவரை உண்மையாக அறிந்திருக்கிறேனா? இன்று அவருடைய நற்செய்தி என்னிடம் எதைக் கேட்கிறது? நான் எத்தகைய அடிகளை எடுத்துவைக்கவும், எத்தகைய முடிவுகளை மேற்கொள்ளவும் அழைக்கப்படுகிறேன்?” என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
செபத்திலும், நற்செய்தியைத் தியானிப்பதிலும், மேலும் நம் சகோதரர் சகோதரிகளின் துயரங்களையும் தேவைகளையும் எதிர்கொள்ளும் தருணங்களிலும், இக்கேள்விகளுக்கான பதில்களை நாம் கண்டறிய முடியும் என்று திருத்தந்தை எடுத்துக்கட்டினார்.
இயேசு வெறுமனே வரலாற்றில் வாழ்ந்த ஒரு பெரிய மனிதர் அல்ல என்று குறிப்பிட்ட திருத்தந்தை, தந்தையின் அன்பிற்குள் நம்மை அழைத்துச் சென்று, நமது வாழ்வையும் நாம் வாழும் உலகையும் மாற்ற வந்த இறைமகன் கிறிஸ்து என்பதை நமது அன்றாட வாழ்வில் கண்டறிய வேண்டும் என்று அழைப்பு விடுத்து தனது மூவேளை இறைவேண்டல் உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
