மனிதகுலத்தின் பசியை உண்மையாக நிறைவு செய்பவர் கிறிஸ்து: திருத்தந்தை

மனிதனின் உடல் பசியை மட்டுமல்ல, உண்மை மற்றும் வாழ்விற்கான ஆன்மீக ஏக்கத்தையும் கிறிஸ்துவே உண்மையாக நிறைவு செய்கிறார் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மனிதனின் உடல் பசியை மட்டுமல்ல, உண்மை மற்றும் வாழ்விற்கான ஆழ்ந்த ஆன்மீக ஏக்கத்தையும் கிறிஸ்துவே உண்மையாக நிறைவு செய்கிறார் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் 02, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, அன்றைய திருவழிபாட்டு நற்செய்தியில் இடம்பெற்றுள்ள இறைவார்த்தைகளை மேற்கோள்காட்டி, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பெருக்கி ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளித்த இயேசுவின் அற்புதங்கள் வெறும் அதிசயச் செயல்கள் அல்ல; மாறாக, இறையாட்சியின் வருகையையும், உலகிற்குக் கொண்டுவந்த மீட்பையும் வெளிப்படுத்தும் இறையடையாளங்கள்  என்று குறிப்பிட்டார்.

அப்பம் பெருக்கும் அற்புதம், பசியால் வாடிய மக்களுக்கு உணவளித்த நிகழ்வாக மட்டுமல்ல; மாறாக, இறைவனுடனான சந்திப்பே மனித வாழ்விற்கு உண்மையான ஊட்டமளிக்கும் அனுபவம் என்று எடுத்துக்காட்டினார்.

மேலும் அனைவரும் வயிறார உண்டதோடு, பன்னிரண்டு கூடைகள் நிறையும் அளவிற்கு உணவு மீதமிருந்தது, கிறிஸ்துவில் மனிதனின் தேவைகள் நிறைவாகப் பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் கூறினார்.

பேராசை என்பது மனிதனை ஆன்மீக ரீதியில் நோயுறச் செய்யும் ஒரு தீய மனநிலை என்று குறிப்பிட்ட திருத்தந்தை, செல்வத்தின் மீது கொண்டுள்ள அளவுகடந்த பற்றுதல், பசியாலும் தாகத்தாலும் துன்புறும் மக்களின் வேதனையை உணர முடியாத அளவுக்கு மனிதனின் மனச்சாட்சியை மழுங்கடிக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

போர், அகந்தை மற்றும் சுயநலம் நிறைந்த உலகில், இயேசு வானத்தை நோக்கி நன்றி கூறி அப்பங்களைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்து மக்களுக்குப் பகிர்ந்தளித்த அன்பின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறு திருத்தந்தை நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அப்பம் பெருக்கும் இந்த அன்பின் செயலானது, கடைசி இராவுணவில் இயேசு தமது உடலையும் இரத்தத்தையும் உலகிற்கு அளித்த நற்கருணை மறைப்பொருளில் நிறைவு பெறுகிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நற்கருணையின் அருளைப் பெற்ற ஒவ்வொரு விசுவாசியும் அதன் அழகை அன்றாட வாழ்க்கையில் செயல்களின் வழியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உணவைப் பகிர்ந்து கொள்ளும் முன் இறைவனுக்கு நன்றி செலுத்தும் பழக்கத்தை வளர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, அன்பின் அன்னை மரியாளின் பரிந்துரையில் அனைவரையும் ஒப்படைத்து அன்பிலும் பகிர்விலும் வளர அனைவருக்கும் இறையருள் கிடைக்க வேண்டுமென இறைவேண்டல் செய்து  தனது மூவேளை செப உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

03 ஆகஸ்ட் 2026, 13:32