தேடுதல்

உண்மையான சுதந்திரம் மனித மாண்பையும் அமைதியையும் காக்கிறது!

ஆகஸ்ட் 22ஆம் நாள் சான் மரினோ குடியரசின் பொது அரண்மனையில் அதிகாரிகள் மற்றும் குடிமைச் சமூகத்தினரைச் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ, “சுதந்திரம்” என்பது தனிமனித மாண்பு, மனச்சான்றின் உரிமை, ஒன்றிப்பு மற்றும் உரையாடலில் நிறைவேறுகிறது என்று வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஆகஸ்ட் 22, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சான் மரினோ குடியரசுக்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள பொது அரண்மனையில், அந்நாட்டின் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் குடிமைச் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றினார். அச்சந்திப்பின்போது இடம்பெற்ற உரை

அன்பிற்குரிய தலைவர்களே, அதிகாரிகளே, சகோதரர் சகோதரிகளே,

உங்கள் நாட்டிற்கு வருகை தருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உலகின் மிகப் பழமையான குடியரசாக விளங்கும் சான் மரினோவின் பாரம்பரியம் நான்காம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை செல்கிறது. 1982ஆம் ஆண்டு புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களும், 2011ஆம் ஆண்டு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களும் மேற்கொண்ட பயணங்களைத் தொடர்ந்து, திருத்தந்தையர் ஆட்சி பீடத்திற்கும் சான் மரினோவிற்கும் இடையிலான ஆழமான உறவை உறுதிப்படுத்தும் வகையில் எனது வருகை அமைகிறது.

உங்கள் குடியரசின் இலட்சியமான “Libertas – சுதந்திரம்” என்பது அரசியல் சுதந்திரத்தை மட்டும் குறிக்கவில்லை. உண்மையான குடிமைச் சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் மதிப்பதிலும், அவரது தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும் தொடங்குகிறது. இந்தச் சுதந்திரம் இறைவனிடமிருந்து கிடைத்த கொடை; அவரது குரல் ஒவ்வொரு மனிதரின் மனச்சான்றிலும் ஒலிக்கிறது.

எனவே, சுதந்திரத்தைப் பாதுகாப்பது என்பது மனச்சான்றின் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாகும். உண்மையைத் தேடி, தங்கள் மனச்சான்றுக்கு உண்மையாக வாழ்ந்து, துன்பங்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளும் அனைவருடனும் நாம் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறோம். ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாவலரான புனித தோமஸ் மோர் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

மேலும், சுதந்திரம் என்பது தன்னையே வழங்குதல், ஒன்றிப்பு, சந்திப்பு மற்றும் உரையாடல் ஆகியவற்றில் நிறைவேறுகிறது. கிறிஸ்தவப் பார்வையில், சுதந்திரமும் ஒன்றிப்பும் ஒன்றோடொன்று இணைந்தவை. உங்கள் நாட்டின் நிறுவுநர்களான புனித மரினஸ் மற்றும் புனித லியோ, சுதந்திரமான மற்றும் அமைதியான சமூகத்தை உருவாக்கியவர்களாகத் திகழ்ந்தனர். இறைவாக்கினர் நெகேமியா எருசலேமை மறுகட்டியெழுப்பியதைப் போல, அவர்கள் மக்களிடையே உறவுகளையும் ஒன்றிப்பையும் உருவாக்கினர்.

“Libertas” என்பது அமைதியைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாகப் பங்கேற்பதையும் குறிக்கிறது. இதற்காக உங்கள் நாட்டின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். குறிப்பாக, அனைத்துலக உறவுகளை வளர்ப்பதற்கும் நாடுகளுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும் தூதரகமும் பல்தரப்பு ஒத்துழைப்பும் முக்கியமான வழிகளாகும். சிரமமான தரப்புகளுடன்கூட உரையாடி, பணிவுடனும் பொறுமையுடனும் நல்லெண்ணத்தை வளர்ப்பதன் மூலம் அமைதியை உருவாக்க வேண்டும்.

சான் மரினோ போன்ற சிறிய நாடுகள், குடிமக்களின் தேவைகளுக்கு அரசியல் நிர்வாகம் நெருக்கமாகச் செயல்படும் “நல்ல அரசியலுக்கான ஆய்வகமாக” விளங்க முடியும். பொதுநலம், சமூக நீதி, ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புணர்வு போன்ற கத்தோலிக்க சமூகக் கோட்பாடுகள் இந்தப் பணிக்கு வழிகாட்டியாக அமையலாம்.

இந்த “ஆய்வகத்தின்” முக்கிய இலக்கு “மனிதரைப் பராமரித்தல்” ஆகும். கருத்தரித்த தருணத்திலிருந்து இயற்கையான மரணம் வரை ஒவ்வொரு மனித உயிரையும் பாதுகாப்பது நமது கடமையாகும். தொழில்நுட்பம் மனிதர்களிடையேயான பரஸ்பர அக்கறைக்கு உதவ வேண்டும்; ஆனால் அது மனித சுதந்திரத்தையும் முடிவெடுக்கும் திறனையும் பறித்துவிடக் கூடாது.

துன்பப்படுவோரையும் சோதனையில் இருப்போரையும் வரவேற்கும் சான் மரினோவின் பாரம்பரியத்தை நான் பாராட்டுகிறேன். குறிப்பாக, உக்ரைன் மக்களுக்கு வழங்கிய ஆதரவையும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்கிறேன்.

ஆட்சியாளர்களே, குடிமக்களே, திருஅவைச் சமூகத்தினரே, ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் பொதுநலனையும் பாதுகாப்பதற்கான துணிச்சலான, தொலைநோக்குப் பார்வையுடைய உங்கள் முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு உங்களை ஊக்குவிக்கிறேன்.

சான் மரினோ குடியரசிற்கு வருகை தருவதால் எனக்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

22 ஆகஸ்ட் 2026, 15:44