“சந்திப்பும் உரையாடலும் அமைதிக்கான பாதைகள்” : திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஆகஸ்ட் 22, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ரிமினிக்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் ஒரு பகுதியாக ரிமினி கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்ற 47ஆவது “மக்களிடையேயான நட்புறவுக்கான சந்திப்பில்” பங்கேற்றவர்களை சந்தித்து அவர்களிடம் உரையாற்றினார். அச்சந்திப்பின்போது இடம்பெற்ற உரை
அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே,
ரிமினியில் உங்களோடு இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பல ஆண்டுகளாக அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் மற்றும் உரையாடலின் வழியாக இந்த “மக்களிடையே நட்புக்கான சந்திப்பு” நிகழ்வை நீங்கள் முன்னெடுத்து வருகிறீர்கள். இன்றைய உலகின் குழப்பமான சூழலில், இந்தச் சந்திப்பின் பெயரே ஒரு தீர்க்கதரிசனச் செய்தியாகத் திகழ்கிறது. அமைதியை உருவாக்குவது ஒருவரை ஒருவர் சந்திக்கவும், உரையாடவும் அஞ்சாத மனிதர்களே. வேறுபாடுகள், பிரிவுகள், மோதல்கள் அனைத்தையும் கடந்து, நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்பதை உணரும்போது, நம்மை ஒன்றிணைக்கும் ஆழமான உண்மையை அறிந்துகொள்கிறோம். முதலில் மனிதர்களாகவும், பின்னர் மக்களாகவும் ஒருவரை ஒருவர் கேட்டு, புரிந்துகொண்டு, நண்பர்களாக மாற அழைக்கப்படுகிறோம்.
திருஅவை, மனிதகுலத்தின் மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் தன்னுடையதாக ஏற்றுக்கொள்கிறது. எனவே, நீதி மற்றும் அமைதிக்காக ஏங்கும் இன்றைய உலகில், நமக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. கலை, இசை, இலக்கியம், அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட மனித ஆற்றலின் அனைத்து துறைகளிலும் நற்செய்தியின் ஒளியை வெளிப்படுத்த வேண்டும். இறைவனின் அன்பு ஒருபோதும் சத்தமிடுவதில்லை; ஆனால் அது உலகை இயக்குகிறது. “சூரியனையும் பிற விண்மீன்களையும் இயக்கும் அன்பு” மறைந்துவிடவில்லை. தீமையைத் தீமையால் வெல்ல முடியாது. சிலுவையில் வெளிப்பட்ட கிறிஸ்துவின் அன்பும் இரக்கமும் மட்டுமே மனிதகுலத்திற்கு மீட்பின் பாதையைத் திறக்கின்றன. எனவே, அதிகாரம், அகந்தை, இலாபத்தின் மீதான பேராசை, அழிவை ஏற்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றிலிருந்து நம் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துவோம். வறுமை, சமத்துவமின்மை, போர் மற்றும் சுற்றுச்சூழல் அழிவுக்கு வேராக இருக்கும் அநீதியான அதிகார அமைப்புகளை எதிர்கொள்ள துணிவுடன் செயல்படுவோம்.
அன்பிற்குரிய இளைஞர்களே, நீங்கள் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல் அல்ல; நம்பிக்கையின் அடையாளம். கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள உங்கள் நம்பிக்கையை அஞ்சாமல் வாழுங்கள். உங்கள் குழுக்கள் மற்றும் சமூகங்கள் உங்களை குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிடாமல், அனைத்து மக்களையும் சந்திப்பதற்கான பாலங்களாக அமையட்டும். குறிப்பாக ஏழைகளையும் துன்புறுவோரையும் தேடிச் செல்லுங்கள். அன்பில் ஒருபோதும் கட்டாயப்படுத்துதல், ஏமாற்றுதல் அல்லது வற்புறுத்துதல் இல்லை. உண்மையான அன்பு சுதந்திரத்திலும், உண்மையான சந்திப்பிலும், தன்னலமற்ற அர்ப்பணிப்பிலும் மட்டுமே மலர்கிறது.
அன்பிற்குரிய நண்பர்களே, திருஅவையை எப்போதும் அன்பு செய்யுங்கள். அதன் ஒற்றுமையைப் பாதுகாத்து, ஒருவருக்கொருவர் செவிசாய்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். திருஅவையின் ஒன்றிப்பயணம் என்பது ஒரு திட்டம் மட்டுமல்ல; அது இறைவனுக்குச் சொந்தமான மக்களாக இணைந்து வாழும் முறையாகும். தூய ஆவியார் நமக்கு ஒன்றிப்பின் பாதையை கற்றுத்தரட்டும். “சூரியனையும் பிற விண்மீன்களையும் இயக்கும் அந்த அன்பு” நம்மையும் தொடர்ந்து வழிநடத்தட்டும்.
நன்றி!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
