ஐரோப்பாவின் மிக உயரமான மரியன்னை திருவுருவச்சிலை போலந்தில் ஆசீர்வதிப்பு
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
போலந்தின் கொனோடோபியில் ஆகஸ்ட் 15, சனிக்கிழமையன்று 55 மீட்டருக்கும் (180 அடி) அதிகமான உயரம் கொண்ட 'இரக்கத்தின் அன்னை' திருவுருவச்சிலை ஆசீர்வதிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது. ஐரோப்பாவின் மிக உயரமான மரியன்னை திருவுருவச்சிலையாக உருவெடுத்துள்ள இந்நிகழ்வுக்கு வுவோக்லாவெக் மறைமாவட்ட ஆயர் கிரிஸ்டோஃப் வெட்கோவ்ஸ்கி தலைமை தாங்கினார். அப்போது உரையாற்றிய அவர், "இந்த நினைவுச்சின்னம் இறைவேண்டலைத் தூண்டுவதற்கும், மக்களின் இதயங்களைக் கடவுளை நோக்கி வழிநடத்துவதற்குமான ஒரு புனிதத் தலமாக விளங்கும்" என்று குறிப்பிட்டார்.
பல பத்தாண்டுகளாக திருப்பயணிகளை ஈர்த்து வரும் ஒரு தளமான, 'வியாகுல அன்னைக்கு' (Our Lady of Sorrows) அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிற்றாலயத்திற்கு அருகில் இந்த திருவுருவச்சிலை அமைந்துள்ளது. பல தலைமுறைகளின் இறைவேண்டல் மற்றும் திருப்பயணங்களால் இப்பகுதி புனிதமான இடமாக மாறியுள்ளது என்று ஆயர் வெட்கோவ்ஸ்கி அவர்கள் வலியுறுத்தினார்.
"இத்திருவுருவச்சிலையின் ஆன்மீக முக்கியத்துவத்தை விளக்கிய ஆயர், பார்சிலோனாவின் திருக்குடும்ப பேராலயத்தில் திருத்தந்தை ஆற்றிய உரையை மேற்கோள் காட்டியதுடன் 'மரியன்னையை நோக்கிச் செபிக்கும் மனித உள்ளங்கள் கடவுளையும் விண்ணகத்தையும் நோக்கி ஈர்க்கப்படுகின்றன என்றும், அன்னை மரியா தனது திறந்த கரங்களால் அனைவரையும் ஏற்று, தங்கள் கண்களை இறைவனை நோக்கி உயர்த்த அழைக்கிறார்' என்றும் குறிப்பிட்டார்."
வுவோக்லாவெக் மறைமாவட்டத்திற்கும் 'இறை இரக்கத்தின்' மீதான பக்திக்கும் உள்ள தொடர்பையும் எடுத்துரைத்த ஆயர் அவர்கள், இறை இரக்கத்தின் தூதரான புனித ஃபாஸ்டினா கோவல்ஸ்கா இந்த மறைமாவட்டத்தில் பிறந்து திருவருள்சாதனங்களைப் பெற்றவர் என்று எடுத்துக்காட்டினார்.
நன்றியின் காணிக்கையாக (votive offering) கிராஜினா மற்றும் உரோமன் கார்கோசிக் ஆகியோரால் இந்த நினைவுச்சின்னம் கட்டுவதற்கான முயற்சி தொடங்கப்பட்டு நிதியளிக்கப்பட்டது. இது தரையிலிருந்து 15 மீட்டருக்கும் மேலான உயரத்தில் ஒரு பார்வையாளர் மாடத்தைக் கொண்டுள்ளதுடன், ரியோ டி ஜெனிரோவின் புகழ்பெற்ற 'மீட்பரான கிறிஸ்து' (Christ the Redeemer) திருவுருவச் சிலையை விடவும் உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
