20ஆவது மத்தியதரைக் கடல் விளையாட்டுப் போட்டி 20ஆவது மத்தியதரைக் கடல் விளையாட்டுப் போட்டி 

மத்தியதரைக் கடல் விளையாட்டுப் போட்டிகள் அமைதியின் முன்னறிவிப்பாகட்டும் – திருத்தந்தை

தெற்கு இத்தாலியின் டரான்டோ நகரில் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெறவுள்ள 20ஆவது மத்தியதரைக் கடல் விளையாட்டுப் போட்டிகள், அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமாக அமைய வேண்டும் என திருத்தந்தை பதினான்காம் லியோ தெரிவித்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

வத்திக்கான் விளையாட்டு அமைப்பான Athletica Vaticana, மத்தியதரைக் கடல் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகி வரும் நிலையில், தெற்கு இத்தாலியில் நடைபெறும் இந்நிகழ்வு விளையாட்டை “அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் முன்னறிவிப்பாக” உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Athletica Vaticana அமைப்பைச் சேர்ந்த நான்கு வீரர்கள், ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 3 வரை தெற்கு இத்தாலியின் டரான்டோ நகரில் இடம்பெறும் 20ஆவது மத்தியதரைக் கடல் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 26 நாடுகளின் ஏறத்தாழ  4,000 வீரர்கள், 33 வகையான விளையாட்டுகளில் போட்டியிட உள்ளனர்.

திருத்தந்தையின் விளையாட்டு அமைப்பின் சார்பில் ஃபேப்ரிசியோ பெலோனி மற்றும் திசியானோ லூச்சரெல்லி ஆடவர் இரட்டையர் படெல் போட்டியிலும், டானியேலே ஃபொந்தானா வாள்வீச்சுப் போட்டியிலும், எமிலியானோ மொர்பிடெல்லி மிதிவண்டிப் போட்டியிலும் பங்கேற்கின்றனர்.

2026 மத்தியதரைக் கடல் விளையாட்டுப் போட்டிகள் உலகிற்கு அமைதி மற்றும் சந்திப்பின் வெளிப்படையான அடையாளமாக அமைய வேண்டும் என திருத்தந்தை அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 16, ஞாயிறன்று இடம்பெற்ற மூவேளை செப இறைவேண்டல் உரையின்போது “இந்த வாரம் டரான்டோவில் மத்தியதரைக் கடல் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகின்றன என்றும், இந்த விளையாட்டு நிகழ்வு, இப்பகுதி மக்களிடையேயும், உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடையேயும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் முன்னறிவிப்பாக அமைய வேண்டும்” என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

மேலும் போட்டி என்பது சந்திப்பாக மாறி, வீரர்கள் ஒருவரையொருவர் ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளும்போதுதான் விளையாட்டு அதன் ஆழமான பொருளைப் பெறுகிறது என்று திருத்தந்தை அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.

விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளில், டரான்டோ பேராயர் சிரோ மினியேரோ அவர்கள், நகரின் பேராலயத்தில் திருப்பலிக்குத் தலைமை தாங்க உள்ளார். கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத் துறையின் செயலர் ஆயர் பால் டைகி அவர்களும் இதில் பங்கேற்று, விளையாட்டு வீரர்களின் சிலுவையை வரவேற்க உள்ளார்.

வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின்படி, 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இருந்து அனைத்துலக விளையாட்டு நிகழ்வுகளில் வீரர்களுக்கு ஆன்மீகத் துணையாகத் திகழ்ந்து வரும் வீரர்களின் சிலுவை, இப்போட்டிகள் நடைபெறும் காலம் முழுவதும் பேராலயத்தில் வைக்கப்படும்.

போர் மற்றும் காலநிலை அவசரநிலையால் உலகம் துன்புறும் நிலையில், சமூக வேறுபாடுகளைத் தாண்டி சகோதரத்துவத்தை வளர்க்க விளையாட்டு ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று பேராயர் மினியேரோ அவர்கள் கூறினார். “எதிரெதிர் அணிகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும், வீரர்கள் தங்கள் பிறப்பிடம் அல்லது மதநம்பிக்கையைத் தாண்டி உண்மையான சகோதரத்துவ உணர்வுடன் செயல்படும் பெண்களும் ஆண்களுமே என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்பு நமக்கு உள்ளது” என்றார்.

கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் ஜோசே தொலென்தினோ தெ மெந்தோன்சா, Athletica Vaticana அமைப்பின் பங்கேற்பு சகோதரத்துவத்தின் முக்கியமான வெளிப்பாடு என்று கூறினார். விளையாட்டு வீரர்களின் சிலுவை, “சொற்கள் இன்றிய ஒரு செய்தியாக” இருந்து, வியர்வை மற்றும் துன்பத்தின் வழியாகச் சென்றாலும் ஒவ்வொரு மனித உயிரும் அன்புக்கும் மரியாதைக்கும் உரியது என்பதை எடுத்துரைக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

18 ஆகஸ்ட் 2026, 13:32