60ஆவது உலக அமைதி நாள்: அமைதிக்காக தொழில்நுட்பத்தை ஆயுதமற்றதாக்குவோம்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
2027 ஜனவரி 1ஆம் நாள் கொண்டாடப்படவுள்ள 60ஆவது உலக அமைதி நாளுக்கான கருப்பொருளாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள “தொழில்நுட்பத்தை ஆயுதமற்றதாக்கி, அமைதிக்குப் பணியாற்றுதல்: தடுப்பு நடவடிக்கைக்கான பொறுப்புணர்வாக அரசியல்” என்பதை ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கான திருப்பீடத்துறை அறிவித்துள்ளது.
அரசியல் துறையில் செயல்படுவோரின் தார்மீகப் பொறுப்பை எடுத்துரைக்கும் திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் பாதுகாத்து அமைதியை வளர்க்க அழைப்பு விடுக்கிறார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் போர் உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அவர் எச்சரிக்கிறார்.
தமது மகத்தான மானுடம் சுற்றுமடலில், “போரைத் தார்மீக ரீதியில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக மாற்றும் எந்தவொரு கணினி நெறிமுறையும் இல்லை” என்று வலியுறுத்தும் திருத்தந்தை, “செயற்கை நுண்ணறிவு ஆயுதமற்றதாக்கப்பட வேண்டும்” என்றும் அழைப்பு விடுக்கிறார்.
மேலும், அணு ஆயுதக் குறைப்பு அமைதிக்கும் மனித மாண்புக்கும் சேவை செய்வதைப் போல, செயற்கை நுண்ணறிவும் அனைவருக்கும் பொதுநலனுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று கூறுகிறார். தொழில்நுட்பம் தொடர்பான முடிவுகள் மனச்சாட்சியிலிருந்தும் பொறுப்புணர்விலிருந்தும் பிரிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.
செயற்கை நுண்ணறிவை பொதுநலனுக்காக வழிநடத்த நாடுகள், நிறுவனங்கள், தனிநபர்கள், தொழில்நுட்ப உருவாக்குநர்கள் மற்றும் அதன் விளைவுகளை எதிர்கொள்பவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்.
தொழில்நுட்பத்தை ஆயுதமற்றதாக்குவதுடன், நம்பிக்கை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித மாண்பின் அடிப்படையில் அமைதியை உருவாக்க வேண்டும் என்பதே திருத்தந்தையின் அழைப்பாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
