சென்ட்ரோ அஸ்தால்லியின் ஆதரவைப் பெறும் சில இளம் அகதிகள் சென்ட்ரோ அஸ்தால்லியின் ஆதரவைப் பெறும் சில இளம் அகதிகள்   (Centro Astalli )

திருத்தந்தையுடன் அன்பு விருந்தில் பங்கேற்கும் 13 அகதிகள்!

உரோமையின் சென்ட்ரோ அஸ்தால்லி (JRS) ஆதரவைப் பெறும் 13 அகதிகள், ஜூலை 11ஆம் தேதி காஸ்தல் கந்தோல்போவில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் திருத்தந்தையுடன் மதிய உணவைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூலை 11, சனிக்கிழமையன்று, காஸ்தல் கந்தோல்போவில் உள்ள திருத்தந்தையரின் கோடை இல்லத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில், உரோமையில் செயல்படும் சேசு சபையினரின் அகதிகள் சேவை மையமான சென்ட்ரோ அஸ்தால்லி (JRS)-யின் ஆதரவைப் பெறும் 13 அகதிகள், திருத்தந்தை அவர்களுடன் இணைந்து சிறப்பு நாளைக் கொண்டாட உள்ளனர். இந்நிகழ்வில் போர்கோ லவ்தாத்தோ சி வளாகப் பார்வையும், திருத்தந்தையுடன் பகிர்ந்து கொள்ளும் மதிய உணவும் இடம்பெறுகின்றன.

இந்த 13 பேரும் தங்கள் சொந்த நாடுகளில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து தப்பி இத்தாலியில் தஞ்சமடைந்தவர்கள். இவர்களில் மூன்று குடும்பங்களும், எல் சால்வடோர் மற்றும் பெரு நாடுகளைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்களும் இடம்பெறுகின்றனர். அனைவருக்கும் அனைத்துலகப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த இரண்டு இளம் பெண்கள், "ஜன்னல்கள்: அகதிகளின் கதைகள்" என்ற கல்வித் திட்டத்திலும் பங்கேற்று, தங்கள் இடம்பெயர்வு, நம்பிக்கை மற்றும் மீண்டெழும் வாழ்க்கைப் பயணத்தை பள்ளி மாணவர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

சென்ட்ரோ அஸ்தால்லி, அகதிகளுக்கு வீட்டு வசதி, இத்தாலிய மொழிப் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் சுயமாக வாழ்வதற்கான வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி, அவர்கள் சமூகத்தில் முழுமையாக இணைவதற்கு துணைநிற்கிறது.

சென்ட்ரோ அஸ்தால்லியின் தகவல் தொடர்புப் பொறுப்பாளர் பிரான்செஸ்கா குவோமோ அவர்கள்,  திருத்தந்தையரின் பிறரன்புப்பணிக்கான திருப்பீடத்துறையிடமிருந்து வந்த இந்த அழைப்பு, அகதிகளை அன்போடும் மரியாதையோடும் வரவேற்கும் திருஅவையின் அர்த்தமுள்ள அடையாளம் என்று தெரிவித்தார்.

இந்த அனுபவம் அவர்கள் உதவி தேவைப்படுபவர்களாக மட்டுமல்ல, மனித மாண்பும் மதிப்பும் கொண்டவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் என்ற உணர்வை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

11 ஜூலை 2026, 07:58