தேடுதல்

ஆல்பானோ லாசியாலே ஏழை, எளியோருடன் திருத்தந்தை அன்பு விருந்து ஆல்பானோ லாசியாலே ஏழை, எளியோருடன் திருத்தந்தை அன்பு விருந்து  (ANSA)

திருத்தந்தையுடன் மதிய உணவு: 200 ஏழை, எளியோருக்கு திருத்தந்தையின் அன்பு விருந்து!

ஜூலை 11, சனிக்கிழமையன்று, காஸ்தல் கந்தோல்போவில் நடைபெறும் "திருத்தந்தையுடன் மதிய உணவு" நிகழ்வில், 35 சிறுவர்கள் உட்பட 200 ஏழை, எளியோர், அகதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கின்றனர்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூலை 11, சனிக்கிழமையன்று, காஸ்தல் கந்தோல்போவின் திருத்தந்தையரின் தோட்டத்தில் "திருத்தந்தையுடன் மதிய உணவு" என்ற சிறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. திருஅவையின் நம்பிக்கை, வரவேற்பு மற்றும் அன்பை வெளிப்படுத்தும் இந்நிகழ்வில், 35 சிறுவர்கள் உட்பட 200 ஏழை, எளியோர் பங்கேற்கின்றனர்.

லவ்தாத்தோ சி உயர்கல்வி மையம், உரோமை மறைமாவட்டம் மற்றும் பல தொண்டு அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன. அகதிகள், குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் லவ்தாத்தோ சி கிராமம் வழங்கிய பயிற்சித் திட்டங்களை நிறைவு செய்தவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சி, லவ்தாத்தோ சி உயர்கல்வி மையத்தின் தலைமை இயக்குநர் கர்தினால் ஃபாபியோ பாஜியோ அவர்கள் தலைமையில் நடைபெறும் திருப்பலியுடன் தொடங்கும். அந்தத் திருப்பலியில், பிறரன்புப் பணிக்கான திருப்பீடத் துறையின் செயலரான பேராயர் லூயிஸ் மரின் டி சான் மார்டின் அவர்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றுவார்.

"400 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இந்த இடத்தை உலக மக்களுக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திறந்து வைத்தார். இன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அதை இன்னும் பரந்த மனதுடன் அனைவருக்கும் திறந்துள்ளார். தற்போது, சமுதாயத்தின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட இந்த ஏழை, எளிய மக்களே இவ்விடத்தின் சிறப்பு விருந்தினர்களாக அன்புடன் வரவேற்கப்படுகின்றனர்" என்று லவ்தாத்தோ சி உயர்கல்வி மையத்தின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் டோனத்தெல்லா பரிசி அவர்கள் தெரிவித்தார்.

"தேவாலயம் என்பது அனைவரையும் அரவணைக்கும் குடும்பம்" என்ற உண்மையை வெளிப்படுத்தும் இந்நிகழ்வு, உதவி தேவைப்படுபவர்கள் கருணையைப் பெறுபவர்கள் மட்டுமல்ல; தங்களின் நம்பிக்கை, மனஉறுதி மற்றும் வாழ்வுச் சாட்சியத்தின் வழியாக திருஅவையையே செழுமைப்படுத்துபவர்களும் ஆவர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

லவ்தாத்தோ சி மற்றும் மகத்தான மானுடம் போன்ற ஆவணங்களின் வழிகாட்டுதலால் ஊக்கமளிக்கப்படும் இந்த முயற்சி, மனித ஒற்றுமையை வளர்த்தல், படைப்புலகைப் பேணுதல் மற்றும் "படைப்பின் ஒரு அங்கமாக" பொறுப்புணர்வுடன் வாழும் வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

11 ஜூலை 2026, 07:36