கோடைக்காலத்தில் துன்புறுவோரை மறந்துவிடாதீர்கள்: திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
கோடைக்காலத்தில் நோயாளிகள், முதியவர்கள் மற்றும் துன்புறுவோரை மறந்துவிடாமல், அமைதி மற்றும் இரக்கத்தின் நற்செய்தியை வாழ்வில் நடைமுறைப்படுத்துமாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தாலியில் வெளியாகும் பியாச்சா சான் பியேத்ரோ இதழின் ஜூலை–ஆகஸ்ட் மாத வெளியீட்டில், உரோமையைச் சேர்ந்த மௌரிசியோ என்பவர் எழுதிய கடிதத்திற்குப் பதிலளித்த திருத்தந்தை, கோடைக்காலத்தை ஓய்வுக்கான காலமாக மட்டுமன்றி, இறைநம்பிக்கையை ஆழப்படுத்தும் ஆன்மிக வாய்ப்பாகவும் பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய உலகம் போர்களும் நிலையற்ற சூழல்களும் மட்டுமல்லாமல், வேகமாக இயங்கினாலும் ஆழமற்றதும் கவனச்சிதறலுடனும் இருப்பதாக தனது கடிதத்தில் மௌரிசியோ குறிப்பிட்டுள்ளார். மேலும், பிறர்மீது பொறுப்புணர்வும் அன்பும் கொண்ட செயல்களாக வெளிப்படும் உண்மையான ஆன்மிக வாழ்வை எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம் என்று அவர் திருத்தந்தையிடம் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த திருத்தந்தை, முதலில் பல்வேறு துயரங்களால் ஓய்வெடுக்க முடியாதவர்களை நினைவுகூருமாறும், நோயாளிகள், நம்பிக்கையை இழந்தவர்கள், அன்புக்குரியவர்களை இழந்து துயருறுபவர்கள், போர், வெறுப்பு, தீவிரவாதம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், நம்பிக்கைக்காகவும் நீதிக்காகவும் துன்புறுத்தப்படுபவர்கள், சிறைவாசிகள், வேலை அல்லது வீட்டை இழந்தவர்கள், மனிதாபிமான வரவேற்பைப் பெறாத புலம்பெயர்ந்தோர் ஆகியோரை நினைவில் கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
விடுமுறைகள் அனைவருக்கும் வேலை மற்றும் கவலைகளிலிருந்து ஓய்வு பெற்று, உண்மையான நட்புறவையும் இறையாட்சியின் மகிழ்ச்சியையும் முன்கூட்டியே அனுபவிக்கும் காலமாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இறைநம்பிக்கையை வலுப்படுத்த விரும்புவோர், கோடைக்காலத்தையும் அமைதி மற்றும் இரக்கத்தின் நற்செய்தியை வாழ்வில் செயல்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
குடும்பங்கள், பெற்றோர், பிள்ளைகள், இளைஞர்கள் மற்றும் முதியோர் அனைவருக்கும், இந்தக் கோடைக்காலம் பயனுள்ள சமூக மற்றும் ஆன்மிக அனுபவங்களையும், திருஅவையிலும் சமூகத்திலும் தங்களது பணியை ஆழப்படுத்தும் வாய்ப்பையும் வழங்கட்டும் என்று அவர் வாழ்த்தினார்.
மேலும், நோயாளிகள் உறவினர்கள் மற்றும் தன்னார்வலர்களின் அன்பான உடனிருப்பை இழக்கக்கூடாது என்றும், குடும்பங்கள் தங்கள் முதியோரை தனிமையில் விட்டுவிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
தன்னார்வலர்களை ஊக்குவித்த திருத்தந்தை, துன்புறுவோரிடம் மனிதநேயத்தையும் நம்பிக்கையையும் கொண்டு செல்லுங்கள்; அப்போது இறையருளின் கனிகளை அனுபவிப்பீர்கள்; அன்பும் மகிழ்ச்சியும் உங்கள் வாழ்வை நிரப்பும் என்று தெரிவித்தார்.
ஏழைகளுக்குச் சேவை செய்யும்போது, அது கிறிஸ்துவுக்கே செய்யும் சேவை என்பதை உணர்ந்து, நற்செய்தி எளிமைக்கு சான்று பகருமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
அளவுக்கு மீறிய நுகர்வு, வீண்செலவு, பொருளாசை மற்றும் நுகர்வுவாதத்தைத் தவிர்த்து, எளிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், செல்வக் குவிப்பு நற்செய்தி அறிவிப்புக்கு தடையாக அமைகிறது என்றும் திருத்தந்தை எச்சரித்தார்.
இறுதியாக, நமது கோடைக்கால விடுமுறைகள் கிறிஸ்தவ வாழ்வியலுக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும் என்றும், இறைவனின் அன்பும் அருளும் நாள்தோறும் நம்மை வந்தடைகின்றன என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, போரால் அச்சுறுத்தப்படும் உலகிற்கு எதிர்காலத்தை அளிக்கக்கூடிய மனிதநேயமும் அமைதியும் என்ற விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை பாதுகாக்க நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும் என்று கூறி திருத்தந்தை கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
