தேடுதல்

ஆசியத் திருஅவை அன்பிரக்கம், உரையாடலின் பாலங்களை அமைக்க வேண்டும் – திருத்தந்தை

FABC 12-வது நிறைவிறுதிப் பேரவைக்காக அனுப்பிய காணொளிச் செய்தியில், திருத்தந்தை அவர்கள், ஆசியக் கத்தோலிக்கத் திருஅவை கிறிஸ்துவுடனான ஒன்றிப்பை ஆழப்படுத்தி, அன்பிரக்கம், உரையாடல் மற்றும் தோழமையின் பாலங்களை அமைப்பதன் மூலம் கடவுளின் உடனிருப்பின் அடையாளமாகத் திகழ வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஆசியாவில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை கிறிஸ்துவுடனான தனது ஒன்றிப்பை ஆழப்படுத்தவும், ஆசியக் கண்டம் முழுவதும் அன்பிரக்கம், உரையாடல் மற்றும் தோழமையின் பாலங்களை அமைப்பதன் மூலம் கடவுளின் உடனிருப்பின் வலுவான அடையாளமாக மாறவும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூலை 20 முதல் 26 வரை இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இடம்பெறும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12-வது நிறைவிறுதிப் பேரவையில்  பங்கேற்றவர்களுக்கு அனுப்பிய காணொளிச் செய்தியில், இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், ஆசியத் திருஅவையின் எதிர்காலம் குறித்து சிந்திக்கும் ஆயர்களுக்குத் தனது செபங்களையும் ஆன்மீக நெருக்கத்தையும் உறுதியளித்தார்.

இந்தப் பேரவையின் "இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்" (யோவான் 1:50) என்ற கருப்பொருளை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவே கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலான தனித்துவமான தொடர்பாளரும், கடவுளோடும் ஒருவரோடொருவர் கொள்ளும் ஒன்றிப்பின் அடித்தளமுமாவார் என்று வலியுறுத்தினார்.

தனது 'மகத்தான மானுடம்' (Magnifica humanitas) என்ற திருத்தூது மடலையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்தவ ஒருமைப்பாடு கிறிஸ்துவின் மறைபொருளில் வேரூன்றி உள்ளது என்றும், அருள்சாதனங்கள், குறிப்பாக நற்கருணை மூலம் அது ஊட்டமளிக்கப்படுகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

நற்கருணையிலிருந்து வெளிப்படும் அன்பிரக்கத்தின் மூலம் திருஅவையின் ஒற்றுமையை வலுப்படுத்தி, தங்கள் உள்ளூர் திருஅவைகளில் நற்கருணை பக்தியை வளர்க்குமாறு திருத்தந்தை ஆயர்களை வலியுறுத்தினார்.

இத்தகைய ஒற்றுமை உள்ளூர் திருஅவைகளுக்குள்ளும் அவற்றுக்கு இடையேயும் உள்ள தோழமையை வலுப்படுத்தும் என்றும், இது ஆசியா முழுவதும் கடவுளின் பிரசன்னத்தின் தெளிவான அடையாளங்களாகவும் சிறந்த பாலம் அமைப்பவர்களாகவும் அவற்றை மாற்றும் என்றும் அவர் கூறினார்.

இறுதியாக, திருஅவையின் அன்னையான தூய கன்னி மரியாவின் பரிந்துரைக்கு இந்தப் பேரவையை ஒப்படைத்து, கடவுளின் ஞானம், தைரியம் மற்றும் அவரது ஆசீரை வேண்டி தனது காணொளிச் செய்தியை திருத்தந்தை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

25 ஜூலை 2026, 12:54