தேடுதல்

"அல்லேலூயா" (Halleluya) கத்தோலிக்க இசை விழாவை முன்னிட்டு அனுப்பிய காணொளிச் செய்தியில் திருத்தந்தை "அல்லேலூயா" (Halleluya) கத்தோலிக்க இசை விழாவை முன்னிட்டு அனுப்பிய காணொளிச் செய்தியில் திருத்தந்தை  ( POPE YOUTH)

இளமையை நற்செய்தி அறிவிப்பின் ஆற்றலாக மாற்றுங்கள்: பிரேசில் இளைஞர்களுக்கு திருத்தந்தை அழைப்பு

பிரேசிலில் இடம் பெற்ற "அல்லேலூயா" கத்தோலிக்க இசை விழாவை முன்னிட்டு அனுப்பிய காணொளிச் செய்தியில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இளைஞர்கள் தங்களின் இளமையை நற்செய்தி அறிவிப்பின் ஆற்றலாக மாற்றி, இயேசுவை உலகிற்கு அறிவிக்க அழைப்பு விடுத்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

இளைஞர்கள் தங்களின் இளமையை நற்செய்தி அறிவிப்பின் ஆற்றலாக மாற்றுமாறும், அதன் வழியாக மனிதர்களின் ஆழமான ஏக்கங்களுக்கு பதிலளித்து, ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தும் இயேசுவை பிறருக்குக் கொண்டு சேர்க்குமாறும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்தார்.

பிரேசிலின் வடகிழக்கு நகரமான போர்தலேசாவில், ஜூலை 22 முதல் 26 வரை நடைபெற்ற "அல்லேலூயா" (Halleluya) கத்தோலிக்க இசை விழாவை முன்னிட்டு அனுப்பிய காணொளிச் செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

தூய ஆவியார்  இளைஞர்களின் இதயங்களில் அதிகமான அன்பை மீண்டும் பற்றவைத்து, அவர்களின் இளமையை நற்செய்திப் பணிக்கான வலிமையாக மாற்றட்டும் என்றும், ஒவ்வொருவரும் புனித அகுஸ்தினார் குறிப்பிட்டுள்ள "இறைநகரை" கட்டியெழுப்பும் உயிருள்ள கற்களாக மாற வேண்டும் என்றும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இளைஞர்களின் உற்சாகம் அனைவரிடமும் புதிய மறைப்பணி உணர்வைத் தூண்டுகிறது என்றும்,  "கிறிஸ்து இல்லாத வாழ்க்கை அருளற்ற வாழ்க்கை" என்பதை துணிவுடன் அறிவிக்குமாறும் அவர்களுக்கு வலியுறுத்தினார்.

மறைப்பணி மாநாடுகள் மற்றும் இளையோர் சந்திப்புகளில் பெறப்படும் ஆன்மிக உற்சாகம் காலப்போக்கில் குறையலாம் என்று கூறிய திருத்தந்தை, அந்த நம்பிக்கையின் தீபத்தை அணையாமல் காக்க செப வாழ்க்கை இன்றியமையாதது என்றும், கிறிஸ்துவுக்கு அஞ்சத் தேவையில்லை; அவர் மனிதரிடமிருந்து எதையும் பறிப்பதில்லை, மாறாக வாழ்வின் நிறைவை அருளுகிறார்" என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.

இறுதியாக, இணையத்தின் வழியாக நற்செய்தியைப் பரப்பிய புனித கார்லோ அக்குட்டிஸை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, சமூக ஊடகங்களையும் செயற்கை நுண்ணறிவையும் பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் பயன்படுத்துமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தி, நிலையற்ற தோற்றங்களும் மாயைகளும் உண்மையான மதிப்புகளை மறைக்க அனுமதிக்காமல், தொழில்நுட்பத்தை நன்மைக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டு தனது காணொளிச் செய்தியை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

27 ஜூலை 2026, 14:23